வாகரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரால் வீடுகள் கையளிப்பு - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:53.20 PM GMT ]
இந்திய அரசினால் வழங்கப்பட்ட நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் தேசிய நல்லிணக்க அரசை உருவாக்குவதற்கு முன்னோடியாக கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்க மாகாண அரசாங்கமொன்றை அமைத்து சகலரும் முன்மாதிரியாக விளங்கியதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
வட, கிழக்கு மாகாண மக்களே கடந்த மூன்று தசாப்த காலமாக புரையோடிப்போயிருந்த இனப்பிரச்சனையினால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
தமிழ், முஸ்லிம் , சிங்கள மக்களிடையே பரஸ்பர நல்லுறவு ஒழிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலமை ஏற்பட்டு இருந்தது மாத்திரமல்லாது, யுத்தம் இனமத பேதமின்றி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டது.
தற்போது இந்த மாகாணத்தில் அமைதி நிலவுகின்ற போதும் யுத்தத்தின் வடுக்கள் இன்னும் மாறவில்லை, கிழக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாகாண அரசு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முன்னுரிமை வழங்கியுள்ளது.
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியுள்ள தேசிய அரசை நாம் உருவாக்குவதில் இன்று வெற்றி கண்டுள்ளோம் எனவும், பல்வேறு கொள்கைகளையும், நிலைப்பாட்டையும் கொண்டுள்ள அரசியல் கட்சிகள் மாகாண அரசில் ஒருமித்து செயற்பட முன்வந்துள்ளமை எமக்கு கிடைத்த பெரும் வெற்றியே எனவும், கிழக்கு மாகாண முதல்வர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினி தேவி சாள்ஸ், திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செளியன், இராணுவத்தளபதி சாந்த குமார, பொலிஸ் அதிகாரி பாலித, வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரி கபித தவறாஜ், தேசிய பணிப்பாளர் திணேஷ் கனகரத்தினம் மற்றும் பல அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை
கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளை பயளனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட வீடுகளின் முதல் தொகுதி வீடுகள் இன்று புதன்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் மட்டுமே முதலமைச்சர் என்ற ரீதியில் கலந்து கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளியில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் வை. கே. சிஹ்கா கலந்து கொண்டு வீடுகளையும் அது தொடர்பிலான சட்ட ரீதியான ஆவணங்களையும் கையளித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 270 மில்லியம் அமெரிக்க டாலர் செலவில் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு இந்திய ஏற்கனவே முன் வந்துள்ளது.
குறித்த வீடுகளில் 4000 வீடுகள் கிழக்கு மாகாணத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வீடமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய நிகழ்வில் இரு பயனாளிகளுக்கு வீடுகளையும் 25 பேருக்கு அது தொடர்பான ஆவணங்களையும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கையளித்தார்.
வாகரை பிரதேச செயலாளர் ஆர். இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை. கே. சிஹ்காவுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் , மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlu0F.html
எழுந்திடு பெண்ணே சாதனை படைக்க: பா.அரியநேத்திரன்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 01:03.22 PM GMT ]
மட்டகளப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இப்பிரதேச மட்டத்தில் சமூக சேவையில் திகழும் பெண்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தன்நலம் கருதாது சமூகசேவையில் ஈடுபட்டுவரும் 6 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மதங்கள் ரீதியாகப் நோக்கும் போது பெண்களுக்கு அதிகளவு முன்னுரிமை கொடுத்தது இந்து மதம் தான், ஏனெனில் கல்வி, செல்வம், வீரம் போன்றவற்றிற்குரிய தெய்வங்களும் பெண் தெய்வங்களாகத்தான் இருக்கின்றன.
அதுபோன்று உலகத்திலே உள்ள 3200ற்கு மேற்பட்ட மொழிகளிலே தமிழ் மொழிதான் பெண்களுக்கு அதிக அந்தஸ்த்தை வழங்கியுள்ள போதிலும் வார்த்தையில் பெண்களை மத்திக்கின்ற தன்மை குறைவாகத்தான் இருக்கின்றன.
எனவே தமிழ் மொழியோ அல்லது சமயங்களோ பெண்களை வேறாக்கவில்லை மனிதர்கள்தான் பெண்களை வேறாக்கியுள்ளார்கள்.
கடந்த கால வரலாறுகளை நோக்கினால் பெண்களுக்கு உரிய அந்தஸ்த்து, சமத்துவம் வழங்கப்பட்டுள்ளது. எனவே சமத்துவம் எனறு கூறுபவர்கள் அவர்கள் சமத்துவமாக நடந்து கொள்கின்றார்களா? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் அதிகளவு பெண் உயர் அதிகாரிகளை விட அதிகளவு பெண் உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றார்கள்.
எனவே பெண்கள் தொழில் ரீதியாக உயர்ந்து கொண்டிருப்பதுடன், சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருந்தும் ஆணடிமைத்தனத்திலிருந்து விடுபட வில்லை என்ற கருத்து தற்போது மெல்ல, மெல்ல மாறிவருகின்றது.
இவ்வாறு பெண் விடுதலைக்கு வித்திட்டது எமது ஈழ மண்ணாகும். கடந்த கால வரலாற்றில் எமது தமிழ் பெண்கள் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் சாதனை படைத்துள்ளார்கள்.
இந்தியப்படையினருக்கு எதிராக கடந்த காலத்தில் முதலாவது தாக்குதல் நடத்தியவர்கள் எமது தமிழ் பெண்கள்தான்.
எனவே பெண்களின் விடுதலை, பெண்களின் சமத்துவம் என்பன இன்றும் எமது தமிழ் மண்ணில் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
இலங்கை பெண்கள் சாதனை படைப்பதற்கான சிறந்த நாடு இல்லை ஏனெனில் தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே பெண் விடுதலை என்பது வெறுமனே சுலோகங்களினாலும். உதடுகளினால் மட்டும் இருந்துவிட்டால் போதாது உள்ளத்தினால் பெண்களுக்கான கூதந்திரம் வழங்கப்படல் வேண்டும்.
இசைப்பிரியாவை துடிதுடிக்க கொன்ற நாடு, சின்னஞ்சிறிய சிறுமி விபூசிக்காவை சிறையில் அடைத்த நாடுதான் இந்த இலங்கை நாடு. இறுதி கட்ட யுத்தத்தின் போது 145000 பேர் இறந்திருக்கின்றார்கள் அவற்றில் 55 வீதமானவர்கள் பெண்கள் இவ்வாறிருக்கும் போது இது எங்கணம் பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நாடாக விளங்க முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பெண்களுக்கான சிறந்த நாடு வேண்டுமாக இருந்தால் தமிழ் மதங்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும். அப்போதுதான் பெண்களிற்கான சிறந்த நாடு உதயமாகும்.
இந்த நடைமுறையை மாற்றியமைக்க பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஜெயிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlu0G.html
Geen opmerkingen:
Een reactie posten