தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 maart 2015

போருக்குப் பின்னரும் பிளவுபட்டுக் கிடக்கும் வடக்கும் தெற்கும்



 [ புதினப்பலகை ]
தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்பேன் என கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைப்பாளரான 50 வயதான கிறிஸ்ரி சாந்தினி தெரிவித்தார்.
இவ்வாறு அமெரிக்கா ஊடகமான ‘லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்’ இல் SHASHANK BENGALI என்ற ஊடகவியலாளர் தனது யாழ்ப்பாணத்துக்கான பயணம் குறித்து விபரித்துள்ளார்.
சிறிலங்காவின் மிகவும் அழகான தென் கரையோரத்திலிருந்து வடக்கிலுள்ள யாழ்ப்பாணம் வரை நீண்டுசெல்லும் வீதியானது செப்பனிடப்பட்டு மிகவும் நேர்த்தியானதாகக் காணப்படுகிறது.
ஏ-09 நெடுஞ்சாலையில் 250 மைல் தூரப் பயணமானது பனை மரங்கள் மற்றும் பச்சைப் பசேலெனக் காணப்படும் விவசாய நிலங்கள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்நிலப்பகுதி சிறிலங்காவில் மூன்று பத்தாண்டாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது பிரதான போர்க்களமாகக் காணப்பட்டது.
சிங்களப் பெரும்பான்மையைச் சேர்ந்த இராணுவத்தினருக்கும் சிறுபான்மைத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் மிகவும் மோசமாக இடம்பெற்ற காலப்பகுதியில் ஏ-09 நெடுஞ்சாலையின் ஊடான பொதுமக்களுக்கான போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது.
தனிநாடு கோரிப் போராடிய தமிழ்ப் புலிகளின் பிரதான வழங்கல் பாதையாக ஏ-09 வீதி காணப்பட்டது.
பிரிக்கப்படாத சிறிலங்கா என்கின்ற கருத்தியலை தற்போதும் தக்கவைத்துக் கொள்வதற்கேற்ப வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைக்கின்ற ஒரேயொரு காரணியாக ஏ-09 நெடுஞ்சாலை அமைந்துள்ளது’ என ஊடகவியலாளர் சமந் சுப்ரமணியம் 2014ல் வெளியிட்ட “This Divided Island” என்கின்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
2009ல் தமிழ்ப் புலிகள் போரில் அழிக்கப்பட்ட பின்னர், போர் வடுக்களை அகற்றும் முகமாக ஏ-09 நெடுஞ்சாலையானது சிறிலங்கா அரசாங்கத்தால் செப்பனிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிங்களவர்கள் தமிழ்ப் பகுதிகளைப் பார்வையிடத் தொடங்கினர். இவர்கள் நீல நிறக் கோடுகளைக் கொண்ட சுற்றுலாப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
வடக்கில் பௌத்த வணக்க மையங்கள் மற்றும் போர் நினைவாலயங்களை சிங்களவர்கள் நிர்மாணித்துள்ளதைக் காணலாம். தமிழர்கள் இதனை நன்றாக அவதானித்துள்ளனர். சிங்கள மற்றும் தமிழ் சமூகத்தவர்களுக்கு இடையில் தற்போதும் தவறான புரிந்துணர்வே நிலவுகிறது.
கடந்த ஆண்டு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிநாட்டவர்கள் அனுமதியின்றி வடக்கிற்குள் உள்நுழைவதற்குத் தடைவிதித்திருந்தார்.
இத்தடையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் நீக்கிய பின்னர் நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ-09 நெடுஞ்சாலையின் ஊடாக ஒன்பது மணித்தியாலப் பயணம் மேற்கொண்டு தமிழர்களின் இதயபூமியான யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சென்றிருந்தேன்.
எனது சாரதியான நுவான் போர்க் காலத்தில் வளர்ந்தவர் என்பதால் பெரும்பாலான சிங்களவர் போன்று முன்னெடுப்போதும் வடக்கிற்குச் சென்றிருக்கவில்லை. இதுவே அவரது முதற்பயணமாகும்.
நாங்கள் கொழும்பிலிருந்து சென்று ஏ-09ல் பயணித்த போது நுவான் மிகவும் வியப்புற்றார். ஏ-09 வீதி மிகவும் நேர்த்தியாக செப்பனிடப்பட்டமையே இவரது ஆச்சரியத்திற்குக் காரணமாகும்.
நாங்கள் வாகனத்தில் பயணித்த போது ஏ-09 வீதியின் தரைத்தோற்றத்தை ஒளிப்படம் எடுத்தோம். திறப்பன என்ற இடத்தில் ராஜபக்சவின் மிகப் பெரிய தேர்தல் கால உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
இந்த உருவப்படத்தில் எப்போதும் போலவே ராஜபக்ச தன்னை ஒரு தூய சிங்கள பௌத்தன் என்பதை விளம்பரப்படுத்துவதைக் காணலாம்.
தெற்கில் சிங்கள பௌத்தர்களின் வணக்கத் தலங்களை மட்டுமே காணமுடிந்தது. ஆனால் தற்போது இந்துக் கோயில்களின் கோபுரங்களையும் பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களையும் நாங்கள் காணத் தொடங்கினோம்.
சிறிலங்கா அரசாங்கப் படைகளின் சோதனைச் சாவடி தற்போதும் காணப்படும் ஓமந்தையை நாங்கள் சென்றடைந்தோம். போர்க் காலப்பகுதியிலும் அதன்பின்னரும் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வெளிநாட்டவர்கள் தம்மைப் பதிவு செய்து இராணுவத்தின் விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டும்.
நாங்கள் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த பிற்பகலில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் என்னிடம் எதுவும் விசாரிக்கவில்லை. நுவான் தனது சாரதி அனுமதிப் பத்திர இலக்கத்தை இராணுவப் பதிவாளரிடம் கொடுத்த பின்னர் நாம் மீண்டும் எமது பயணத்தைத் தொடர்ந்தோம்.
வழமைபோன்று சிங்கள சுற்றுலாப் பயணிகளின் பேருந்துகள் வீதியோரங்களில் தரித்து நிற்பதையும் சிங்களச் சுற்றுலாப் பயணிகள் தமது குடும்பத்தவருடன் மரத்தின் கீழ் இளைப்பாறுவதையும் என்னால் காணமுடிந்தது.
புலிகளின் தலைநகரமாகக் காணப்பட்ட கிளிநொச்சியில் நிலத்தில் வீழ்த்தப்பட்டுள்ள மிகப்பெரிய நீர்த்தாங்கியின் அருகில் சில பேருந்துகள் தரித்து நின்றன.  போரின் போது வீழ்த்தப்பட்ட மிகப் பாரிய நீர்த்தாங்கியை சிறிலங்கா அரசாங்கம் போர் நினைவுச் சின்னமாக தக்கவைத்துள்ளது.
தற்போது இதனைச் சூழ பூமரங்கள் நடப்பட்டுள்ளன. அத்துடன் இங்கு பதிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கல்லில் ‘வீரம் மிக்க படையினர் பயங்கரவாதிகளைத் தோற்கடித்துள்ளனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கருகில் போர் நினைவுச் சின்னங்கள் பதிக்கப்பட்ட ரீசேட், தொப்பிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றும் உள்ளது.
இதனை சிங்களக் குடும்பங்கள் அதிகம் வாங்குகின்றனர். புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டமையை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதற்காகவே போர் நினைவகத்தை மகிந்த ராஜபக்ச நிறுவியுள்ளதாக தமிழ் மக்கள் சிலர் கூறினர். ராஜபக்சவின் இந்த ஏற்பாடானது தமிழ் மக்களை மிகவும் ஆழமாக வெறுப்பேற்றியுள்ளது.
இவ்வாறானதொரு நீர்த்தாங்கியை முன்னெப்போதும் காணாததாலேயே இவர்கள் அதனை ஒளிப்படம் எடுக்கிறார்கள். அவர்கள் இங்கு வருவது தொடர்பாக நாம் கவலைகொள்ளவில்லை.
ஆனால் தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்பேன் என கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைப்பாளரான 50 வயதான கிறிஸ்ரி சாந்தினி தெரிவித்தார்.
உள்நாட்டுப் போர் முடிவடைந்து சில ஆண்டுகளின் பின்னர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய பதுங்குகுழி ஒன்றை சாந்தினி பார்வையிட்டார்.
முல்லைத்தீவின் கரையோரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பதுங்குகுழி மக்களின் பார்வைக்காக விடப்பட்டது. இப்பதுங்குகுழியைத் தானும் தனது நண்பியும் சென்று பார்வையிட்டதாகவும் அப்போது சுற்றுலா வழிகாட்டி சிங்களத்தில் மட்டுமே பேசியதாகவும் அங்கு தாங்கள் இருவர் மட்டுமே தமிழர்கள் எனவும் ஏனையவர்கள் சிங்களவர்கள் எனவும் சாந்தினி நினைவுகூருகிறார்.
இப்பதுங்குகுழி பிரபாகரனின் வீரத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு சான்றாக அமைந்து விடலாமோ என்கின்ற அச்சத்தில் 2013ல் இது சிறிலங்கா அரசாங்கத்தால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நான் கொழும்பிற்குப் புறப்படுவதற்கு முன்னர் வங்கி ஒன்றைச் சென்று பார்வையிடுமாறு எனது நண்பர் ஒருவர் அறிவுறுத்தியிருந்தார்.
வடக்கில் பணம் இல்லாது நீங்கள் அலைந்து திரியத் தேவையில்லை. ஏ-09 வீதியில் ஆங்காங்கே வங்கிக் கிளைகள் உள்ளன என நண்பர் என்னிடம் கூறியிருந்தார். ராஜபக்சவின் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளில் இந்த வங்கிகளும் உள்ளடங்குகின்றன.
இருப்பினும் தமிழ் மக்களின் வாழ்வு இருட்டாகவே உள்ளது. இந்த வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் உந்துருளிகள் மற்றும் நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான இலகு கடன்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
இதனால் தமிழ் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல குடும்பங்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையிலுள்ளனர். இதுவும் தமிழ் மக்களை நசுக்குவதற்கான தென் சிறிலங்காவின் திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும்.
நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற மறுநாட் காலை சிங்களவர் ஒருவரைச் சந்தித்தேன். இவர் லொஸ் ஏஞ்சல்சில் தற்போது வசிக்கிறார். தற்போது தான் முதற்தடவையாக தனது தாயாருடன் சிறிலங்காவின் வடக்கிற்குப் பயணம் செய்திருந்தார். யாழ்ப்பாணம் மிகவும் அழகானது என அவர் என்னிடம் கூறினார்.
இவர் தமிழ் பேசும் சமையலறை உதவியாளருடன் என்னைப் போன்றே ஆங்கிலத்தில் தொடர்பாடுவதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டார்.
சிறிலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இச்சிங்களப் பயணியும், முதற்தடவையாகப் பயணித்துள்ள அமெரிக்கனான நானும் போரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட சமமான வெளிநாட்டவர் என நான் உணர்ந்து கொண்டேன்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx6D.html

Geen opmerkingen:

Een reactie posten