தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 maart 2015

மகள் அறியாமல் செய்த தவறை மன்னிக்கவும்: உதயசிறியின் தாய் கதறல்!



சிகிரியா குன்றிலுள்ள சுவர் ஓவியத்தின் மீது தனது பெயரை கிறுக்கிய குற்றசாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உதயசிறியின் விடுதலை தொடர்பில் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு  தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் உதயசிறியின் தாயுடன் கலந்துரையாடியுள்ளார்.
நண்பிகளுடன் சுற்றுலா சென்ற சித்தாண்டி, விநாயகபுரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி அங்குள்ள சுவரொன்றில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் அங்கு காவற்கடமையிலிருந்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு,
 02.03.2015 அன்று தம்புள்ளை பொலிஸாரினால் தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, தொல்பொருட்களைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இரு வருட சிறைத்தண்டனை வழங்கி நீதவான் தீர்ப்பளித்தார்.
மேற்படித் தீர்ப்புக்கமைவாக குற்றவாளியாகக் காணப்பட்ட உதயசிறி தற்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள உதயசிறியின் விடுதலை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம..பிர்தௌஸ் (நளீமி), காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எ.எச்.எம்.மிஹ்ழார் ஆகியோர் யுவதியின் வீட்டுக்கு 09ம் திகதி விஜயம் செய்து, அவரின் தாயார் மற்றும் குடும்ப உறவினர்களோடு இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினர்.
இதன் போது, யுவதியின் தாயாரான சின்னத்தம்பி தவமணி சம்பவம் தொடர்பில், “எனது மகள் 14.02.2015 அன்று தனது நண்பிகளுடன் சீகிரியாவிற்கு சுற்றுலா சென்ற போது, அங்குள்ள சுவரில் பலரது பெயர்களை எழுதியிருப்பதைக் கண்டு, அதில் தன்னுடைய பெயரையும் எழுதியுள்ளார்.
அவருக்கு அந்தச் சுவரில் பெயரை எழுதக் கூடாது என்று தெரியாது, தெரிந்திருந்தால் அவர் எழுதியிருக்கமாட்டாள். எனது மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை இட்டு தான் பெரிதும் வருந்துகிறேன். எனது மகளின் விடுதலைக்காக கெடுமையான கஸ்டங்களுக்கு மத்தியிலும் சட்டத்தரணி ஒருவர் மூலம் முயற்சி செய்தோம்.
என்றாலும், சிங்கள மொழி தெரியாததால் நீதிமன்றத்தில் பேசப்பட்ட விடயங்கள் எதனையும் எங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இறுதியில் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் கூறிய பின்னர் தான் எங்களுக்குத் தெரிய வந்தது எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.
“நான் ஒரு விதவை, நான் எனது மகளின் வருமானத்தில் தான் வாழ்ந்து வருகிறேன், அன்றாடம் மாவு இடித்து, அப்பம் சுட்டே எனது வாழ்க்கையை ஓட்டுகிறேன்.
இந்நிலையில், எனது மகளுக்கு ஏற்பட்டுள்ள இந்நிர்க்கதி நிலையை எண்ணி தான் பெரிதும் வருத்தமடைந்துள்ளதாகவும், தனது மகளின் விடுதலைக்காக முடியுமான ஒத்துழைப்பை தான் பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகவும்” தெரிவித்தார்.
இதனடிப்படையில், மேற்படி யுவதியின் விடுதலை தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தம்மால் இயன்ற உதவிகளை வழங்குவதாகவும், இது தொடர்பில், ஜனாதிபதி அவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்கக் கோரி கடிதமொன்றினை அனுப்புவதாகவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் தெரிவித்தார்.
அத்தோடு உரிய சட்ட ரீதியான உதவிகளைப் பெற்றுத் தருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதே வேளை, இந்த விடயம் தொடர்பில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவச் சபை உறுப்பினர்கள் 10ம் திகதி கொழும்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலொன்றினை நடாத்தியதுடன், இது தொடர்பான ஆவணங்களையும் கையளித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu1G.html

Geen opmerkingen:

Een reactie posten