தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

வடமாகாணசபை ஆட்சியை ஆட்டம் காண வைக்கச் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன!- முதலமைச்சர்

இலங்கைக்குள் ஒரு சில தீவிரவாதிகள் இருக்கின்றனர்: ரணில்- ஐ.தே.கவின் கூட்டம் நடத்தப்படவிருந்த இடம் மீது தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 01:20.04 PM GMT ]
இலங்கைக்கு உள்ளேயும் வெளியிலும் சிறிதளவில் பௌத்த மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை அரசாங்கம் மத தீவிரவாதிகளை உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மத தீவிரவாதம், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கு உலகளவில் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிலுள்ள ஆட்சியை கலைத்து, இது போன்ற பிரச்சினைகளை எளிதில் தீர்வு காண முடியும் எனவும், நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் மக்கள் பலர் ஒன்று சேர்ந்து வாழ விரும்பினாலும், பலர் தீவிரவாதத்தை வளர்ப்பதாக ரணில் குற்றம் சாட்டியுள்ளார்.
மத பிரச்சினைகளை உருவாக்குவதால் ராஜபக்ச அரசை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவின் கூட்டம் நடத்தப்படவிருந்த இடம் மீது தாக்குதல்
ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்று நடத்தப்படவிருந்த இடத்தின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹாலியல போகாமடித்த என்னும் இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மக்கள் சந்திப்பு நடத்தப்படவிருந்த கட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகத்தை மூடிக்கொண்ட இனந்தெரியாத நபர்கள் ஆறு பேர் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பை குழப்பியமைக்காக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தலைமையில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது
.http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmx7.html
இடைநிறுத்தப்பட்ட ஏறாவூர் பொலிஸார் இடமாற்றத்துடன் மீண்டும் பணியில்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 01:36.36 PM GMT ]
கடமையின் போது சீருடை அணியாமல் நடமாடியமையால் பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரில் நால்வர் இடமாற்றத்துடன் மீண்டும் கடமையேற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மேற்படி நான்கு பொலிஸாரும் நேற்றைய தினம் திருகோணமலைக்கு இடமாற்றத்துடன் கடமையேற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கைதியொருவரைக் பிடிப்பதற்காக சிவிலுடையில் நடமாடிய பொலிஸார் ஐவர் கடந்த 07ம் திகதி முதல் பணயிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் உட்பட மேலும் நான்கு பொலிஸாருடன் சேர்த்து ஐவரடங்கிய பொலிஸ் சோதனைக் குழுவொன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கைதியொருவரைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரையுமே அவர்களுடைய கடமை நேரம் வரையறுக்கப்பட்டிருந்தது.
எனினும் அதிகாலை 2 மணியளவில் இப்பொலிஸ் குழுவைச் சோதனையிட்டபோது அவர்களில் எவரும் சீருடை அணியவில்லை என்ற விடயம் தெரியவந்துள்ளது.
இது விடயமாக நடவடிக்கை எடுத்த மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர், வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை பணியிலிருந்து இடை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, கடந்த 07ம் திகதி முதல் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீண்டும் தமது கடமையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbloy.html
குவைத்தில் நகை திருடிய இலங்கைப் பணிப்பெண்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 02:14.02 PM GMT ]
குவைத்தில் இலங்கைப் பணிப் பெண்ணொருவர், தான் வேலை செய்த வீட்டில் நகை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1400 குவைத் தினார் பெறுமதியான நகையைத் திருடியதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
25 வயதான குவைத் பெண் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பணிப்பெண், நாட்டுக்குச் செல்வதற்காக விமான நிலையத்தில் இறக்கி விட்டு, வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்தபோது நகை காணமால் போனதை தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குவைத் ஊடகமொன்று இதனை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbloz.html
கழுத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி இளம்பெண் படுகாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 02:31.48 PM GMT ]
தனியார் மருந்தகமொன்றில் தொழில் புரியும் பெண் ஒருவர் இன்று மாலை இனந்தெரியாத நபரால் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
அம்பாறை தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள மருந்தகத்தில், குறித்த இளம் பெண் இருந்தபோது, அங்கு வந்த இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த பெண்ணின்  கழுத்தில் கத்தி ஆழமாக பதிந்து அகற்ற முடியாத நிலையில் மேலதிக அவசர சிகிச்சைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவத்தனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLblo0.html
வடமாகாணசபை ஆட்சியை ஆட்டம் காண வைக்கச் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன!- முதலமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 03:06.24 PM GMT ]
இன்று எமது தமிழரின் வடமாகாணசபை ஆட்சிக்கு வந்துள்ளது. அந்த ஆட்சியை ஆட்டம் காணவைக்கச் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உங்கள் பிரச்சனைகள் இன்னும் நீண்டு கொண்டு செல்வதைக் காண்கின்றேன் என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணபுரம், பாரதிபுரம் போன்ற கிராம மக்களை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கிருஷ்ணபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்  ஆற்றிய உரை வருமாறு,
தலைவரவர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, மாகாணசபை உறுப்பினர்களே, அதிகாரிகளே, அலுவலர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே,  உங்கள் யாவரையும் நேரில் கண்டதில் எனக்கு மட்டட்ட மகிழ்ச்சி. ஆனால் உங்கள் குறைகளைக் கேட்டதில் மனம் வருந்துகின்றேன்.
ஒரு காலத்தில் என் பாலிய வயதுக் காலத்தில் வடமாகாணத் தமிழ் பேசும் மக்களை அறிவில் சிறந்தோர் அலுவலக ஆற்றலில் சிறந்தோர் என்றெல்லாம் சிங்கள மக்கள் புகழ்ந்தார்கள். அதே காலகட்டத்தில் மலையகத் தமிழ் மக்களை சுற்றாடலுக்கேற்ப வேலை செய்யும் சுறுசுறுப்பு மிக்கவர்கள், செயல் நுட்பத்திறமை மிக்கவர்கள் என்றெல்லாம் புகழ்ந்தார்கள். எமது முஸ்லீம் சகோதரர்கள் வணிகத்தில் வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள் என்று புகழ்ந்தார்கள்.
ஆனால் அரசியல் அதிகாரம் தம் கைக்கு வந்தவுடன் இராகம் மாறியது. எல்லோருமே எங்கள் வளங்களைக் கொள்ளையிட வந்த வேற்று நாட்டவர்கள் என்ற புதிய குரல் மேலோங்க ஆரம்பித்தது.
இந்தக் குரலின் உரத்த தன்மையால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இங்கிருந்து வசித்துவந்த வடகிழக்கு மாகாணத் தமிழரின் தொன்மையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து இங்கிருந்து வந்த முஸ்லீம்களின் நீண்ட வசிப்பும், அண்மையில் என்றாலும் அவர்களின் ஆற்றலை அடையாளங் கண்டு மலையகத்தில் ஆங்கிலேயரால் குடியேற்றப்பட்ட மலையகத் தமிழரின் உரிமைகளும் குறித்தொதுக்கப்பட்டு சகலரும் இந்நாட்டிற்குத் தேவையற்றவர்கள் என்ற கோஷம் எழுந்தது. பெரும்பான்மை இனச் சமூகத்தினருக்கே நாடு சொந்தம் எனப்பட்டது.
இதன் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முதலில் 1958ல் எமது வடகிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் 1977ல் மலையக மக்கள் பாதிக்கப்பட்டனர். 1983ல் தமிழர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது முஸ்லீம் சகோதரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இவ்விதமான பாதிப்புக்களின் மத்தியில்த்தான் நீங்களும் உங்கள் முன்னையவர்களும் 1977ம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் மலையகத்தில் இருந்து அடிபட்டு இடிபட்டு வடமாகாணத்திற்கு வந்து வன்னியை உங்கள் சொந்தப் ப+மியாக்கிக் கொண்டீர்கள். காடாயிருந்த நிலங்களைக் கழனிகள் ஆக்கினீர்கள்.
இன்று எமது தமிழரின் வடமாகாணசபை ஆட்சிக்கு வந்துள்ளது. அந்த ஆட்சியை ஆட்டம் காணவைக்கச் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் உங்கள் பிரச்சினைகள் இன்னும் நீண்டு கொண்டு செல்வதைக் காண்கின்றேன். காணி சம்பந்தமான பிரச்சனைகளே உங்களுக்கு மிக முக்கியமானவை. வாழ்வாதாரம், வாழ்க்கைப் பிரச்சினைகள் என்று பலதையும் எதிர்கொண்டுள்ளீர்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் விட வேறொரு முக்கிய பிரச்சினையை நீங்கள் எதிர்கொண்டுள்ளீர்கள். அதுதான் பிரதேச வாதம்.
எமது அலுவலர்களில் சிலர் பிரதேச வாதத்தை எழுப்பி “நீங்கள் மலையகத் தமிழர். நாங்கள் உள்ளூர் தமிழர். உங்களுக்கு உரித்துக்கள் தரமாட்டோம்” என்று கூறி பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக அறிகின்றேன். அவ்வாறு நடந்து கொள்ளும் அலுவலர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நீங்கள் எவ்வாறு எமது மலையகத் தமிழர்களை அந்நியர்களாகக் கருதுகின்றீர்களோ அதே போல்த்தான் உங்களை அன்னியர்கள் என்று சிங்கள பிக்குமார் கூட்டம் கூடிக் கூறுகின்றனர். தயவு செய்து அவ்வாறு கூறுவதைத் தவிர்த்து மனிதாபிமானமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.
இன்று எமது வட கிழக்கு மாகாண மக்கள் பெருந்தொகையாக வெளிநாடு சென்றுள்ளனர். எஞ்சியிருக்கும் நாம் எமது உரித்துக்களுக்காகப் போராடி வருகின்றோம். இப்பேர்ப்பட்ட காலகட்டத்தில் எமக்குத் தோள் கொடுத்து எம்முடன் வாழும் மலையகத் தமிழர்களுக்கு அதிகாரப் பாகுபாடு காட்டுவது என்ன நியாயம்?
அலுவலர்களே! தயவு செய்து உங்கள் பிழையான நடவடிக்கைகளை நிறுத்துங்கள்! ஆணவம் இடம் கொடுக்கவில்லை என்றால் மனித உரிமைகளையாவது சிந்தித்துப் பார்த்து நிவாரணங்களை இம்மக்களுக்கு வழங்க முன்வாருங்கள். அவ்வாறு செய்யாது விட்டு உங்கள் செய்கைகள் அம்பலத்துக்கு வந்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்லி வைக்கின்றேன்.
தமிழ் பேசும் மக்கள் யாவரும் ஒரு தாய் மக்கள் என்பதே எமது கோட்பாடு. அவர்கள் மலையக மக்களாகிலும் கிழக்கிலங்கை மக்கள் ஆகிலும் வன்னி மக்களாகிலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகினும் அவர்கள் அனைவரும் எமது சுற்றத்தார்.
பாரதத்தில் முகாம்களில் முடங்கிக் கொண்டு இருப்பவர்களும் எம்மவரே. அவர்களை அழைத்துவந்து இங்கு அவர்தம் இடங்களில் குடிவைக்க வேண்டும். எம்மால் ஆன உதவிகளை அவர்கள் அனைவருக்குஞ் செய்து கொடுப்பது எமது தலையாய கடன்.
அலுவலர்களின் அசிரத்தையால் எமது இந்தப் பிரதேச மக்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்வது எமது கடமை. இந்தக் கடமையில் இருந்து நாங்கள் தவற மாட்டோம் என்பதையும் கூறி வைக்கின்றேன்.
உங்கள் குறைகளை எழுத்;து மூலம் எமக்குத் தெரிவியுங்கள். விரைவில் உங்கள் ஒவ்வொருவரின் குறைகளுக்கும் முடிந்த வரையில் நாங்கள் நிவாரணங்களைத் தேடிப் பெற்றுக் கொடுப்போம் என்று கூறி எம்மை அழைத்ததற்கு நன்றி கூறி அமர்கின்றேன்.
நன்றி.  வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
http://www.tamilwin.com/show-RUmsyGRdLblo1.html

Geen opmerkingen:

Een reactie posten