இலங்கை அரசாங்கம் கூறுவது போன்று, யுத்தம் நிறைவுக்கு வந்து சமாதான நாடாக உள்ளதாக கூறும் கருத்து உண்மையானதா என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது என செல்வி உமாசங்கரி நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் என்ற தலைப்பில் இடம்பெற்ற மகாநாட்டில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில்,
தமிழ் பாரம்பரிய, கலாச்சார விழுமியங்களுடன் தமிழகத்தில் வளர்ந்த எனக்கு, எனது இலங்கை வாழ் சகோதரிகள் முகங்கொடுக்க நேரிட்ட பாலியல் வன்புணர்வுகள் தொடர்பாக பேசுவதற்கு மிகவும் கவலைக்கிடமாகவும் வெட்கமாகவும் உள்ளது.
இலங்கை எனப்படுவது இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமையப் பெற்றுள்ள ஓர் தீவாகும்.
உங்களில் எத்தனை பேர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளீர்களென நான் அறியேன். அழகிய கடற்கரைகள் சூழ்ந்த, சரணாலயங்கள் நிரம்பப்பெற்ற அழகிய சுற்றுலாத் தளமாகவே இலங்கை அரசாங்கத்தினால் இந்நாடு வர்ணிக்கப்படுகின்றது.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச சமூகமோ இலங்கை தேசத்தை போர்க்குற்றச்சாட்டுகளிற்கும் மனித உரிமைகள் மீறல்களிற்கும் பதிலளிக்க வேண்டிய ஒரு தேசமாகவே காண்கின்றது. இதுவே உண்மை.
30 ஆண்டுகள் நீடித்த பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்து நாட்டினுள் சமாதனத்தை நிலைநாட்டி விட்டதாகவும் தற்சமயம் இதுவோர் சுற்றுலாத்தளம் என்றும் இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
இதுவா உண்மை? இல்லையேல் ஐக்கிய நாடுகள் சபை கூறுவதனைப் போன்று இலங்கையில் நடைப்பெற்று முடிந்த போரில் நிகழ்ந்த போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் நிலைப்பாடா உண்மையான நிலை.
மனித உரிமைகள் செயற்பாட்டாளராகிய நான், இலங்கை போரில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பல சாட்சிகளை பதிவு செய்துக் கொண்டேன். அதன் அடிப்படையில் இரு வினாக்கள் நம் கண்முன்னே விரிகின்றது.
முதலாவது, உண்மையாகவே இலங்கையில் போர் நிறைவுப்பெற்று சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதா?
இரண்டாவது, 2009ம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் இலங்கை வாழ் மக்கள் விசேடமாக தமிழ் பெண்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்கின்றார்களா? என்புதுவே அவையாகும்.
இதனை தந்திரோபாயமான வினா என்றும் கூறலாம். இலங்கை படையினரிடம் இருந்து பாதுகாப்பு அதாவது பாலியல் தொல்லைகளின்றி பாதுகாப்பு கிட்டவேண்டும்.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பல தமிழ் ஆண், பெண் கைதிகள் தடுப்பு காவல்களில் தொடர்ச்சியாகவே பாலியல் வன்புணர்விற்கு உட்பட்டுள்ளார்களென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் பிராட் அடம்ஸ் கூறுகின்றார்.
போர் முடிவுற்ற காலந்தொடக்கம் தமிழ் மக்கள் அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களை பாதுகாப்பு தரப்பினரின் அச்சுறுத்தல்களின்று காப்பது யார்? ஒருவரும் இல்லை.
பல்வேறுப்பட்ட ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கை வாழ் தமிழ் பெண்கள் போரின் பொழுதும் அதற்கு பிற்பட்ட காலங்களிலும் இலங்கை இராணுவத்தினரின் தொல்லைகளிற்கு உட்பட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலுடனேயே அந்நாட்டில் வாழ்கின்றார்கள்.
சர்வதேச ஊடகவியலாளரான பிரான்சிஸ் ஹரிசன் தன்னுடைய “ மரணங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன” எனும் புத்தகத்தில் இலங்கை இராணுவத்திடம் விசாரணைகளிற்காக சரணடையும் இளம் இலங்கை தமிழ் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாகுகின்றார்களென தெரிவித்துள்ளார்.
இக்கருத்தை மேலும் வலுவூட்டும் வகையில் பிரித்தானிய செனல்-4 ஊடகத்தில் காண்பிக்கப்பட்ட “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படத்திலும் இறந்த தழிழ் பெண்களின் சடலங்களின் ஆடைகளை களைந்து அவற்றை இலங்கை சிங்கள இராணுவத்தினர் பாலியல் வண்புனர்வுச் செய்கின்றார்கள்.
இச்செயற்பாடு இலங்கை இராணுவத்தினரின் கொடிய மனப்பான்மையினை மிகவும் தெளிவாக வெளிக்காட்டுகின்றது என தெரிவித்துள்ளார்.
ஐ.நா மண்டபத்தில் கண்ணீர் மத்தியில் ஈழப் பெண்கள், சிறுவர்கள் விவகாரம்
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் "OCAPROCE INTERNATIOAL" என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு ஒன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இம்மகாநாடு OCAPROCE INTERNATIOAL அமைப்பின் தலைவி தலைமையில் இடம்பெற்றதுடன், இதில் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளரான திருமதி செல்லத்துரை ரஜனி அவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மகாநாட்டில் தமிழ் நாட்டில் இருந்து பேராசிரியர் இராமு.மணிவண்ணன், உயர் நீதிமன்ற சட்டத்தரணி திருமதி.அங்கயக்கன்னி, செல்வி உமாசங்கரி நெடுமாறன் ஆகியோர் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பான விபரணம் செய்தனர்.
ஐ.நா மண்டபத்தில் தமிழ் இன அழிப்பு தொடர்பான சிறு படமும் திரையிடப்பட்டது. இதில் பங்கு பற்றிய அதிகமான தமிழ் பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRbSUlv1D.html
Geen opmerkingen:
Een reactie posten