தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 maart 2015

இவர்களை எப்படி மன்னிக்க முடியும்? - புகழேந்தி தங்கராஜ்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை அறிந்ததும், உடுக்கை இழந்தவன் கைபோல நீண்டிருக்கவேண்டும் பாரதத்தின் கை. ஆனால், கொல்லப்பட்ட எம் உறவுகளைக் காப்பாற்ற நீளாமல், கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுக்க இந்த தேசத்தின் கை நீண்டது.
'வெல்க தமிழ்' என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்கிறவர்கள் மட்டுமே தமிழனின் முதுகில் குத்துவதில்லையாம்.....! அப்படியெல்லாம் எழுதி ஒட்டிக்கொள்ளாதவர்களும் இதைத்தான் செய்கிறார்களாம்...! 'அவர்களையெல்லாம் கண்டித்திருக்கிறீர்களா' - என்கிற புதிய கேள்வியோடு புறப்பட்டிருக்கிறார்கள் என் பழைய நண்பர்கள்.
'தமிழக அரசியலில்' இந்த ஊடக அதர்மத்தைப் பற்றி, பாரபட்சம் இல்லாமல், அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் இதை அறிவார்கள்.
திரைப்படத் தொழிலில் இருப்பவன் நான். என்னுடைய படத்துக்கு ஊடகங்களின் வாயிலாக இயல்பாகக் கிடைக்க வேண்டிய விளம்பர வெளிச்சம்கூட இதன்காரணமாகப் பாதிக்கப்படக் கூடும். அதற்குப் பயந்து, எம் இனம் முதுகில் குத்தப்பட்டால் எனக்கென்ன - என்று நான் மௌனம் சாதிக்க முடியாது.
எனது சமகாலத்தில் உண்மையான மனிதர்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தனது அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை 'வெல்க தமிழ்' கோஷ்டி தொடர்ந்து இருட்டடிப்பு செய்வது குறித்து வைகோ கவலைப்படுகிறாரா என்ன?
என்னால் மனிதர்களை மட்டும்தான் மதிக்க முடியும்....! எம் இனத்தின் குரல்வளையைப் பிடித்து நெறித்தபடியே, 'தாய்த் தமிழ் காக்க இறுதிமூச்சைக் கூட விட்டுவிடுவோம்' என்றெல்லாம் புல்புல்தாரா வாசிப்பவர்களைப் பார்த்து நான் 'பொய்'சிலிர்த்துவிட முடியாது.
இதை நான் சொல்வது இன்றோ நேற்றோ அல்ல! 'புலிகளைப் போற்றும் திரைப்படம்' என்கிற குற்றச்சாட்டையும், அதனால் விதிக்கப்பட்ட தடையையும் தகர்த்தெறிந்துவிட்டு 2001ல் வெளியான என்னுடைய 'காற்றுக்கென்ன வேலி' திரைப்படம் இந்த உண்மையைத்தான் உரக்கச் சொன்னது. அதன் கதைத்தலைவி மணிமேகலை இதைத்தான் பேசினாள்.
பரந்தனில் நடந்த மோதலில் படுகாயமடைந்த மணிமேகலைக்கு, நாகப்பட்டினம் மகாத்மா காந்தி மருத்துவ மையத்தில் சிகிச்சை நடக்கிறது. அவளைத் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது காவல்துறை. அவள் உயிரைக் காப்பாற்றப் போராடும் மருத்துவர் சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்படுகிறார், சித்திரவதை செய்யப்படுகிறார்.
'மருத்துவக் கல்லூரியில் படித்தபோதே புலிகளுக்காக போஸ் ஆயுதம் கடத்தினார்' என்று கூசாமல் பேசும் சுவாமி என்கிற அரசியல் அசிங்கத்தின் புளுகுமூட்டையை நம்மிடையே பரப்ப, இங்கேயிருக்கும் ஊடகங்கள் துணைபோகின்றன.....! இதெல்லாம், அரசு விதித்த தடையை நீதிமன்றத்தில் உடைத்த காற்றுக்கென்ன வேலியில் இடம்பெற்ற காட்சிகள்.
என்னைக் காப்பாற்ற உன்னை வருத்திக் கொள்வது என்ன நியாயம்? என்னைத் திருப்பி அனுப்பிவிடு' என்று, சிகிச்சை முடியாத நிலையில், சுபாஷிடம் கேட்கிறாள் மணிமேகலை. 'அங்கே மருத்துவமனை இருக்கிறதா? மருந்து இருக்கிறதா' என்றெல்லாம் சுபாஷ் திருப்பிக் கேட்க, "அங்கே போனால் செத்துவிடுவேன் என்று அஞ்சுகிறாயா?
அப்படியே சாக நேர்ந்தாலும் என் மண்ணில்தான் சாவேன்.... இந்த மண்ணில் சாகமாட்டேன்' என்கிறாள் மணி ஓர்மத்துடன்! அது, சுபாஷுக்குச் சொல்கிற பதில் அல்ல! 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்று உதார் விட்டபிடியே சொந்த இனத்தின் முதுகில் குத்தத் தயங்காத துரோகத் தமிழ்நாட்டைத் தோலுரிக்கிற பதில்.
கொல்க தமிழரை' என்று உள்ளத்துக்குள் முழங்கியபடியே 'வெல்க தமிழ்' என்று உதட்டால் பேசிய நயவஞ்சகர்களை, மொழியைக் காட்டி நம்மைக் கழுத்தறுத்த கனவான்களை, எனக்கு அடையாளம் காட்டியவர்கள், எம் தாய்மொழிக்காக உண்மையிலேயே தங்களை அர்ப்பணித்த பாவாணர், இளவரசு போன்றவர்கள்தான்.
வெல்க தமிழ்' என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளாதவர்கள் நம் முதுகில் குத்துவதேயில்லையா - என்று கேட்கிற நண்பர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிரந்தர எதிரிகளான அவர்கள் நம் முதுகில் குத்துபவர்களில்லை; நம் இதயத்தில் ஈட்டி பாய்ச்சுகிறவர்கள். எதிரிகளை நாம் எதிர்கொள்ள முடியும்.
வெல்க தமிழ்' என்று சொன்னபடியே முதுகில் குத்துபவர்களை எப்படி எதிர்கொள்வது? இதைத்தான் கேட்கிறேன் நான். இது உங்களுக்குப் புரியவேயில்லையா? அல்லது, 'வெல்க தமிழ், கொல்க தமிழரை' என்கிற கொள்கையை அதிதீவிரமாக ஆதரிக்கிறீர்களா?
பூசி மெழுகியெல்லாம் பேசவில்லை நான். என்னுடைய குற்றச்சாட்டுகள் வெளிப்படையானவை. இனத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமையைத் தோலுரிக்கத் தயங்கியவர்கள், இனத்தைக் காக்க போராடியவர்கள் முகத்தில் சேறு பூச முயன்ற பிறகுதான் பேசினேன் நான். என்ன தவறு இதில்? உதவி செய்ய முயலாதவர்கள், உபத்திரவம் மட்டும் செய்கிறார்களே, ஏன்?
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை அறிந்ததும், உடுக்கை இழந்தவன் கைபோல நீண்டிருக்கவேண்டும் பாரதத்தின் கை. ஆனால், கொல்லப்பட்ட எம் உறவுகளைக் காப்பாற்ற நீளாமல், கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுக்க இந்த தேசத்தின் கை நீண்டது. அப்போதுதான் தேசம் என்கிற நம்பிக்கையில் நாங்கள் நாசமாகியிருப்பதை உணர்ந்தோம்.
எம் இனத்தைக் கொல்ல கொலைவெறியோடு உதவிய ஒரு மண், எம் தாய்மண்ணாக எப்படி இருக்க முடியும்? அதனால்தான், 'இந்தியா தான் என் மதம்' என்கிற மோடித்தனத்திலோ, 'வெல்க தமிழ்' மோசடித்தனத்திலோ ஊறித் திளைக்க எங்களால் முடியவில்லை.
நடந்தது இனப்படுகொலை - என்கிற அப்பட்டமான உண்மையை மூடிமறைக்க முயல்கிறவர்கள்.....
திட்டமிட்டு எம் இனத்தை அழித்த சிங்கள மிருகங்கள் சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறவர்கள்.....
சிங்களப் பயங்கரவாதிகளிடம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டு, தமிழர்களுக்காகப் போராடியவர்கள்தான் பயங்கரவாதிகள் என்று கயிறுதிரிக்கப் பார்ப்பவர்கள்....
இவர்களை எப்படி மன்னிக்க முடியும்?
நடந்தது இனப்படுகொலை தான் - என்று தெள்ளத்தெளிவாகத் தெரிவிக்கிறார், இன அழிப்பு நடந்த மண்ணின் முதல்வர் விக்னேஸ்வரன். அது செய்தியில்லை இவர்களுக்கு!
காணாமல் போனவர்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது - என்கிறார் விக்னேஸ்வரன். அதுவும் செய்தியில்லை இவர்களுக்கு!
இலங்கையின் தேசியகீதத்தைத் தமிழிலும் பாடலாமாம் - அதுதான் இவர்களுக்குச் செய்தி என்றால், இவர்கள் யார்? இவர்கள் எவருடைய ஏஜென்ட்? எவரிடம் இவர்கள் எதைப் பெறுகிறார்கள்?
கேஸ் சேம்பருக்குள் யூதர்களை அனுப்புவதற்கு முன், 'ஜெர்மன் தேசியகீதத்தை ஹீப்ரு மொழியிலும் நீங்கள் பாடலாம்' என்று ஹிட்லர் பெருமான் பரிவுடன் சொல்லியிருந்தால் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கிறது இது! போங்கடா நீங்களும் உங்கள் 'வெல்க தமிழ்' மோசடியும் என்று நான் கோபப்படுவதற்கு இதைக்காட்டிலும் வேறு காரணம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா இவர்கள்.
காங்கிரஸோ, பாரதீய ஜனதாவோ, இந்த இரண்டு நம்பிக்கைத் துரோகிகளால் வழிநடத்தப்படும் இந்த பாரதமோ எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்கப் போவதில்லை. கொலையாளிக்குத் தான் இவர்கள் துணை போவார்கள்.
இவர்கள் ஈழம் வாங்கிக் கொடுப்பார்கள் என்று நினைப்பது மாதிரி ஒரு இளிச்சவாய்த்தனம் வேறு எதுவும் இருக்கமுடியாது. ஆனால், சொந்தத் தாயகத்துக்காக உயிர்நீத்த சுமார் 3 லட்சம் மக்களின் உயிர்த்தியாகம் வீண்போய்விடாது. (அவர்களில் ஒன்றரை லட்சம் பேர் 2009ல் கொல்லப்பட்டவர்கள்.)
3 லட்சம் தமிழரின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்ட ஒரு மண்ணில் ஈழம் அமைவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது..... ஈழம் அமையும்.... அந்த மண்ணில் எம் தேசியக் கொடி வானுயரப் பறக்கும்..... அப்போது அந்த வீரத்தமிழ் மண்ணில் எமக்கான தேசிய கீதம் தமிழில் தான் பாடப்படும்.
'இலங்கையின் தேசியகீதத்தைத் தமிழில் பாடலாம்' என்று நாக்கூசாமல் இன்று பேசுகிற பேர்வழிகள், எட்ட இருந்துதான் அதை வேடிக்கை பார்க்க வேண்டும். வாழைப்பழத்துக்குள் கழிவைத் திணித்து எம் வாயில் புகட்ட முயற்சிக்கிற இவர்கள், ஈழத்தின் தேசிய கீதத்தைத் தங்கள் கழிவுத் திருவாயால் பாடி களங்கப்படுத்தி விடக்கூடாது.
நாம் இளிச்சவாயர்கள் - என்று இந்தியத் திருநாடும் ஊடகங்களும் நம்புகிறார்கள் என்றால், 'இந்தியா மாதிரி ஒரு இளிச்சவாய் நாடு வேறு எதுவும் இருக்க முடியாது' என்று உறுதியாக நம்புகிறது இலங்கை. மோடி போவதற்கு 24 மணி நேரத்துக்கு முன், சீனாவின் துறைமுக நகர்த் திட்டத்தை முடக்கி வைப்பதாக அறிவிக்கிறது.
மோடி கொழும்பிலிருந்து புறப்பட்ட அடுத்த நொடியே, 'சீனாவின் துறைமுகத் திட்டத்துக்கு மீண்டும் அனுமதி' என்று அறிவித்து மோடியின் முகத்திலும் 120 கோடி இந்தியர் முகத்திலும் கரி பூசுகிறது. மன்மோகன் முகத்தில் நிலக்கரியை பூசுவதிலேயே குறியாயிருக்கும் மோடி சர்க்கார், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் என்றா நினைக்கிறீர்கள்!
மைத்திரிபாலா இந்தியா வந்ததாலும், மோடி இலங்கை சென்றதாலும் ஒன்றே ஒன்றுதான் சாத்தியமாகியிருக்கிறது. அது - இலங்கை செய்த இனப்படுகொலைக்காக மகிந்த மிருகம் சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதை மேலதிகமாகத் தாமதப்படுத்துவது மட்டும் தான்! காங்கிரஸ் அரசு, அந்த மிருகத்தை காமன்வெல்த் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததைப் போலவே, அந்த மிருகத்தின் இன அழிப்புக் கனவை நிறைவேற்றிய சரத் பொன்சேகா என்கிற அடிஷனல் மிருகத்தை இந்தியாவுக்கு அழைத்து, அதைக் குளிப்பாட்டி விடுகிறது ராஜ்நாத் சிங்கின் அமைச்சரவை. எதையோ குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்பதைப் போல் இருக்கிறது இது.
பயங்கரவாதத்தை ஒழித்தது எப்படி - என்று ராஜ்நாத் தயவில் இங்கே வந்து பாடம் நடத்துகிறது, பொன்சேகா என்கிற அந்தக் கூடுதல் மிருகம். 'இலங்கையின் அதிதீவிர பயங்கரவாதி ராஜபக்சேவும், தமிழினத்தைக் கொன்று குவிக்கும் இலங்கையும் தான்' என்கிற உண்மையை உரக்கப் பேசிய லீ குவான் யூ என்கிற உலகத் தலைவர் உயிரிழந்த வாரத்தில், அந்த உண்மையை அடியோடு மறந்துவிட்டு பொன்சேகாவுடன் சேர்ந்து கும்மியடிக்கிறது மோடி அரசு.
அந்த அடிஷனல் மிருகத்தை கமலாலயத்துக்குக் கூட்டி வந்து, குளிப்பாட்டினால் நாம் கேள்வி கேட்கப் போவதில்லை. சுவாமியைக் கூட்டி வந்து குளிப்பாட்டவில்லையா என்ன? எம் இனத்தை அழித்தவனை எம் வரிப்பணத்தில் வரவழைத்து விருது கொடுப்பது எவராயிருந்தாலும் அவர்களை எம்மால் மன்னிக்க முடியாது. (பொன்சேகாவைக் கூட்டிவந்து குளிப்பாட்டியதை இங்கேயிருக்கிற 'புத்திசாலி'கள் திட்டமிட்டு மறைக்கிறார்களே... கவனித்தீர்களா?)
எமக்கான தேசம் - எம் தாய்த் தமிழ் ஈழம் அமையும் போது, 'சிங்களப் பயங்கரவாதத்தை ஒழித்தது எப்படி' என்கிற பேருரைகள் தான் உலக அரங்குகள் அனைத்திலும் இடம்பெறும். அப்போது, சரத் பொன்சேகா அல்லது ராஜபக்சேவிடம் ஆசிபெற மோடியோ ராஜ்நாத்சிங்கோ சோனியாவோ விரும்பினால் 'ஹேக்' நகருக்குத் தான் போகவேண்டியிருக்கும். இதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. (இப்படியெல்லாம் எங்களைச் சிறுமைப்படுத்தாதீர்கள் - என்று சகோதரி தமிழிசையாவது மேலிடத்துக்குத் தெரிவித்திருக்க வேண்டாமா? நோய் முற்றிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவைப்பது ஒரு நல்ல டாக்டருக்கு அழகா?)
சரத் பொன்சேகாவைக் கூட்டிவந்து ராஜ்நாத் விழா எடுப்பதை மட்டுமல்ல, அரசு விழாவில் வைத்துக்கொண்டே மைத்திரி அரசை முதல்வர் விக்னேஸ்வரன் விளக்குமாற்றால் சாத்துவதைக்கூட திட்டமிட்டு மறைக்கின்றன இங்கேயிருக்கிற பல ஊடகங்கள்.
இந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அனைவரையும் மேடையில் வைத்துக் கொண்டே, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசு நடத்தும் 'மீள்குடியேற்ற' மோசடியை ஒரு பிடி பிடித்திருக்கிறார் விக்னேஸ்வரன். (இந்த மோசடியில் மோடியும் பங்கேற்ற பத்தே நாளில் இது நடந்திருக்கிறது.
ஒருபுறம், எமது மக்களின் வீடுகளை, சந்தைகளை, கோயில்களை, தேவாலயங்களை, பள்ளிக்கூடங்களை இடித்துத் தள்ளிக் கொண்டே, மறுபுறம் மீள்குடியேற்றம் என்று நாடகம் நடத்துவது என்ன நியாயம்' என்பதுதான் விக்னேஸ்வரனின் கேள்வியில் தொக்கி நிற்கும் ஆதங்கம். மைத்திரியாலோ மற்றவர்களாலோ இதற்கு பதிலளித்துவிட முடியுமா என்ன?
மயிலிட்டி வரசித்தி விநாயகர் ஆலயம், கலைமகள் வித்தியாலயம், ரோமன் கத்தோலிக்கப் பள்ளி - என்று தரைமட்டமாக்கப்பட்டுள்ள இடங்களை வேதனையுடன் பட்டியலிட்டிருக்கிறார் விக்னேஸ்வரன். விக்னேஸ்வரனின் அந்த வேதனை உரையை விரிவாக எழுதியாக வேண்டும்.
அதற்குமுன், ராஜபக்சேக்களின் சிநேகிதர்களான சு.சு.க்களுக்கும், இரா.கோ.க்களுக்கும் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ளவேண்டியது எனது கடமையாகிறது.
'மசூதிகளையும் தேவாலயங்களையும் இடிப்பது தவறில்லை' என்கிற அதி உன்னதக் கருத்துகளை நம்மிடையே விதைப்பதன் மூலம் இந்தியாவைப் புதைத்துக் கொண்டிருக்கும் உங்களது கருத்தைத்தான் 'ஸ்பெல்லிங்' மாற்றி - 'விநாயகர் கோயில்களை இடிப்பது தவறில்லை' என்று உங்கள் சிநேகிதன் சொல்கிறானே, கவனித்தீர்களா?
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx5I.html

Geen opmerkingen:

Een reactie posten