மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை மீட்க சோதனை நடத்துமாறு ராஜித கோரிக்கை - ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு!- பொலிஸ்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 11:50.47 PM GMT ]
பேருவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட பகுதிகளின் விடுகள் சோதனையிடப்பட வேண்டும்.
வீடுகளில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, அவற்றை மீட்பதற்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் கூட்டாக இணைந்து விசாரணை நடத்த வேண்டும்.
சட்டம் ஒழுங்கு இல்லாத நாடாக இந்த நாட்டை மாற்ற இடமளிக்க முடியாது. சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் உரிமையில்லை.
மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். 152 வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.
பிரதேச சபை நிர்வாகத்துடன் இணைந்து ஆயுதங்களை மீட்டு குற்றவாளிகளை கைது செய்யுமாறு அமைச்சர் படையினருக்கும், பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறியதாவது,
சட்டத்தை சரியாக அமுல்படுத்தத் தவறியதன் காரணமாகவே இத்தனை அழிவுகள் ஏற்பட்டுள்ளன. பாதுகாப்பு தரப்பினர் தமது பணியில் விட்ட அலட்சியம் காரணமாக சிறிய சம்பவம் பெரும் மோதலாக மாறியுள்ளது.
காவியுடை அணிந்திருப்பதற்காக அவருக்கு மட்டும் ஒரு சட்டம் என்று இந்நாட்டில் இல்லை. நாம் அழிவுற்ற சொத்துக்களை மீள் புனரமைப்பது பற்றி இங்கு பேசுகிறோம். பாதுகாப்பு தரப்பினர் அன்று சட்டத்தை சரியாக அமுல் நடத்தியிருந்தால் இந்தக் கூட்டம் இன்று நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
அளுத்கமை தர்கா நகர் பேருவளை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் அவர்களுக்கு மட்டுமல்லாது என் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இனவாதிகளின் நோக்கம் இதில் வெற்றி கண்டுள்ளது.
வீடுகளில் உள்ள நகை, பணம், பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னரே வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் தீ வைத்து கொளுத்தியும், தாக்கியும் உள்ளனர்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளித்த பெரும்பாலான அரபு முஸ்லிம் நாடுகள் இச்சம்பவத்தால் எம் மீது சந்தேக பார்வை கொள்ளும் நிலையை தோற்றுவித்துள்ளன.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் அரபு - முஸ்லிம் நாடுகள் கைகொடுத்துக் கொண்டிருக்கின்றன. இத் துர்ப்பாக்கிய சம்பவம் அந்த உதவிகளிலும் மண்ணைப் போட்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும். அவர்களை தண்டிக்காவிட்டால் மீண்டும் மீண்டும் இவ்வாறான அநியாயங்களில் பயமின்றி ஈடுபடுவார்கள்.
இந்த சம்பவத்தினால் உலக அரங்கில் இலங்கைக்கு அவப் பெயர் ஏற்பட்டுள்ளது.
பேருவளை முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் மிகவும் ஒற்றுமையுடன் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமை பொது பல சேனாவின் அராஜகத்தினால் விரிசல் அடைந்துவிட்டது.
பேருவளையில் முஸ்லிம்கள் பெளத்த விஹாரைகளுக்குக் கூட உதவி செய்கின்றனர். பேருவளை சப்புகொட விஹாரை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பொது பல சேனாவின் திட்டங்கள் பற்றி நான் இரு வருடங்களுக்கு மேலாக சொல்லி வருகிறேன்.
இவர்களின் அராஜகம் அளுத்கமையில் வெடித்துவிட்டது. கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது பேருவளை முஸ்லிம்கள் ஆளும் கட்சிக்கு அமோக வெற்றியை பெற்றுத் தந்தார்கள். முஸ்லிம்கள் என்னுடன் மிக நெருக்க மாகவே பழகுகின்றனர்.
ஆயுதங்களை ஒப்படைக்க 28 வரை காலக்கெடு - அளுத்கம பிரதேசத்தில் பொலிஸ் அறிவிப்பு
அளுத்கம பொலிஸ் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள குண்டுகள், துப்பாக்கி, கக்தி, இரும்புத்தடி, அடங்கலான சகல ஆயுதங்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் அளுத்கம முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அளுத்கம பொலிஸிற்கோ, பொதுவான மைதானமொன்றிற்கோ குறித்த திகதிக்கு முன் ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு எதிராக எதுவித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் 28 ம் திகதிக்குப் பின்னர் அவற்றை கைப்பற்றுவதற்கு பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுளளது.
குறித்த காலப்பகுதிக்குப் பின்னர் ஆயுதங்கள் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் உயிரிழப்புக்களும் சொத்து சேதங்களும் ஏற்பட்டது தெரிந்ததே.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnt7.html
சுன்னாகத்தை சேர்ந்தவருக்கு 17 வருடங்களின் பின்னர் யாழ் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 12:59.15 AM GMT ]
சுன்னாகம் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக ஒருவரை பொல்லால் தாக்கி மரணம் விளைவித்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மாவட்ட நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.
மரணம் விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவருக்கு 5 வருட சிறைத் தண்டளையும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14ம் திகதி சுன்னாகம் பகுதியில் இரு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக தலையில் பொல்லால் தாக்கப்பட்டு பொன்னர் கதிரவேலு என்பவர் உயிரிழந்தார்.
அத்துடன் கதிரவேலு குகனந்தினி, கிட்டினன் ஜெயராசா ஆகியோருக்கு காயம் ஏற்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை நவரத்தினம் என்ற தந்தையும், நவரத்தினம் பிரதீஸ்கரன், நவரத்தினம் சதீஸ்வரன் ஆகிய இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதனையடுத்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று, 2006ம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டு மீண்டும் 2009ம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று தீர்ப்பிற்காக மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த யாழ். மாவட்ட நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், குற்றஞ்சாட்டப்பட்ட சின்னத்துரை நவரத்தினம் நிரபராதி எனக் கண்டு விடுதலை செய்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு மகன்களில் கொலை செய்தமைக்காக நவரத்தினம் பிரதீஸ்கரனுக்கு மரண தண்டனையும், இறந்தவரின் மகளான கதிரவேலு குகனந்தினி என்பவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் நவரத்தினம் சதீஸ்வரனுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும், விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
இதேவேளை கொலையாளியான நவரத்தினம் பிரதீஸ்கரனுக்கு சம்பவம் இடம்பெற்ற காலத்தில் வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnuz.html
பொறுமை இழக்கும் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் நிலை! - 83 கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டோம்!- ரணில்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 01:06.24 AM GMT ]
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேற்கண்டவாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில், யுத்தம் முடிவுற்ற நிலையிலும் நாட்டில் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்காலத்தில் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதாகவும் தெரியவில்லை.
இவ்வாறான நிலை தொடர்ந்தால் சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி பொதுமக்கள் அனைவரும் நாட்டின் சட்டத்தை தம் கைகளில் எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனைத் தடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக அளுத்கம சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனைகளை முன் வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1983 கலவரத்தை கட்டுப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தவறிவிட்டது!- ரணில் விக்கிரமசிங்க தவறை ஏற்றார்
1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தை தடுக்க அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் அதே தவறை இன்று அரசாங்கம் செய்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற சமய தலைவர்கள் மற்றும் சமூகத்தலைவர்களுடனான சந்திப்ப்pன்போது ரணில் இதனை தெரிவித்தார்.
வன்முறைகள் நிறைவுற்றாலும் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினைக்கு இன்னும் முடிவடையவில்லை என்று ரணில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnu0.html
Geen opmerkingen:
Een reactie posten