பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின், அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது செய்ய முடியாது? இவ்வாறு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அளுத்கம, தர்கா நகர, பேருவளை, பன்னல உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:-
“கடந்த 15ஆம் திகதி அளுத்கம, தர்கா நகர் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கையை 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை போன்றதொரு கறைபடிந்த கறுப்பு ஜூனாக நோக்க வேண்டியுள்ளது. அந்தளவுக்கு தர்கா நகரில் இன வெறியாட்டம் நடந்தேறியுள்ளது. ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் நாட்டில் இல்லாத வேளையில் இந்த வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீண்ட கால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதியான சூழ்நிலையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாறான இனவெறித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் நாட்டை மீண்டும் ஆபத்தான நிலைக்குள் தள்ளிவிட சிலர் முயற்சிக் கின்றனர். தர்கா நகர் மீதான தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டே அரங்கேற்றப் பட்டிருக்கின்றன.
முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசம் ஒன்றை ஊடறுத்து பேரணி சென்றது மாத்திரமல்லாமல் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து பேரணி மீது கல்வீச்சு நடத்தும் அளவுக்கு அவர்களது திட்டமிட்டுள்ளனர். இதற்கு பொதுபல சேனா மாத்திரமல்ல சிங்கள ராவய போன்ற பௌத்த தீவிரவாத இயக்கங்களும் முன்னிலை வகித்துள்ளன. இவர்களின் இன வெறித் தாக்குதல்கள் அளுத்கம, தர்கா நகர், பேருவளை போன்றவற்றுடன் நின்று விடவில்லை.
பன்னல, பாணந்துறை என்று நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு செல்கின்றன. காரணம், இவர்கள் மீது இன்னும் சட்டம் சரியான முறையில் பிரயோகிக்கப்படவில்லை என்பதுதான். பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின் அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது சேது சட்டத்தின் முன் நிறுத்த முடியாது என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
இது விடயத்தில் எமது முஸ்லிம் காங்கிரஸும் தலைமைத்துவமும் மிகவும் உறுதியுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொது பல சேனா உள்ளிட்ட தீவிர அமைப்புகள் மீதும் ஞானசார தேரர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை எமது கட்சி மேற்கொண்டுள்ளது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.- என்றார்.
|
Geen opmerkingen:
Een reactie posten