தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

உண்மைகளைக் கண்டறியுமா ஐநா விசாரணைக் குழு? !

இலங்கையில் போரின் இறுதி ஏழு ஆண்டுகளிலும் நிகழ்ந்த மீறல்கள் குறித்த ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
12 பேர் கொண்ட ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவை வழிநடத்தும், அதற்கு ஆலோசனை வழங்கும் மூன்று நிபுணர்களின் விபரங்களை, கடந்த 25ம் திகதி ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்டிருந்தார்.
முன்னதாக அவர் இம்மாத தொடக்கத்திலேயே ஐநா விசாரணைக் குழுவின் இணைப்பாளராக, பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமை விசாரணையாளர் சன்ட்ரா பெய்டாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தார்.
எனினும், வெளியில் இருந்து இந்த விசாரணைகளைக் கண்காணிக்கும், வழிநடத்தும் நிபுணர்களைத் தெரிவு செய்வதில் ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சற்றுத் திணறிப் போய்விட்டதாகத் தெரிகிறது.
ஏனென்றால், கடந்த 10ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் 26வது அமர்வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது, இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார் நவநீதம்பிள்ளை.
ஆனால் இரண்டு வாரங்கள் கழித்தே, இந்த விசாரணைக் குழுவை வழிநடத்தும், அதற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்களின் பெயர்களை வெளியிட்டார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25வது அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக உருவாக்கப்பட்ட இந்த விசாரணைக் குழுவுக்கான நிபுணர்கள் சரியாக மூன்று மாதங்கள் கழித்தே நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடனோ, அடுத்த சில நாட்களிலோ இந்த விசாரணைக் குழுவை நவநீதம்பிள்ளை நியமித்து விடுவார் என்றே பெரும்பாலானோர் எதிர்பார்த்திருந்தனர்.
இலங்கை அரசாங்கமும் அவ்வாறே கருதியிருந்தது. ஏனென்றால் விசாரணைக்கான எல்லாத் தயார்ப்படுத்தல்களையும் அவர் மேற்கொண்ட நிலையில் தான், அமெரிக்கா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதாகவே கருதப்பட்டது.
அவ்வாறானதொரு நிலை இருந்திருக்குமேயானால், அது நிச்சயம் இலங்கையைப் பழிவாங்குவதற்கான திட்டமிட்ட நகர்வு என்று துணிந்து கூறலாம்.
ஆனால், அத்தகைய எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக தகர்த்துவிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பின்னர், விசாரணைக் குழுவுக்கான மூன்று நிபுணர்களை அறிவித்துள்ளார் நவநீதம்பிள்ளை.
இந்தக் காலதாமதம், இந்த முயற்சியில் உள்ள சவால்களை தெளிவாகவே எடுத்துக்காட்டியுள்ளது.
பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தானின் சட்ட நிபுணர் அஸ்மா ஜகாங்கீர் ஆகியோரையே நவநீதம்பிள்ளை இந்த நிபுணர் குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்துள்ளார்.
இந்த நிபுணர் குழுவின் நியமனம் தொடர்பாக நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு சவால்மிக்க விசாரணை என்றும் அதற்கு உதவ முன்வந்த மதிப்புக்குரிய நிபுணர்களைப் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை மிகவும் சவால் மிக்கது என்பதால் தான், நவநீதம்பிள்ளையால் அதற்குத் தேவையான நிபுணர்களை உடனடியாக ஒன்று திரட்ட முடியாது போனது.
இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிவித்திருந்த சூழலில், பல்வேறு மதிப்புக்குரிய நிபுணர்களும் அதில் பங்களிப்புச் செய்யப் பின்னடித்திருந்தனர்.
அவர்களுள், ஐநா வின் முன்னாள் பொதுச்செயலர் கொபி அனானும் அடக்கம். முன்னதாக நவநீதம்பிள்ளை இரண்டு வெளியக நிபுணர்களை மட்டுமே நியமிக்கத் திட்டமிட்டிருந்தார்.
அத்துடன் எவ்வாறாயினும், ஒருவர் ஆபிரிக்க அல்லது ஆசிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.
அதற்குக் காரணம் இது மேற்கு நாட்டவர்களால் திணிக்கப்பட்ட ஒரு விசாரணைத்கொபி அனான் விசாரணைக் குழுவில் இடம்பெற விரும்பாத நிலையில், சியூசிலாந்தில் முன்னர் நீதிபதியாகவும், ஆளுநராகவும் இருந்த டேம் சில்வியா கார்ட்ரைட் மீது நவநீதம்பிள்ளையின் கவனம் திரும்பியது.
70 வயதான அவர், கம்போடியாவில், கெமரூஜ் ஆட்சியின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக, அந்த நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைத் தீர்ப்பாயத்தின் இரண்டு நீதிபதிகளில் ஒருவராகப் பணியாற்றி வந்தார். அவர், பாலினப் பாகுபாடுகளுக்கு எதிரான விசாரணை நிபுணராகவும் விளங்கியவர்.
ஐநா விசாரணைக் குழுவுக்கு உதவ அவர் இணக்கம் தெரிவித்ததையடுத்து, அவரது நியமனம் முதலில் உறுதியானது.
கம்போடிய போர்க்குற்ற விசாரணைத் தீர்ப்பாய நீதிபதி பதவியில் இருந்து விலகியே அவர், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் இடம்பெறப் போகிறார்.
இதையடுத்து இரண்டாவது நிபுணரை எப்படியாவது, ஆசியா அல்லது ஆபிரிக்காவில் இருந்து தெரிவு செய்ய நவநீதம்பிள்ளை முயற்சித்தார்.
அதேவேளை, நிபுணர் குழுவின் மதிப்பையும் தரத்தையும் உயர்த்தும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒருவரையும் இணைத்துக் கொளவது மிகவும் பொருத்தமானது என்று உணர்ந்திருந்தார். நவநீதம்பிள்ளை.
ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இருந்து பொருத்தமானதொரு நிபுணரைத் தெரிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டிருந்த சூழலில், இரண்டாவது நிபுணராக, பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்டி அதிசாரியைத் தெரிவு செய்தார் அவர்.
மார்டி அதிசாரி அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். 77 வயதான அதிசாரி, 1994ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டு வரை பின்லாந்தின் ஜனாதிபதியாகப் பணியாற்றியவர்.
கொசோவோவாவுக்கான ஐநாவின் சிறப்புத் தூதராக செயற்பட்ட அவர், நீண்ட காலமாக நிலவி வந்த கொசோவோவா பிரச்சினைக்குத் தீர்வு கண்“டு, சேர்பியாவிடம் இருந்து கொசோவோவாவுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவர்.
அதற்காகவும், மூன்று தசாப்தங்களாக பல்வேறு சர்வதேச பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவியதற்காகவும், அவருக்கு நோபல் பரிசு 2008ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இவர் நமீபியா, இந்தோனேசியாவின் ஆசே, கொசோவோவா, ஈராக் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட்டு தீர்வு காண உதவியவர்.
பின்லாந்து இராணுவத்தில் கப்டனாகப் பணியாறிறியவர். பினிஸ் மொழியுடன், சுவீடிஷ், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜேர்“மன் ஆகிய மொழிகளிலும் பேசும் திறன் பெற்றவர்.
நமீபியாவுக்கான ஐநாவின் சிறப்புப் பிரதிநிதியாகச் செயலாற்றிய அதிகாரி, அங்கு அமைதியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர். 1989ம் ஆண்டு நமீபியாவில் நடந்த சுதந்திரத் தேர்தலுக்குப் பின்னர், அதிசாரிக்கு நமீபியாவின் கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்டது.
வட அயர்லாந்து சமாதானப் பேச்சுக்களின் ஒரு கட்டமாக ஐஆர்ஏ யின் ஆயுதக் கிடங்குகளை ஆய்வு செய்யும் பணியில், சிறில் ரமபோசாவுடன் இணைந்து பங்கேற்றவர் அதிசாரி.
2005ம் ஆண்டு ஆசே சுதந்திர இயக்கத்துக்கும், இந்தோனேசிய அரசுக்குமிடையில், அமைதிப் பேச்சுக்களுக்குத் தலைமை தாங்கிய அதிசாரி, வெற்றிகரமான அமைதி உடன்பாட்டுக்கு வழிவகுத்தவர். பின்னர், கொசோவோவா பிரச்சினைக்குத் தீர்வு காணவும் உதவியிருந்தார்.
உலகின் மதிப்பு மிக்க பல்வேறு அமைதிக்கான அறக்கட்டளைகள், அரசசார்பற்ற நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் அதிசாரிக்கு உலகின் பெருமளவு நாடுகள் சிறப்பு கௌரவ விருதுகளை வழங்கியுள்ளன.
இந்தளவுக்குப் புகழ்பெற்ற ஒருவரை, இலங்கையில் நடந்த மீறல்கள் குறித்த விசாரணைக்குத் தேடிப்பிடித்து கொண்டு வந்து சேர்த்துள்ளார் நவநீதம்பிள்ளை.
எந்தவகையிலும் முன்னெப்போதும் இலங்கை விவகாரங்களில் தொடர்புபடாதவர்களாகத் தேடிப் பார்த்து இந்த விசாரணைக் குழுவுக்கான உறுப்பினர்களை நவநீதம்பிள்ளை தெரிவு செய்துள்ள நிலையில், சிங்கள ஊடகம் ஒன்று அதிசாரியைப் புலிகளின் ஆதரவாளர் என்று கூறியுள்ளது.
ஏனென்றால், அவர் போரை நிறுத்த முயன்றவராம். இதுதான் அவர் புலி ஆதரவாளரானதற்கான காரணம்.
போரை நிறுத்த முயன்றவர்கள் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதே அரச தரப்பினதும் இதுபோன்ற சிங்கள ஊடகங்களினதும் வாதமாக உள்ளது.
வேறு வகையில் குற்றம் சாட்ட முடியாததால், போரை நிறுத்துமாறு வலியுறுத்தியவர் புலி ஆதரவாளராகத் தான் இருக்க வேண்டும் என்று கணக்குப் போட்டுள்ளது சிங்கள ஊடகம். அதேவேளை, இரண்டு வெளியக நிபுணர்களைத் தெரிவு செய்யவிருந்த நவநீதம்பிள்ளை மூன்றாவது நிபுணரைத் தெரிவு செய்ய எடுத்த முடிவுக்கு காரணம், அண்மையில் அளுத்கமவில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தான் என்று கருதப்படுகிறது.
ஏனென்றால், மூன்றாவது நிபுணராக அவர் தெரிவு செய்துள்ள அஸ்மா ஜகாங்கீர், ஒரு மத சிறுபான்மையினர் விவகார நிபுணராவார்.
இவர் மத சுதந்திரம் தொடர்பான ஐநா அறிக்கையாளராக 2004ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை பணியாற்றியவர். அப்போது இலங்கையிலும் வந்து, மத சுதந்திரம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
அதற்கு முன்னதாக, நீதிக்குப் புறம்பான படுகொலைகள், திட்டமிட்ட படுகொலைகள் குறித்து ஐநா அறிக்கையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பாகிஸ்தான் உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத் தலைவராகவும் மனித உரிமை ஆணையத் தலைவராகவும் செயற்பட்டவர்.
சிறந்த சட்ட நிபுணரான இவரைத் தெரிவு செய்ததன் மூலம், ஆசியாவைச் சேர்ந்த ஒருவரும், இந்தக் குழுவில் இடம்பெறும் வாய்ப்பை அளித்தார் நவநீதம்பிள்ளை.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னரே இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
ஆக, இந்த வன்முறைகள், ஐநாவின் விசாரணைப் பொறிமுறையை இன்னும் வலிமையானதாக்க உதவியுள்ளது.
அத்துடன், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சிறப்பு நிபுணர்களின் உதவியுடன் செயற்படும் விசாரணைக் குழு, அடுத்த ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழு வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், சுதந்திரமானதாகவும், நம்பகரமனதாகவும் இருக்க வேண்டும் என்பது நவநீதம்பிள்ளையின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உயர் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களைக் கொண்டதாக விசாரணைக் குழுவை நவநீதம்பிள்ளை அமைத்துள்ள போதும், இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்புத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு.
இதன் மூலம், 2010ம் ஆண்டு ஐநா பொதுச்செயலர் நியமித்த மர்சூகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் விசாரணையைப் புறக்கணித்து இழைத்த அதே தவறை மீண்டும் இழைத்துள்ளது அரசாங்கம்.
இதற்காக அரசாங்கமும், சிங்கள மக்களும் இப்போது வேண்டுமானால் பெருமை கொள்ளலாம். ஆனால், பின்னொரு காலத்தில், அவர்கள் அதற்காக வருத்தம் கொள்ளக்கூடும்.
ஹரிகரன்
 http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmv2.html

Geen opmerkingen:

Een reactie posten