இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்விசாரணை குழுவின் முன் சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பதற்கென எந்தவித சட்டங்களும் இலங்கையில் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் இராஜதந்திரிகளும் சிவில் சமூகத்தினரும், சாட்சியாளர்களின் பாதுகாப்புக் குறித்து கவலையும், அச்சமும் அடைவதாக தெரிவித்தனர்.
சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
இலங்கையின் உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர் நவிபிள்ளையின் விசாரணைக்குழு தயாராகியுள்ள நிலையில், அவ்விசாரணைக் குழுவில் சாட்சியமளிக்கவுள்ள சாட்சியங்களை பாதுகாக்க முடியாத நிலை இலங்கையில் இருக்கின்ற காரணத்தினாலேயே சிவில் சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் இதனைத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இது தொடர்பில் முன்னாள் இராஜதந்திரியும், ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியுமான பேராசிரியர் ஜயந்த தனபால கூறுகையில்; ஐ.நா.விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருக்கிறது. 2006ஆம் ஆண்டு சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டம் ஒன்றை கொண்டுவருவதாக அரசாங்கம் கொண்டுவருவதாக கூறியது. தொடர்ந்து அமைச்சரவையில் இதுபற்றி பேசினார்கள். ஆனால், அதன்பின்னர் எவ்வித பேச்சுக்களும் இல்லை.
சாட்சியமளிப்பவர் தண்டனைக்குட்பட்டாலோ அல்லது சித்திரவதைக்குட்படுத்தப்பட்டாலோ அவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கவேண்டிய பொறுப்பு அரசுக்குரியது. எனவே, அரசாங்கம் சாட்சியங்களை பாதுகாக்க விஷேட நடைமுறை ஒன்றை அமுல்படுத்த வேண்டும். அமெரிக்காவில் சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டம் நடைமுறையிலுள்ளது. மேலும் ஐ.நா.வின் விசாரணைக்கு அரசு எதிர்ப்பு தெரிவிப்பதை உத்தியோகபூர்வமாக இதுவரை மனித உரிமைகள் ஆணையகத்துக்கு அறிவிக்கவில்லை எனவும் கூறினார்.
சாட்சியங்களை பாதுகாப்பது தொடர்பில் ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும் இராஜதந்திரியுமான பேராசிரியர் தயான் ஜயதிலக கூறியதாவது; சாட்சியங்களை பாதுகாக்கவும் ஐ.நா. விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பிலும் உயர் நீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும்.
2006 ஆம் ஆண்டு சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டம் தொடர்பாக பேசப்பட்டது. அது திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில் சாட்சியமளிப்பவர்களுக்கானது. ஆனாலும், அதுவும் இன்று இல்லை. எனவே, இன்று நடக்கவுள்ள ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிக்கவுள்ளவர்கள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கமோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்த தரப்பினராவது முன்வந்து சாட்சியங்களை பாதுகாப்பது தொடர்பாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடர வேண்டும். ஐ.நா. விசாரணை வலுப்பெற்ற ஒன்று. விசாரணை ஆரம்பமாகவுள்ளதற்கு முதலே சாட்சியங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.
சாட்சியங்களை பாதுகாப்பது தொடர்பில் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளரும் மனித உரிமை ஆர்வலருமான கலாநிதி பாக்கியசோதி கூறுகையில்,
ஐ.நா. விசாரணைக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ள சாட்சியாளர்களை பாதுகாக்க இலங்கையில் எவ்வித சட்டங்களும் இல்லை. உள்நாட்டில் சாட்சியங்களை திரட்டுவதே ஐ.நா. விசாரணைக்குழுவின் பிரதான பணியாக இருக்கும் நிலையில், சாட்சியங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. தனிநபர் மட்டுமன்றி, ஏனைய சாட்சியங்களை பாதுகாப்பதும் கடினமான விடயமே என அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு வழங்க சாட்சியங்களை சேகரிப்பதாக ஏற்கனவே கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளிடமும் சாட்சியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmx4.html
Geen opmerkingen:
Een reactie posten