தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 maart 2015

எமது இலக்கு பொதுவானதாக இருக்க வேண்டும்: சி.வி. விக்னேஸ்வரன்

சீன பணிப்பாளர்களின் கடவுச்சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளது
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 01:39.02 PM GMT ]
சீனத் துறைமுக பொறியியல் நிறுவன பணிப்பாளர்களின் கடவுச்சீட்டுக்களை முடக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
மத்தல விமான நிலையம், சூரியவௌ மைதானம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியவற்றின் உப-குத்தகைகார்களின் கட்டணப்பட்டியலை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்தே சீனத் துறைமுக பொறியியல் நிறுவன பணிப்பாளர்களின் கடவுச்சீட்டுக்களை முடக்குமாறு இன்று திங்கள் கிழமை இவ் உத்தரவு நீதிபதியால் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
‘சைனா ஹாபர் என்ஜினியரிங் கொம்பனி லிமிடெட்டின்’ பணிப்பாளரது கடவுச்சீட்டை இன்று நீதிமன்றம் முடக்கியது
மத்தள விமான நிலையம் மற்றும் சூரியவேவ கிரிக்கெட் மைதானம் மற்றும் கொழும்பு போட்சிட்டி ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளை மேற்கொண்ட உப கொந்தராத்துக்காரர்களுக்கு கொடுப்பனவுகளை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஹாய் செய் நிர்மாண நிறுவனத்தின் சந்தன புஸ்பலால் என்பவர், பொலிஸில் செய்த முறைப்பாட்டில், சைனா ஹாபர் என்ஜினியரிங் கொம்பனியே மத்தள விமான நிலையம், சூரியவேவ மற்றும் கொழும்பு போட்சிட்டி ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் தாம் குறித்த நிறுவனத்தின் உபகொந்தராத்தை பொறுப்பேற்று நடத்திய போதும் அதற்கான கொடுப்பனவுகளை சைனா ஹாபர் நிறுவனம் வழங்கவில்லை என்று சந்தன புஸ்பலால் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், சைனா ஹாபர் நிறுவன பணிப்பாளர் நாட்டில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது அவரை கைது செய்தனர்.
இன்று அவர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை நான்கு பேரின் சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.


மகிந்த யாழ்ப்பாணத்தில் நிர்மாணித்த அரச மாளிகையில் ஆடம்பர அறைகள்: ரணில்
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 01:49.46 PM GMT ]
யாழ்ப்பாணத்திற்கு தான் விஜயம் செய்திருந்த போது அங்கு நிர்மாணிக்கப்பட்ட அரச மாளிகையை பார்க்க சென்றதாகவும் அதனை நிர்மாணிக்க ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இன்று நடைபெற்ற இலவச வைபை வலயத்தை ஆரம்பித்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
யாழ்ப்பாண மாளிகையில் 10 அறைகள் உள்ளன. இரண்டு உணவு அருந்தும் அறைகள் உள்ளன. சமையல் அறை அரை மைல் தூரம் செல்ல வேண்டும்.
ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கு தனித் தனியான அறைகள் உள்ளன. ரயில் நிலையத்திற்கு பயன்படுத்தக் கூடிய அளவில் அந்த அறைகள் பெரியதாக இருக்கின்றன.
உணவறைகள், ஏனைய அறைகள் மற்றும் நீச்சல் தடாகம் என்பன மிகவும் ஆடம்பரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
200 ஏக்கர் நிலத்தில் இப்படியான ஆடம்பர மாளிகையை நிர்மாணிக்கும் போது பட்டினியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அதனை பொறுத்து கொண்டிருந்தது மிகவும் ஆச்சரியமானது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து நின்ற பிரதமர்
ஒரு மன்னர் போன்று வாழ நினைத்து யாழ்.காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து நின்ற பிரதமர் மாளிகையை சுற்றிச் சுற்றிப் பார்த்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றது.
வடக்கிற்கு 3 நாள் விஜயமாக வருகை தந்திருக்கும் பிரதமர் இன்றைய தினம் காங்கேசன்துறை மற்றும் பலாலி பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது காங்கேசன்துறை பகுதியில் மஹிந்த அமைத்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையை, பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது மிகப்பெருமளவு நிதியில் மிக பிரமாண்டமான அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தையும், பெறுமதியான பெட்டகங்கள், மற்றும் தளபாடங்களை பார்த்து பிரதமர் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
தனது சகாக்களுடன் சென்ற பிரதமர் குறித்த மாளிகையின் நீர்த்தடாகம், அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தூண்கள், விலையுயர்ந்த கூரை விளக்குகள், மற்றும் நீச்சல் தடாகம் மற்றும் பாதுகாப்பு அறை ஆகியவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளதுடன், தனது சகாக்களுக்கும் கூறியிருக்கின்றார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் தேனீர் அருந்திய பிரதமர் குறித்த மாளிகையை அமைத்து வந்த கடற்படையினரை அழைத்து இந்த மாளிகை அமைக்கும் பணிகளை நிறுத்தவேண்டாம் உடனடியாக தொடருங்கள் என கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx6H.html

எமது இலக்கு பொதுவானதாக இருக்க வேண்டும்: சி.வி. விக்னேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 03:10.12 PM GMT ]
இலங்கையில் வடமாகாணம் மட்டுமே தமிழ் பேசும் முதலமைச்சரைக் கொண்டு இப்பொழுது இயங்குகின்றது என்று தெரிவித்துள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்.
யாழ். இந்து மகளிர் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் அவர்,
சிறிது சிறிதாக  அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன. இன்று நல்லாட்சிக்கு வித்திட வேண்டும் என்பதுதான் எங்களதும் மத்தியில் இருக்கும் அரசாங்கத்தினதும் குறிக்கோள் ஆகும்.
நல்லாட்சி என்பது வெறும் பெயரளவிலான ஒரு கொள்கையாகாது. எமது ஒவ்வொரு நடவடிக்கையும் மற்றவர்கள் பார்வைக்கும், மதிப்பீட்டுக்கும், கணிப்புக்கும் ஆளாகவேண்டிய ஒரு நிலைகூட நல்லாட்சியே.
மக்களின் மனமறிந்து, தேவையறிந்து, அவர்களின் சிந்தனை செல்திசையறிந்து மாண்புடன் பயணம் செய்வதும் நல்லாட்சியே. ஐக்கிய நாடுகள் எட்டுக் கருத்துக்களை நல்லாட்சிக்குரிய குணாம்சங்கள் என்று அடையாளம் கண்டுள்ளார்கள். அவையாவன –
01. ஐக்கியப்பாட்டுடன் ஆட்சி நடத்துதல்.
02. பங்குபற்றலுடன் ஆட்சி நடத்துதல்.
03. சட்டத்திற்கு அமைவாக ஆட்சி நடத்துதல்.
04. பயன் அளிப்பதாகவுந் திறனுடையதாகவும் ஆட்சி நடத்துதல்.
05. பதிலளிக்குந்தன்மைக்கு அமைவாக ஆட்சி நடத்துதல்.
06. வெளிப்படையான தன்மையுடன் ஆட்சி நடத்துதல்.
07. மக்கள் மனமறிந்து ஆட்சி நடத்துதல்.
08. நேர்மையாகவும் அணைப்புடனும் ஆட்சி நடத்துதல்.
ஐக்கியப்பாட்டுடன் ஆட்சி நடத்துவது என்பது எமது செல்நோக்குகளை, இலக்குகளை எல்லோரும் புரிந்து கொண்டு முன் செல்லல். பட்டதாரிகளான நீங்கள் இதை நன்றாகப் புரிந்திருப்பீர்கள்.
வடமாகாணம் ஒன்று தான் ஒரேயொரு தமிழ்ப் பேசும் முதலமைச்சரைக் கொண்டு இப்பொழுது இயங்குகின்றது. இம்மாகாண மக்களில் பெரும்பான்மையோர் தமிழ்ப் பேசும் மக்கள்.
ஆகவே எமது செயல்பாடுகளாவன தமிழ் பேசும் எம் மாணவ மாணவியர்க்குத் தமது பாரம்பரியங்கள் பற்றி, தமது சிறப்பியல்புகள் பற்றி, தமது குறைபாடுகள் பற்றி போதியவாறு அறிய நாம் துணைபோவதாக அமைய வேண்டும். ஆட்சியில் ஐக்கியப்பாடு என்னும் போது ஆட்சியின் அலகுகளான நீங்களும் அதனுள் ஏற்கப்படுகின்றீர்கள். 
எமது    இலக்கு பொதுவானதாக இருக்க வேண்டும். அந்தப் பொதுத் தன்மையையே நாங்கள் ஐக்கியப்பாட்டுடனான ஆட்சி நடத்தல் என்கின்றோம். அமைச்சர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் என்ற பாகுபாடுகளுக்கு அப்பால் ஒரு திடமான முன்நோக்கை வைத்துப்பயணம் செய்வதையே இது வலியுறுத்துகின்றது. பங்குபற்றல் என்று கூறும் போது எந்த ஒரு முரனான கருத்துடையவர்களையும் புறந்தள்ளி வைக்காது இருத்தலாகும்.
எல்லோர் கருத்தையும் நாம் ஏற்று நடக்க முடியாது. ஆனால் கருத்துக் கூறுபவருக்கு மதிப்பளித்து அதே நேரம் அவரின் கருத்தை மறுதளிக்கலாம். சட்டத்திற்கு அமைவாக ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தேதும் இருக்கத் தேவையில்லை.
சட்டம் சமூகத்தின் ஒழுங்கமைப்பையும் ஒழுக்க முறையையும் நிர்ணயிக்கின்றது.அதற்கமைவாக எமது ஆட்சி நடைபெற வேண்டும் என்று கூறுவதால் சமூகத்தில் முரண்பாடுகள் ஏற்படாதவாறு எமது ஆட்சி அமைய வேண்டும் என்றாகிறது.
எமது ஆட்சி முறை பயனளிப்பதாக இருக்க வேண்டும். திறன் உடையதாகவும் இருக்க வேண்டும். இது ஆசிரியர்களாகப் போகும் உங்களுக்கு முற்றிலும் பொருந்தும். மாணவ மாணவியர்க்குப் பயனளிப்பதாகவும் ஆசிரியத் திறன் உடையதாகவும் உங்கள் சேவை அமைய வேண்டும்.
பதிலளிக்கும் தன்மை என்பது மிக முக்கியமானதொன்று. நாங்கள் அரச ஊழியர்கள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள்.ஆகவே எங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது என்று நடந்து கொள்வது தவறான, பிறழான பல விமர்சனங்களை எம் மக்கள் அரசியல் காரணங்களுக்காகவும், பொறாமையாலும், பொறுக்கமாட்டாத் தன்மையாலும் முன்வைக்க எத்தனிக்கின்றார்கள்.
அதற்காக நாங்கள் எமது பதிலளிக்கும் தன்மையைக் கை விடலாகாது.'உண்மை வெல்லும்' என்ற நம்பிக்கையுடன் நாம் முன்னேற வேண்டும். வெளிப்படைத்தன்மை தொடக்கத்திற்குரியது என்றால் பதிலளிக்குந்தன்மை முடிந்த பின் எழுவது.
நாம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்கின்றோம் என்றால் எமது நடவடிக்கைகள் சட்டத்திற்கு அமைவாக, நியாயத்திற்கு அமைவாக சம்பிரதாயங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும்.
சுயநல நோக்குடன் அமையலாகாது. எப்பொழுது நாங்கள் வெளிப்படைத்தன்மையைப் புறக்கணிக்கின்றோமோ அப்பொழுது ஏதோ ஒரு சுயநலம் கலந்த நன்மையை நாங்கள் பெற உத்தேசித்துள்ளோம் என்று அர்த்தமாகும்.அடுத்த குணாம்சம் மக்கள் மனமறிந்து செயலாற்றுவது. Responsive என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, மறுமொழி கூறுவதும் இதனுள் அடங்கும். ஆனால் பதிலளிக்குந் தன்மை என்பதில் அதை நாங்கள் ஏற்கனவே கூறிவிட்டோம். மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து கடமையாற்றுவதே இந்தக் குணாதிசயம். அனைத்து முன் செல்வதானால் நாம் நேர்மையாக நடந்து கொள்வது அவசியம்.
இந்த எட்டு குணாதியசயங்களையும் ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளதென்றால் ஒரு நாட்டின் அரசாங்கம், ஒரு நிறுவனத்தின் ஆட்சி முறை சில சட்டதிட்டங்களுக்கு, கொள்கைகளுக்கு, நடைமுறைகளுக்கு நன்கு கட்டுப்பட்டு நடாத்தப்பட வேண்டும் என்ற கருத்தையே உள்ளடக்கியுள்ளது எனலாம்.
தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது பட்டதாரிகளான உங்களுக்கு அழகல்ல. நீங்கள் எங்கள் சமுதாயத்தின் அறிவுசார் அலகுகள். ஆட்சி முறை பற்றியும் அதிலுள்ள அதி சூட்சுமங்கள் பற்றியும் அறிந்திருப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்ற எண்ணத்தினால்தான் இச்சிற்றுரையை இவ்வாறு அமைத்தேன்.
வடமாகாண பட்டதாரி ஆசிரியர்கள் சகல விதங்களிலும் சிறந்து விளங்க வேண்டும். எமது மாணவ சமுதாயம் உங்கள் தன்னலங்கருதாத சிறந்த சேவை மூலம் நல்ல பெறுபேறுகளைப் பெற வேண்டும். உங்களுக்கான வாழ்க்கை அனுசரணைகள் நன்றாக அமைய வேண்டும் என்றார். 
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx7A.html

Geen opmerkingen:

Een reactie posten