தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 maart 2015

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது: இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்



இந்திய அரசாங்கத்தினால் தவறான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் படகுகள்: சீ.யோகேஸ்வரன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 06:17.22 AM GMT ]
வாகரை வட்டவானில் தமிழ் மக்கள் நூறு வீதமாக இருக்கின்றார்கள். ஆனால் அங்கு மீனவர் சங்கத் தலைவர் என்ற பெயரில் முஸ்லிம் ஒருவருக்கும் எகெட் நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட 29 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்திய அரசாங்கத்தாலும், எகெட் நிறுவனத்தாலும் கொடுக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் தவறான முறைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டும், சில விற்கப்பட்டும் இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாகரை காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் சீ.காளிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாகரை கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.பரமேஸ்வரன், கல்குடா கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரி.ரமேஸ், கல்குடா வலயக் கல்வி முறைசாராக் கல்வி இணைப்பாளர் செல்வி.சீ.லோகேஸ்வரி, பிரதேச பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்!
கல்வி செயற்பாடுகளில் அப்போது எமக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகளுக்கு எதிராக தற்போது அந்த மாகாண கல்வி அமைச்சினை ஆண்டவன் எங்கள் கட்சிக்குள் தந்திருக்கின்றான். நாங்கள் பாடசாலைகளில் தேவைகளை அறிந்து எவ்வாறான வசதிகளை மேற்கொள்ளலாம் என ஏற்பாடுகள் மேற்கொள்ள இருக்கின்றோம்.
அந்தவகையில் மத்திய இராஜாங்க கல்வி அமைச்சர் கௌரவ இராதாகிருஸ்ணன் மாகாண கல்வியமைச்சர் கௌரவ தண்டாயுதபாணி ஆகியோருடன் நாம் எமது மாவட்ட கல்வி நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் இயன்ற உதவிகளைச் செய்வதற்கும் தயாராக இருக்கின்றார்கள்.
எமது பகுதியைப் பொருத்த மட்டில் கடந்த காலச் சூழலினால் மக்கள் பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். எமது வளங்கள் பல சுரண்டப்பட்டிருக்கின்றது. எமது மக்கள் அறியாத வகையில் எமது காணிகளை பிடிக்கின்றார்கள். இவ்வாறு அத்துமீறி பிடிக்கின்ற காணிகள் பெரும்பாலானவை மேய்ச்சல் தரைக்கென்று ஒதுக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. காயான்கேணி பகுதியில் எமது இனம் சாராதவர்கள் பலர் மேச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணியை சுவீகரித்துள்ளனர்.
இந்தக் காணிகளுக்காக போலியான உறுதிகளைத் தயாரித்துக் கொண்டு வந்து இதனை மேற்கொள்கின்றார்கள். கொழும்பில் இருந்து வருகை தரும் தனவந்தர்கள் ஹோட்டல்கள் கட்டுவதற்காக குத்தகைக் காணிகளில் வந்து குடியிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாது சிலர் காயான்கேணி போன்ற பிரதேசங்களில் பிரதான வீதிகளை முற்றுகையிட்டு அடைத்துள்ளார்கள். இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகின்றோம்.
எமது மக்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். எமது அடிப்படைத் தேவைகளை பெறுவதற்கு எமது வளங்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். வெளியில் இருந்து வருபவர்கள் சரியான அனுமதிப் பத்திரம் இல்லாமல் உங்கள் காணிகளில் வந்து குடியிருந்தால் அல்லது அயல் காணிகளில் குடியிருந்தால் அது தொடர்பான தகவல்களை எமக்கு வழங்க வேண்டும். நாம் அவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
ஏனெனில் இது இந்தப் பகுதி மக்களுக்கு உரிய காணி இந்தப் பகுதியில் இருக்கும் கால்நடை வளர்ப்பதற்குரிய மேய்ச்சல் தரைக் காணி ஒரு காலத்தில் குத்தகைக் காணியை எடுத்தவர்கள் தற்போது அவற்றை விற்கின்றார்கள். காயான்கேணியில் ஒரு காணி 1942ம் ஆண்டு குத்தகைக்கு எடுக்கப்பட்டு அந்தக்காணி இன்னுமொரு நபருக்கு விற்கப்பட்டு தற்போது இன்னுமொரு பெரும்பான்மையினருக்கு விற்கப்பட்டடுள்ளது.
தற்போது அதற்கு பிழையான உறுதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு எதிராகவும் நாம் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். இது தொடர்பாக நாம் காணி அமைச்சிற்கும் காணி ஆணையாளருக்கும் கடிதம் அனுப்பி இருக்கின்றோம். பிழையான முறையில் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எக்காரணம் கொண்டும் இடமளிக்க மாட்டோம். அது போல் எமது மக்களின் அடிப்படை விடயங்களில் யாராவது தலையிட்டால் அதனையும் நாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
ஏனெனில் எமது மக்கள் கடந்த கால யுத்த சூழலாலும் சுனாமி அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது. எங்களது செயற்பாட்டிற்கு எமது மக்கள் பூரண ஒத்துழைப்பு தர வேண்டும். இனி பயப்பட வேண்டிய கவலை இல்லை. எமது மனித உரிமைகளுக்கு யாரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. இங்கு பல தேவைகள் இருக்கின்றது. இன்னும் சில மாதங்களில் வீட்டுத் திட்டங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன.
எனவே நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் எமது மக்களுக்கு பாதிப்பு தருவனவாக இருந்தால் அது தொடர்பாக மக்கள் எமக்கு தெரிவிக்க வேண்டும். எமது மக்கள் பாடசாலை, வீதி, குடிநீர் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகளை முகம் கொடுத்து வருகின்றார்கள். அது சார்பாக தீர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அது போல் பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைக்குரிய உதவிகளையும் நாம் மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.
கடந்த காலத்தில் எமது மக்களின் பெயரில் வேறு ஊரில் இருப்பவர்கள் உதவிகளைப் பெற்றிருக்கின்றார்கள். வட்டவானில் தமிழ் மக்கள் நூறு வீதமாக இருக்கின்றார்கள். ஆனால் அங்கு மீனவர் சங்கத் தலைவர் என்ற பெயரில் முஸ்லிம் ஒருவருக்கும் எகெட் நிறுவனம் மூலம் 29 இலட்சம் ரூபாவில் படகு உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. அது எவ்வாறு வழங்க முடியும். அது தவிர வாகரை பிரதேசத்தில் 27 பெரிய மீன்பிடி படகுகள் இந்திய அரசாங்கத்தாலும் எகெட் நிறுவனத்தாலும் கொடுக்கப்பட்டு தற்போது சில விற்கப்பட்டும் இருக்கின்றன.
காயான்கேணி மீனவர் கூட்டுறவுச் சங்கம் என்ற பெயரில் எகெட் நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட 29 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு வாழைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் அரசாங்க அரசியல்வாதியின் உறவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக வாகரைப் பிரதேசத்தில் முன்னாள் அரசாங்க அரசியல்வாதிகள் தமது ஆதரவாளருக்கும், உறவினர்களுக்குமே பெரும்பாலும் இப்படகுகளை வழங்கியுள்ளனர்.
எங்கள் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். நாம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருக்க மாட்டோம். எனவே எமது பாதிப்பின் மூலம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற உதவிகளை துஸ்பிரயோகம் செய்தவர்களை நாம் சட்டத்தின் முன் நிறுத்துவோம். எமது மக்களுக்கு யாரும் இனியும் அநீதி இழைக்க நாம் விடமாட்டோம் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlw5F.html

கோத்தாபாயவின் கணக்கு விபரங்களை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும்: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 06:30.20 AM GMT ]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவின் வங்கி கணக்கு விபரங்களை பத்திரிகையில் வெளிப்படையாக பிரசுரிக்க வேண்டும் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குற்ற புலனாய்வு பிரிவிடம் வேண்டுக்கோள் முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் கோத்தாபாய ராஜபக்சவின் வங்கி கணக்குகளை விசாரணை செய்ய குற்ற புலனாய்வு பிரிவிற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் பிரதான செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இதனால் தெளிவாக ஒன்று கேட்டுக்கொள்கிறோம் அவரின் வங்கி கணக்குகளை விசாரணை செய்வது மட்டுமின்றி குறித்த வங்கி கணக்குகளில் என்ன இருந்ததென வெளிப்படையாக பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் அப்படி இல்லையேல் அவர் குற்றமற்றவர் என கருதிவிடுவோம்.
மக்கள் பணத்தை கொள்ளையடித்து இவர்கள் வாழ்வதாக சமூகத்திடம், உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்வைக்க முயற்சிக்கிறார்கள் எனவும் தேசிய வீரர்களுக்கு சேறு பூச முயற்சிப்பதாகவும், பொம்மைகளை வீரர்களாக்கவும் சிலர் முயற்சிப்பதற்கு கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது: இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 06:35.33 AM GMT ]
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இலங்கை மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்யை தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை மீனவர்கள் சென்னை துறைமுகத்திலிருந்து 95 மைல்கல் தொலைவில் கிருஷ்ணாம்பட்டினம் அருகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டு துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் படகொன்றும், 220 கிலோ கிராம் மீனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை கச்சதீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
500 விசை படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த மீனவர்களை கடற்படையினர் தாக்கியுள்ளதுடன், மீன்பிடி சாதனங்களையும் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlw5I.html

Geen opmerkingen:

Een reactie posten