இயக்குனர் கௌதமனின் இயக்கத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவான ''Pursuit of Justice'' என்கிற ஆவணப்படமானது கடந்த 25ம் திகதி ஐ.நா அவையின் 24வது அரங்கிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது.
மணிவண்ணன் அவர்களின் தயாரிப்பில் உருவான குறித்த ஆவணப்படமானது, ஐ.நா அவையில் திருமதி. ரஜனி செல்லதுரை அவர்களது முயற்சியால் திரையிடப்பட்டது.
தமிழகத்தில் இருந்து ஈழம் சார்ந்த ஒரு ஆவணப்படம் ஐ.நாவில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
ஐ.நாவில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை நேரில் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றை சார்ந்த ஐ.நா பிரதிநிதிகள் கண்ணீர் விட்டு கலங்கினர்.
உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு ஒரு இன அழிப்பு தொடர்வதை தாங்கள் இந்த ஆவணம் மூலம் அறிந்து கொண்டதாக அவர்கள் கூறினார்கள்.
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தத்தம் நாட்டின் தலைவர்களிடம் கோரிக்கை வைத்து இதற்கு நல்லதொரு தீர்வை அளிக்க போராடப் போவதாகபும் உறுதி அளித்தனர்.
சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம் அரங்கில் அதேநாள் 25.03.2015 புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு தமிழ் தேசிய உணர்வாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் நடிகர் சத்தியராஜ், சீமான், பெ.மணியரசன், ஜவாஹிருல்லா, வெள்ளையன், இயக்குனர் வி. சேகர், அற்புதம்மாள், டி.எஸ்.எஸ் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆவணப்பட திரையிடலுக்கு பின்னர் நிகழ்வில் பங்கேற்ற தலைவர்கள் ஆவணப்படம் குறித்து விபரமாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் சத்தியராஜ் பேசும் போது,
சரியான நேரத்தில் இந்த ஆவணப்படத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறார். இவ்வளவு நடந்த பின்பும் ஒரே நாடு என்று சொல்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் இழந்த நாட்டை மீட்டெடுக்கிறோம்.
உலகம் தோன்றின போதே நாடுகள் கிடையாது. சில நாடுகள் ஆயிரம் வருடத்துக்கு முன்னாலும், சில நாடுகள் நூறு வருடங்களுக்கு முன்னாலும் வந்தவையே. ஒரு நாடு பல நாடுகளாக பிரிகிறது.
பல நாடுகள் சேர்ந்து ஒரு நாடாக மாறுகிறது. ஒரு எட்டு இலட்சம் சனத்தொகை கொண்ட கொசாவோ நாடும் இப்போது தானே உதயமானது. அதே போல் 10 கோடி தமிழனுக்கு தமிழீழம் என்ற ஒன்று வந்துவிட்டு போகட்டும். அது புது நாடல்ல. இழந்த நாட்டை நாம் மீட்டேடுக்கின்றோம்.
எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இனி என்ன செய்ய முடியும் என்று நாம் எல்லாவற்றையும் கைவிட்டு விட முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கிப் போராடினார்கள்.
இதை விட படைப்பாளிகள் கவிதைகள், நாடகங்கள் ஊடாக கூட போராடுகின்றார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் பகத்சிங் ஆயுதமேந்தியும், காந்தியடிகள் அற வழியிலும், பாரதியார் தேச விடுதலைக் கவிதைகள் ஊடாகவும் போராடினார்கள்.
ஆனால், வெள்ளைக்காரன் பார்வையில் காந்தியும் தீவிரவாதி தான், பகத்சிங்கும் தீவிரவாதி தான், பாரதியும் தீவிரவாதி தான். தீவிரவாதி என்கிற வார்த்தை வந்து எதிரியாக இருப்பவன் பூராகவும் பயன்படுத்தும் வார்த்தை. தான் என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
ஆவணப் படுத்தலின் உன்னதத்தை அதன் சிறப்பை அறிந்திருந்தவர் பிரபாகரன். அதனால் தான் பல போர்களை ஆவணப்படுத்தியவர். அனுராதபுரம் போரைக் கூட ஆவணப்படுத்தி இருந்தார்.
காட்சிப்பதிவுகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியது. தன் இனம் கொல்லப்பட்டதை அழிக்கப்பட்டதை திரைப்படமாக எடுத்தார் யூதரான ஸ்பீல் பேர்க். எத்தனையோ படங்கள் எடுத்த பின்பும் தன்னுடைய இனத்துக்கு நடந்த அவலத்தை நான்கு மணி நேரங்கள் ஓடக் கூடிய படமாக வண்ணப்படங்கள் வந்து விட்ட காலத்தில் கறுப்பு வெள்ளையில் எடுத்தார்.
அந்தப் படத்தைப் பார்த்த ஹிட்லரின் இனத்தவர்கள் நம் முன்னோர்கள் இவ்வளவு கொடூரமானவர்களா என்று திரையரங்க வாசலில் அடித்துக் கதறினார்கள். அப்படி என்றால் எவ்வளவு பெரிய தாக்கத்தை அந்தப் படம் ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் தான் சொல்கிறேன் காட்சி ஊடகம் அவ்வளவு வலிமையானது.
இங்கே எல்லாம் எவ்வளவு தொலைக்கட்சிகள் இருக்கு, அவை எல்லாம் அங்கே நடந்த கோரத்தின் ஒரு துளியைக் கூடப் பதிவு செய்யவில்லை. எங்கோ இருக்கும் சனல் 4 தொலைக்காட்சிக்காரன் உலகத்துக்கே ஈழத்தில் நடந்த படுகொலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றான்.
நான் எல்லாம் இந்தப் படுகொலைக் காட்சிகளை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருப்பேன். ஏனென்றால் ஒரு துளிகூட அந்த வெறி உள்ளுக்குள் இருந்து அடங்கிவிடக் கூடாது என்பதற்காக.
ஆனால், இந்த மானத் தமிழினம் மறந்து கொண்டிருக்கிறது. அந்தக் கொடிய ஈழப் போர் நடந்து 50 ஆண்டுகள் கடந்து விடவில்லை, ஐந்து ஆண்டுகள் தான் கடந்து வந்துள்ளோம். அதற்குள் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள்.
எங்களை எல்லாம் வெளியில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? எப்பவும் அதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தையே பேசுகிறார்கள். இவர்களுக்கு இதை விட்டால் அரசியல் கிடையாது. என்று பேசிக் கொள்கிறார்கள்.
நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். ஒரு தேசிய இனத்தின் மகன் நான், ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாங்கள், எமக்கென்று ஒரு தேசம் விடுதலை அடைவதை விட எங்களுக்கு என்ன அரசியல் இருக்க முடியும்.
பிழைக்கப் போன இடத்தில் நாடு கேட்டுப் போராடினார் பிரபாகரன் என்று பல முட்டாள்கள் இன்னும் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். வரலாற்றுத் தெளிவு பெறாத எந்த இனமும் விடுதலை அடையாது என்கிறார் புரட்சியாளர் லெனின்.
வரலாற்றைப் படிக்காதவனால் வரலாற்றை படைக்கவே முடியாது என்கிறார் அண்ணல் அம்பேத்கர், வரலாற்றைப் படி, வரலாற்றைப் படை, வரலாறாகவே வாழ் என்கிறார் என் தேசியத் தலைவர் பிரபாகரன்.
வரலாற்றைக் கையில் எடுத்த எல்லா இனங்களும் பாதுகாப்பாக வாழ்கின்றது என்று சொல்கின்றார்கள். பாட்டன் யார் என்று கூட தெரியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.
என்னுடைய அக்கா, தங்கச்சியின் உடல்களுக்குள் துப்பாக்கிகள் துளைக்கப்படுகின்ற காட்சிகளைப் பார்க்கும் போது எந்த மானத் தமிழனாலும் இதனை மறந்து போக முடியாது.
தமிழர்கள் நாங்கள் முதலில் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது போர்க்குற்றம் கிடையாது. அந்தப் போரே குற்றம் என்கிற முடிவுக்கு நாங்கள் வர வேண்டும். அங்கே நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்பதனை நாங்கள் முடிவு செய்ய வேண்டும்.
அதை விடுத்து அமெரிக்கா சொல்கிறது அது வெறும் மனித உரிமை மீறல் தான். இந்தியாவும் அதையே தான் சொல்கிறது. புலிகள் தீவிரவாதத்தை இறக்குமதி செய்து சண்டை போட்டார்கள் என்கிறது பாகிஸ்தான்.
இலங்கைக்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்தவர்கள் சொல்கிறார்கள் இப்படி. எங்கள் ஊர் ஆலமர பஞ்சாயத்தை விட அசிங்கமான பஞ்சாயத்தே ஐ.நாவில் நடக்கிறது.
இவர்களிடம் எப்படி நமக்கு நீதி கிடைக்கும். அவர்கள் அங்கு நடந்த போரைப் பற்றியே பேசத் தயாராக இல்லை. மோடி அங்கே போனால் எல்லாம் கூடி வந்துவிடும், எல்லாம் ஓடிப் போய் விடும் என்றார்கள்.
ஆனால், அதைப் பற்றி யாரும் பேசக் கூட இல்லையே. 90000 விதவைகள் அந்த மண்ணில் உருவானது எப்படி? பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளை எதற்கு கொன்றாய்? சரணடைந்த போர்க் கைதிகளின் நிலை என்ன? இந்த இனப்படுகொலை விசாரணைக்கு இந்தியா எதற்கு பின் நிற்கிறது.
ஏனென்றால், இந்த இனப்படுகொலையை சேர்ந்து நடாத்தியதே இந்தியா தான். அதனால் தான் இந்தியாவால் சர்வதேச விசாரணையை கேட்க முடியாது. உண்மையில் அமேரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டிய தேவை இல்லை.
தீர்மானம் கொண்டுவந்திருக்க வேண்டிய நாடே இந்தியா தான். இந்த நாட்டின் இறையாண்மையை, ஒற்றுமையை, சமூக நீதியை மதித்து வாழும் ஒரு இனத்தின் எதிர்பார்ப்புக்களை கொஞ்சமும் மதிக்காது.
இது என்னுடைய நிலம், நாங்கள் இவ்வளவு காலத்துக்கு முந்தைய மூத்த குடி, எங்களை இத்தனை பேர் ஆண்டிருக்கிறார்கள், அதனால் நாங்கள் ஒரு பண்பாடு மிக்க பாரம்பரியம் மிக்க பழைய குடி.
சிங்களவன் எப்படியெல்லாம் தமிழர்களை, அவர்களின் நிலங்களை எல்லாம் திட்டமிட்டு அழித்தான் என்பதை 20 நிமிடத்துக்குள் சொல்வது என்பது மிகப்பெரிய வேலை. அதனை நேர்த்தியாக தம்பி கௌதமன் அவர்கள் செய்திருக்கின்றார்கள்.
அது மிகப்பெரிய தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தும். இந்தப் படம் நாங்கள் எல்லோரும் பேசியதை விட அதிகமாக பேச வைக்கும். ஈழ விடுதலை உன் விடுதலை, என் விடுதலை. உலகெங்கும் பரவி வாழும் ஓவ்வொரு தமிழனுக்குமான விடுதலை.
ஓவியர் வீர சந்தானம் தெரிவிக்கையில்,
இந்தப் படத்தை தம்பி கௌதமன் எடுத்திருக்கிறான் என்றால் அவன் வந்த வழி அப்படி. அந்த வீரம் அவனிடம் இருக்கு. அந்த மனது இருக்கு. துணிச்சலுடன் எடுக்கிறான். அடிப்படையில் வேர் பிடித்து நிற்கும் ஒருவனால் தான் அந்த மரத்தை கிளை பரப்ப முடியும்.
தமிழ்த் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று நான் எவ்வளவு நாளைக்கு கத்துவேன். குறைந்த பட்சம் ஒரே மேடையில் நின்று முழங்குங்கள் இது என் நாடு என்று. கெளதமனை நான் நெஞ்சார பாராட்டுகின்றேன்.
ஏனென்றால் அவன் துடிப்பாக நிறைய பண்ணிக் கொண்டிருக்கிறான். இவனைப் போல வேலை செய்யும் ஆட்களை தேர்ந்தெடுத்து நாங்கள் பாராட்டவில்லை என்றால் எங்கள் இனம் அழியும் என்றார்.
ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌதமன் பின்வருமாறு குறிப்பிட்டார்.
ஒவ்வொரும் அவரவர் இடத்திலிருந்து என்னென்ன பங்கை ஈழத்தமிழர்களுக்காக ஆற்ற முடியுமோ அதனை காத்திரமான முறையில் ஆற்ற வேண்டும்.
நான் படைப்புத் துறையைச் சேர்ந்தவன் என்கிற முறையில் இன்னும் படைப்புக்களை செய்வேன். நான் படைப்பாளியாக இருக்கின்றதால் அதன் மூலம் என் இனத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று உணர்ந்ததனால் தான் படைப்பை உருவாக்குகின்றேன்.
நீங்களும் ஒரு கவிஞராக இருக்கலாம், ஊடகத் துறையில் இருக்கலாம், பொறியியலாளராக, மருத்துவராக இருக்கலாம் அதற்குள்ளிருந்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும்.
நான் இதுவரை ஈழத் தமிழர்கள் தொடர்பில் 8 ற்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் பண்ணி இருக்கின்றேன். ஆனால், இதில் மட்டும் தான் என்னுடைய பெயரைப் பதிவு செய்துள்ளேன்.
தொடர்ந்தும் என் இனத்துக்காக செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. அனைத்தையும் செய்து முடிப்பேன் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlw7H.html
Geen opmerkingen:
Een reactie posten