தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

வடமாகாண மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகி வருகிறது!- முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

வாக்குறுதிகளை வழங்கி சர்வதேசத்தை ஏமாற்றும் அரசு: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 07:57.05 AM GMT ]
இலங்கை அரசு சர்வதேச அரசை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ். நீர்வேலியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்
சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். சர்வதேச விசாரணையை மறுப்பதால் நாடும், அரசும் மேலும் நெருக்கடிகளையே எதிர்கொள்ளவேண்டிவரும்.
அதனை புரிந்துகொண்டு அரசு நடந்துகொள்ளவேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச விசாரணையை நாம் வரவேற்கின்றோம்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்று கூட்டமைப்பு பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்திருக்கிறது.
யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை.
அதேவேளை, ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கும் பல்வேறு வாக்குறுதிகளை இலங்கை அரசு வழங்கியிருந்தது.
அதெல்லாம் காற்றோடு பறந்து விட்டது. இவ்வாறு வாக்குறுதிகளை வழங்கி, வழங்கி அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
வடமாகாணம் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மிக்க மாகாணமாகவே இருப்பதாக இலங்கையின் இராணுவப் பேச்சாளர் ருவாண் வணிகசூரிய தெரிவித்திருக்கும் கருத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் வட மாகாணத்தில் கடந்த 5வருடங்களில் அரச பயங்கரவாதத்தை தவிர வேறு எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் இடம் பெறவில்லை. எனவும் தெரிவித்திருக்கின்றது.
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு வடமாகாணம் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இம்மாகாணத்தில் பயங்கர வாத அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுவதாகவும் இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கும் நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தன்னுடைய கண்டனத்தை மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது.
மேற்படி விடயம் தொடர்பாக இன்றைய தினம் கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கண்டனத்தை தெரிவித்திருக்கின்றார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் அங்கே குறிப்பிடுகையில்,
போர் நிறைவடைந்து 5 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் புலிகள் மீண்டும் வந்துள்ளனர். மீண்டும் செயற்பட ஆரம்பிக்கின்றனர் என கூறி நெடுங்கேணி பகுதியில் 3 இளைஞர்களை சுட்டு படுகொலை செய்து அரசாங்கம் நடத்திய நாடகத்தை தவிர வேறு ஒன்றும் வடமாகாணத்தில் நடைபெற்றிருக்கவில்லை. என்பதே உண்மையாகும்.
ஆனால் அரசாங்கம் தன்னுடைய இராணுவ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடத்தல், காணாமல்போகச் செய்தல், துன்புறுத்தல் கொலைகள் என பல அரச பயங்கரவாதச் செயல்களை செய்கின்றது.
எனவே வடமாகாணத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக எழுந்தமானமாக பேசுவதனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன், வடமாகாணத்தில் தமிழ் மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.
மாறாக அரசாங்கத்தின் அரச பயங்கரவாதமும், பயங்கரவாத செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருக்கின்றன என்பதனையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவினையும், சாட்சிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும்,
மேற்படி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதன் மூலம் இலங்கையின் உள்நாட்டு இரகசியங்களை வெளியிடுவதாகவும், சாட்சியமளிப்பவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் அரசாங்கம் தொடர்ந்தும் விடுத்து வரும் அச்சுறுத்தல்களை கண்டிப்பதுடன்.
அவற்றை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன், இலங்கை அரசாங்கம் இன்று இந்த விடயத்தில் நடந்துகொள்ளும் முறைகளின் அடிப்படையில் கடந்தகாலத்தில் இதே அரசாங்கம் தமிழ் மக்கள் மீது எவ்வாறான மிக மோசமான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கும் என்பதனையும் சர்வதேசம் மிக தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblq7.html

4 வயது சிறுமியின் உயிர் பறிபோனது மனித செயற்பாடுக​ளா!- அதிகாரிகளி​ன் கவனயீனமா. காரணம்
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 08:18.03 AM GMT ]
பாரிய மண்சரிவினால் 4 வயது சிறுமி பலியானது இரவு 8.30 மணியளவில் ஹற்றன் நகரம் பதற்ற நிலைக்குள்ளானது.
ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன் புகையிரத நிலையத்திற்கு எதிரில் தலவாக்கலை வீதியில் அமைந்துள்ள ஆறு கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுத்ததாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
கடந்த 27 திகதி இரவு 8.30 மணியளவில் வர்த்தக நிலையங்களிற்கு பின்னிருந்த மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர். சில வர்த்தக நிலையங்களும் சேதமடைந்தன.
இதற்கு பிறகு புவிச் சரிதவியல் அளவை சுங்க பணியகம் மேற்கொண்ட பரிசோதனை அறிக்கையின் படி இவ் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம் எடுத்ததாக நுவரெலியா மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த மண்மேடு சரிந்து விழுந்தமை இயற்கை அனர்த்தம் இல்லையெனவும் மனித செயற்பாடுகளினாலும் சில அதிகாரிகளின் கவனயீனம் காரணமாகவே அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிலையம் தெரிவிக்கின்றது.
இவ்விடத்தில் ஒரு வர்த்தக நிலையத்தை அமைப்பதற்கு மட்டும் தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிலையம் இந்த வருடத்தில் அனுமதி கொடுத்திருப்பதாகவும் இந்த வர்த்தக நிலையத்தை அமைப்பதற்கு முன்னால் மண்மேடு சரிந்து வராமல் இருப்பதற்கு பாதுகாப்பு கட்டிடத்தை அமைத்ததின் பிறகு வர்த்தக நிலையத்தை கட்டுமாறு தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இவர்கள் பாதுகாப்பு கட்டிடத்தை அமைக்காமல் வர்த்தக நிலையத்தை கட்டியுள்ளதாகவும் இதனையடுத்து ஏனைய கடைகளும் கட்டப்பட்டதாகவும் இவ்வாறான செயலினால் ஒரு உயிர் பறிபோனதாக தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிலைய நுவரெலியா முகாமையாளர் நுவான் அனுரதுங்க தெரிவிக்கின்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் அடிக்கடி சீரற்ற காலநிலை நிலவுவதனால் உள்ளுராட்சி சபைகளினால் வர்த்தக நிலையங்கள் கட்டுவதற்கான அனுமதியை கொடுப்பதற்கு 2011ம் ஆண்டு சுற்றுநிருபம் ஒன்று கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் சுற்று நிருப அறிக்கையை பின்பற்றாமல் சில உள்ளுராட்சி அமைப்புகள் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதனால் இவ்வாறு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஹற்றன் நகரில் மண்சரிவு ஏற்படும் இடங்களுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு அட்டன் டிக்கோயா நகரசபையினால் அனுமதி கொடுத்திருப்பதாக தனக்கு முறைபாடு கிடைத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார்.
இதனால் இது சம்பந்தமாக விசாரணைகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblr0.html
இரத்மலானை பள்ளிவாசலை தீக்கிரையாக்க சிலர் முயற்சி
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 08:36.51 AM GMT ]
இரத்மலானை கந்தவல வீதியிலுள்ள தாளயம் பாவா ஜும்மா பள்ளிவாசலை தீக்கிரையாக்க இனவாதிகள் சிலர் முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பள்ளிவாசலின் வாயில் கதவருகில் பழைய ஆடைகளில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டுத் தீ மூட்டப்பட்டுள்ளது.
பள்ளிவாசலில் தீப் பிளம்பு கிளம்புவதையும் புகைவருவதையும் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கு விரைந்து சென்று தீயை நீர் ஊற்றி அணைத்து பெரும் அனர்த்தத்தை தடுத்துள்ளதாக ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
67 வருடமாக இரத்மலானை உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்துவரும் இப்பள்ளிவாசலில் இதுவரைகாலமும் எந்தவொரு அசம்பாவிதமும் இடம்பெறவில்லையென தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதும், பள்ளிவாசல்கள் மீதும் தொடரான தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் இப்பள்ளி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வருகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதேவேளை, இந்தப் பள்ளிவாசல் சம்பவம் குறித்து பொலிஸில் முறையிட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் மோப்பநாய்கள் சகிதம் தேடுதலையும் அப்பகுதியில் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblr1.html
மொழி தொடர்பில் இலங்கையுடன் சேர்ந்து பணியாற்ற கனடா மகிழ்ச்சி
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 08:39.11 AM GMT ]
மொழி தொடர்பில் இலங்கையுடன் சேர்ந்து பணியாற்ற கனடா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள சகல மக்களும் அரச திணைக்களங்களில் இருந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் சேவையைப் பெறுவதற்கான உறுதிப்படுத்தும் கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கையுடன் சேர்ந்து கனடா பணியாற்றவுள்ளது.
கனடாவின் 147வது பிறந்த தினத்தை முன்னிட்டு கனடா உயர்ஸ்தானிகர் வைட்டிங் செல்லி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒவ்வொரு வருடமும் கனடா உலக நாடுகளிலிருந்து சுமார் 300,000 புதிய குடிவரவாளர்களை உள்வாங்குகின்றது. அனைவரும் பங்களித்துள்ள எமது நாட்டின் பல்வகைமை குறித்து கனேடியர்கள் பெருமை கொள்கிறார்கள்.
இலங்கையைப் போன்று, கனடாவும் ஒன்றுக்கு மேற்பட்ட உத்தியோகபூர்வ மொழிகளைக் கொண்டுள்ளது. கனடாவில் ஆங்கிலமும் பிரெஞ்சும் பரவலாகப் பேசப்படுகின்றன.
இலங்கையையும் கனடாவையும் பொறுத்தவரை, எமது வரலாற்றையும் எமது சமூகத்தோடு கலந்துள்ளவர்களின் தனித்துவ அடையாளங்களையும் அங்கீகரிப்பதற்காகவே பல உத்தியோகபூர்வ மொழிகளைக் கொண்டிருக்கின்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையின் உள்நாட்டு முயற்சியான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, நல்லிணக்கத்துக்கான முக்கிய மூலக்கூறாக மொழிச் சமத்துவத்தை அங்கீகரித்துள்ளது.
எனவே மொழி தொடர்பில் இலங்கையுடன் சேர்ந்து பணியாற்ற கனடா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblr2.html

வடமாகாண மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகி வருகிறது!- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 09:13.08 AM GMT ]
வடமாகாண மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு போரின் பின்னர் அவர்களுக்காக ஆவன செய்யாதிருப்பதால் எம் மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகி வருகிறது. இராணுவம் தொடர்ந்து வடமாகாணத்தில் இருந்து வருவதால் எம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மற்றுமொரு அவலம் இது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்ற மகிந்தோதய தொழில் நுட்பப் பீட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் நிகழ்த்திய உரை வருமாறு,
தலைவரவர்களே, அமைச்சரவர்களே, பாராளுமன்ற அங்கத்தவரே, அரசாங்க அதிபர் அவர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!
மீண்டும் ஒரு முறை ஒட்டுசுட்டான் பிராந்தியத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். சென்ற முறை வந்த போது இங்கு நடக்கும் அகழ்வுகளைப் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. எமது வளங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றன என்பதைக் கண்கூடாகக் கண்டேன்.
சுமார் 40 அடி ஆழத்திற்கு கருங்கல் வெட்ட அனுமதிப் பத்திரம் எடுத்து விட்டு சுமார் 135 அடி ஆழம் வரையில் அகழ்வு நடந்துள்ளதாக அறிந்தேன். அதற்கு அனுமதி கொழும்பில் இருந்து கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அது பற்றி ஆராயுமாறு எமது அலுவலர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருங்கல் வடமாகாணத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுவதாகவும் அறிந்தேன். ஆக மொத்தம் எமது வளங்களை வடமாகாணத்திற்கு வெளியில் இருந்து வந்தோர் எம் மாகாணத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதை அறிய நேரிட்டது.
அடுத்து ஒட்டுசுட்டான் ஓடு செய்யும் தொழிற்சாலையை மீண்டும் இயக்கி உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களைக் கொடுப்பதைத் தடுக்க எவ்வாறு அரசியல் உள்ளீடு காரணமாய் அமைந்துள்ளது என்று அறிந்தேன்.
இன்று மகிந்தோதய தொழில்நுட்பப் பீட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளேன். எனவே நல்லதும் கெட்டதும் ஒரே பிரதேசத்தில் நடந்தேறி வருவதை நான் காண்கின்றேன்.
நாங்கள் அரச சார்பான கட்சியைச் சேர்ந்திருந்தாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் யாவரும் வடமாகாண மக்களின், அவர்களின் வளங்களில் அக்கறை கொண்டவர்கள் என்பதை மறக்கக் கூடாது.
அவர்களையும் அவர்களின் வளங்களையும் பாதுகாப்பது எங்கள் யாவரதும் கடமை. சென்ற முறை நான் திரு.உனைஸ் பாரூக்கைச் சந்தித்த போது அவர்கூட அதே கருத்தைக் கொண்டவர் என்று தெரிந்து கொண்டேன்.
எம்முள் முஸ்லிம் - தமிழ், அல்லது இஸ்லாமிய - கிறீஸ்தவ - இந்துமத வேற்றுமைகள் எம் மக்களைப் பாதுகாக்கும் போது இருக்கக் கூடாது. சேர்ந்தே நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றேன்.
உதாரணத்திற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பூநகரியருகே வெள்ளாங்குளத்தில் கணேசபுரம் என்ற பகுதியில் ஒரு பண்ணை ஒன்றை இராணுவம் எடுத்து நடத்துகின்றது.
1983ம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கென பயிர்ச் செய்கைக்காக தலா இரண்டு ஏக்கர் வீதம் 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அப்போதைய மகாவலி அமைச்சரால் வழங்கப்பட்டன.
ஆனால் அவர்களுக்கு அதற்கான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அக் காலத்தில் இருந்து அவ் இளைஞர் யுவதிகள் அக் காணியில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
1990ம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக அந்த இளைஞர் யுவதிகள் அப்பகுதியை விட்டு இடம்பெயர்ந்து சென்றனர்.
1990ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் விடுதலைப் புலிகள் இக்காணிகளில் விவசாய நடவடிக்கைகளைத் தொடர்ந்ததோடு வெள்ளாங்குளம், சேவாக்கிராமம், பாலியாறு, தேவன்பிட்டி, மூன்றாம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 250ற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அங்கு வேலைவாய்ப்பினை வழங்கி ஆண்களுக்கு அக்காலகட்டத்தில் தலா ரூபா 600/=ம் பெண்களுக்கு தலா ரூபா 500/=ம் ஊதியமாக வழங்கி அங்கு பழவகைப் பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறிப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டிருந்தனர்.
2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் அரசானது அக்காணிகளைக் கையேற்று  CIC நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால் விரைவிலேயே அக்காணி இராணுவக் கட்டுப்பாட்டினுள் ஏற்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அக்காணிக்குள் தற்பொழுது போக முடியாதுள்ளது.
இக் காணிகள் வழங்கப்பட்ட மன்னார் பிரதேச மக்கள் தற்போதும் அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்துங் கூட தமக்கு ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்ட காணிகளை தாம் எடுத்துப் பயிர்செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள்.
இராணுவம் தொடர்ந்து வடமாகாணத்தில் இருந்து வருவதால் எம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மற்றுமொரு அவலம் இது. இது பற்றி நாம் யாவரும் கரிசனை எடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கக் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா?
எமது மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு போரின் பின்னர் அவர்களுக்காக ஆவன செய்யாதிருப்பதால் எம் மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகி வருகிறது.
நேற்று கிளிநொச்சி பாரதிபுரம் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்த போது அவர்களின் குறைகள் பலவற்றைக் கூறினர்கள்.
குடிநீர்ப் பிரச்சினைகள், வீடின்மை, கல்வி சம்பந்தமான பிரச்சினைகள், விவசாயம் பற்றிய பிரச்சினைகள், தெருக்கள் போடப்படாமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் என்று பலதையும் எடுத்துரைத்தார்கள்.
அரசாங்கம் பாரிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கும் கரிசனையை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட தேவைகள் சம்பந்தமாகக் காட்டாதிருப்பது மனவருத்தத்தைத் தருகிறது.
வடமாகாண மக்களின் போரின் பின்னரான தேவைகள் பற்றிக் கணித்து Needs Based Assement என்ற அறிக்கையைத் தருமாறு ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் கேட்டிருந்தேன்.
எல்லாவற்றையும் என்னுடன் சேர்ந்து கதைத்து விட்டு அரச அமைச்சர் ஒருவருடன் அவர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்.
இப்பேர்ப்பட்ட விடயங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அனுசரணையைப் பெறாவிட்டால் உண்மை நிலையை அறியாது கணிப்புக்கள் தயாரிக்கப்படும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
எனினும் இன்று மகிந்தோதய தொழில் நுட்ப பீடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு என்னையும் எங்கள் அமைச்சரையும் அழைத்தமை மனநிறைவைத் தருகின்றது. கிடைக்கும் அனுசரணைகள் யாவும் எங்கள் மாணவச் செல்வங்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
வெகுவிரைவில் இந்தக் கட்டிடம் பூர்த்தி அடைந்து மாணவ மாணவியரின் கல்விக்கு மேம்பாட்டை அளிக்க உதவி புரியும் என்று எதிர்பார்க்கின்றேன்.
எம்மை அழைத்தமைக்கு நன்றி கூறி வருங்காலம் உங்கள் கல்லூரிக்கு நற்காலமாகப் பரிணமிக்க வேண்டும் என்று பிரார்த்தித்து என் சிறிய பேச்சை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://www.tamilwin.com/show-RUmsyGQULblr3.html

Geen opmerkingen:

Een reactie posten