தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

அரசுடன் இணங்கிப் போனால் நன்மை கிடைக்கும் என்பது சாத்தியமா?

அறுபது ஆண்டுகளுக்கு மேலான ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து, முப்பது ஆண்டுகள் இடம்பெற்ற நிலையில், அந்தப் போராட்டம் அதி உச்சத்தை அடைந்து இறுதியில் அழிவுகளோடும் உயிர் இழப்புகளோடும் முற்றுப் பெற்று விட்டது.
அகிம்சை முறையிலோ, ஆயுத முனையிலோ போராடியும்கூட, எந்த ஒரு பலனையும் ஈழத் தமிழினம் பெற்றுவிடவில்லை.
இலங்கையை ஆண்ட சிங்கள அரசுகளிடம் உரிமை கேட்டு ஜனநாயக முறையில் போராடிய வேளையிலும் சரி, ஆயுதம் ஏந்தி புலிகள் போராடிய வேளையிலும் சரி இலங்கை அரசுக்கு ஒத்துளைப்பு வழங்கி ஒத்தூதிய தமிழ் பிரதிநிதிகள், மந்திரிமார்கள் அன்றும் சரி, இன்றும் சரி இருக்கவே செய்கிறார்கள்.
தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்களும் அரசோடு இணைந்து மந்திரிப் பதவிகளைப் பெற்று சுகபோகத்தை அனுபவிக்கத்தான் செய்தார்கள். அரசோடு ஒட்டியிருந்த அவர்களால்கூட இனத்துக்கான பிரச்சினையில் எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனாலும், தமது ஊருக்கு, உறவுகளுக்கு, ஊரவருக்கு சில நன்மைகளை செய்திருந்தார்கள்.
வாக்குப் போட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் சிலவற்றை பெற்றுக்கொடுத்திருந்தார்கள். வாசகசாலை, சுடலை, கிணறு, கோயில் என்று கட்டட வேலைகள் சிலவற்றை தமது தொகுதிக்கு ஒதுக்கப்படும் பணத்தில் கட்டிக் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட விடயங்களை மட்டுமே அவர்களால் செய்து கொடுக்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் இலங்கை அரசுகளினால் தாம் ஏமாற்றப்படுவதை தமிழ் கட்சிகள்உணரும் நிலை ஏற்பட்டது. அதேவேளை தமிழ் இளைய சமூகமும் அரசின் இன ஒதுக்கலுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
அரசாங்க வேலைகளுக்கு சிங்கள மொழித் தேர்வின் அவசியம், கல்வியில் தரப்படுத்தல், காலத்துக்கு காலம் தென்பகுதியிலிருந்து தமிழன் அடித்துக் கொல்லப்படுவது, உடமைகள் கொள்ளையிடப்படுவது, வீடுகள் சேதமாக்கப்பட்டு வடகிழக்குக்கு தமிழ் மக்கள் துரத்தப்படுவது போன்ற வன்முறைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
இளைய தலைமுறை முழுமையாக தலையெடுப்பதற்கு முதலே, அன்றைய தமிழ் தலைமைகள் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் போராட்ட பாதையை திசை திருப்பியிருந்தார்கள். தமிழ் கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கி, பிரிவினைக்கான அத்திவாரத்தை அவர்களே இட்டு வைத்தார்கள்.
அப்போதும்கூட கூட்டணியின் பேரில் வெற்றி பெற்ற சிலர் அரசோடு இணைந்து தமது சுயநலத்தை வெளிக்காட்டத் தவறவில்லை.
இப்படிப்பட்ட சில தமிழரின் அரசியல் நிலைப்பாடானது, போராட்டம் உக்கிரம் அடைந்திருந்தபோதும் சரி, அது இழப்புக்களோடு முடிவடைந்த நிலையிலும்கூட சுயநல அரசியலை அவர்கள் விட்டுவிட தயாராக இல்லை. போரின்போது அரசுக்கு ஆதரவாக இருந்தவர்களில் ஆனந்த சங்கரியும் ஒருவர். அரசோடு இணங்கிப்போய் எதை அவர் சாதித்தார்? நான்கு லட்சம் மக்கள் வன்னியில் இருந்தபோது அரசு எண்பதினாயிரம் மட்டுமே என்று கணக்குக்காட்டி மாவையும், சீனியையும் அனுப்பி வைத்தது.
கிளிநொச்சியியை தளமாகக்கொண்ட ஆனந்தசங்கரி அவர்கள் அரசோடு நெருக்கமாக இருந்தபோதும், அந்த மக்களின் உணவு மருந்துப் பற்றாக்குறையை போக்குவதற்கு அவரால் முடியாமல் இருந்தது. இன்று அரசியலிலிருந்தே ஒதுங்கப் போவதாக புலம்புகிறார்.
அடுத்தவர் கருணா, இன்றைய பிரதி அமைச்சர். தலைவரை இந்திய படைகளிடம் இருந்து காப்பாற்றிய தான் ஒரு துரோகியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைவரை மட்டுமல்ல, தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தையே காட்டிக்கொடுத்ததை தமிழினம் அறியாதா என்ன? அரசோடு இணைந்து இருக்கும் கருணாவால் கிழக்கில் சில சில்லறை அபிவிருத்திகளை செய்ய முடிகிறது என்பது உண்மைதான்.
அதையும் செய்யாவிட்டால் ஏன் மந்திரிப் பதவி அவருக்கு? ஆனால், தமிழினத்துக்கான முக்கிய விடயங்களில் அவரால் வாய் திறக்கமுடியவில்லையே! குறைந்தது கிழக்கில் தொடர்ந்து பறிபோகும் தமிழரின் காணிகளை அவரால் காப்பாற்ற முடிகிறதா?
கே.பி என்ற பத்மநாதனின் அடிமைத்தனமும் அப்படியாகத்தான இருக்கிறது. அதுபோலத்தான் வடக்கிலும் அரசோடு சேர்ந்து இருப்பவர்கள், சில அபிவிருத்திகளை செய்வதில் மட்டும் முன்நிற்கிறார்களே தவிர, இராணுவ தலையீட்டை குறைப்பதிலோ, மாகாண அரசை இயங்க வைப்பதிலோ, அடிப்படையான இனப் பிரச்சனையை தீர்ப்பதிலோ தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
அதுபோலவே மலையகத்திலும், அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் பல இருக்கின்றபோதும், சுயநல அரசியலையே அவர்களும் தொடர்ந்த நடத்தி வருகிறார்கள். அந்த மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைப்பதாக தெரியவில்லை.
தமிழினத்தின் இயலாமைகளை கடந்து, இலங்கையில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொண்டால், இலங்கையின் பெரும்பான்மை கட்சிகள் இரண்டிலும் பங்குகொள்வதை தமது அரசியல் தந்திரமாக வைத்துள்ளார்கள். தம் இனத்தை உரிமையோடு வாழ வைக்கிறார்களோ இல்லையோ, தனிப்பட்ட தமது அந்தஸ்தை மட்டும் உயர்த்தி வருகிறார்கள்.
தமிழினத்தின் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு அவர்களும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அரசும், அரச படைகளும் தமிழருக்கு செய்த அராஜகத்துக்கு துணையாக நின்றவர்கள் அவர்கள். ஆனால், தமது குல்லாவுக்கு மட்டுமல்ல, தலைக்கும் சேர்த்தே இப்போது ஆபத்து வந்துவிட்டதென்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள்.
முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே அந்த உணர் வந்துள்ளது. ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து ஒட்டுண்ணிகளாக பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கவே விரும்புகிறார்கள். அந்தஸ்த்து மோகம் யாரை விட்டது. பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள்தானே.
சமத்துவம், இன ஒற்றுமை, மத நல்லிணக்கம் என்பவை பற்றி ஆட்சியாளர்கள் வாயால் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது ஆழ் மனதில் இன, மத வாதங்கள் நிறைந்து கிடக்கிறன்றன.
அதன் வெளிப்பாடே முஸ்லிம் மக்கள் மீதான அண்மைய தாக்குதலாகும். சிறுபான்மை இனங்கள் அரசோடு இணங்கிப் போனால் பலன் கிடைக்கும் என்ற கணிப்பு எதிர்பாக்கவே முடியாத ஒன்று என்பதை தமிழர்கள் முழுமையாக உணர்ந்துள்ளார்கள்.
மேற்கத்தைய நாடுகள் இதை ஏற்கனவெ புரிந்துவைத்துள்ளன. இந்தியாவுக்கும் அது நன்றாகவே புரியும். முஸ்லிம் நாடுகளிலும் அது எதிரொலித்திருக்கிறது.
ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஐ.நா மனித உரிமை பேரவைத் தொடரில் இதன் பிரதிபலிப்பு முழுமையாக வெளிப்படும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
க.ரவீந்திரநாதன்
kana-ravi@hotmail.com
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmry.html

Geen opmerkingen:

Een reactie posten