தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

50 நாட்களுக்குள் நாமும் எம் குழந்தைகளும் பட்டினிச்சாவை எதிர்நோக்க நேரிடும்: இராமேஸ்வரம் மீனவர்கள்

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளால் இன்னும் 50 நாட்களுக்குள் தாமும் தமது குழந்தைகளும் பட்டினிச்சாவை எதிர்நோக்க நேரிடும் என இராமேஸ்வரம் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம். அப்போது இலங்கை சென்று தாம் முடிவு எடுப்பதாக தெரிவித்திருந்த இலங்கை அரசாங்கம் இப்போது கச்சதீவுப் பகுதியில் கடற்படையினரை குவித்து வைத்துள்ளமையானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமேஸ்வரம் பகுதியில் மட்டும் 800 விசைப்படகுகளும் 5 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும் அதனை நம்பி சுமார் 50 ஆயிரம் சார்புத் தொழிலாளர்களும் உள்ளோம்.
இந்த நிலையில் கச்சதீவுப் பகுதியில் கடற்படை குவிப்பினைத் தொடர்ந்து நாம் தொழிலுக்குச் செல்லவில்லை, மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளன. இதனால் இத்தொழில் சார்ந்த அனைவரும் பெரும் நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளோம்.

மேலும் தடைக்காலத்திற்கு இன்னும் இரண்டு வார காலம் உள்ள நிலையில் இலங்கை அரசின் மேற்படி நடவடிக்கையினால் நாம் தொழிலுக்குச் செல்ல அச்சமாகவுள்ளது என்றும் இவ்வாறான நிலை நீடித்தால் இன்னும் 50 நாட்களுக்குள் நாமும் எம் குழந்தைகளும் பட்டினிச்சாவை எதிர்நோக்க நேரிடும் எனவும், இலங்கை அரசு நாளுக்கு நாள் கச்சதீவு தொடர்பில் பல அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய அரசு வாய்மூடிக் கொண்டிருப்பது வேதனையளிப்பதாகவும் படகு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அரசிடம் மீன்பிடி உரிமையைப் பெற்றுத்தராவிடினும் கொடுத்த கச்சதீவையாவது மீட்டுத் தாருங்கள் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மத்திய மாநில அரசுகள் எமது வாழ்வாதாரத்தை காப்பாற்றவேண்டும் இல்லையேல் இத்தொழிலை நம்பியுள்ள இந்த மாவட்ட மீன்பிடி தொழிலாளர்களையும் சார்பு தொழிலாளர்களையும் காப்பாற்ற முடியாது எனவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒருங்கிணைந்த போராட்டதை டெல்லியில் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் சிறுபான்மையினர் விசைப்படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko2F.html

Geen opmerkingen:

Een reactie posten