தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 maart 2015

மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்

தமிழத் தேசியத்தை சிதைக்கும் நோக்கில் சில புல்லுருவிகள்.. காரைதீதீவு பிரதேசசபையின் தவிசாளர் யோ.கோபிகாந்த்
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 06:05.30 PM GMT ]
அம்பாரை மாவட்டத்தின் தமிழ் மக்களின் சார்பிலான தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இல்லாதொழிக்கும் செயற்றிட்டமானது சில அமைப்புக்களால் முன்னெடுக்கப்படுகின்றது என காரைதீதீவு பிரதேசசபையின் தவிசாளர் யோ.கோபிகாந்த் தெரிவித்தார்.
காரைதீவு 12ம் பிரிவு மக்களின் குறைகேள் சந்திப்பானது நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஆதிசிவன் சனசமூக கட்டிடத்தில் இடம்பெற்றது. இதன்போது காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் யோ.கோபிகாந்த் கலந்துகொண்டு மக்களின் குறைகளினை கேட்டறிந்ததோடு சமகாலத்தில் பிரதேச சபை தொடர்பிலான செயற்பாடுகள் பலவற்றிற்குமான விளக்கமளித்ததுடன் பல செயற்பாடுகள் உடனடியாக செயற்படுத்தப்படவுள்ளதாகவும் கூறியதுடன், சமகால அரசியல் தொடர்பில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய தவிசாளர்
“அம்பாரை மாவட்டத்தின் தமிழ் மக்களின் சார்பிலான தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இல்லாதொழிக்கும் செயற்றிட்டமானது சில அமைப்புக்களால் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வமைப்புக்களின் இலக்காக சில இளைஞர்களும் பணத்திற்காக சோரம்போகும் நயவஞ்சகர்களையும் தெரிவு செய்து அவர்கள் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பல பொய்யுரைகளையும் பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி வருவதை எம்மால் காணமுடிகின்றது.
இவ்வாறாக அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பிளவுபடுத்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யாமலிருக்க பலவிதமான பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
இவற்றிலே இளைஞர்கள் மத்தியில் தொழில் பெற்றுத்தருவதாகவும், மக்களுக்கு தேவையான  உதவிகளை வழங்குவதாகவும் கூறும் வழமையான பல்லவிகளுக்கு மத்தியில் இம்முறை
புதிய வகையிலான யுக்திகளான, காணிகளை மீட்டுத்தருவோம் என்பதுடன் காணாமல் போனோரை மீட்டுத்தருவோம் எனும் தொனியில் காணாமல் போயுள்ள உறவுகளின் உறவினர்களை பகடையாக பாவிக்கும் புதியதொரு முயற்சியும் இம்முறை அரங்கேற்றப்படுவது வினோதமாகவும் நெருடலாகவும் உள்ளது.
பன்னெடுங்காலமாக தங்களது உறவுகளை தொலைத்தவர்களின் உணர்வுகளை அரசியலாக்காது அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு தங்களால் ஆறுதல் தான் கூறமுடியாவிட்டாலும் அலைச்சலை கொடுக்காமல் உங்களின் அரசியலை நடத்துங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான் தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவமான கட்சியே தவிர மாற்றுக் கட்சிகளல்ல.. இதை நாம் மட்டுமல்ல உலகறிந்த உண்மையாகும்.
சுமார் 60 வருடங்களான தமிழர்களின் போராட்ட வரலாற்றில் இறுதித் தறுவாயில் எமது போராட்டத் தியாகிகளின் கனவினை நனவாக்கும் காலம் கனியும் போது, சில சொற்ப சலுகைக்கும் பணத்திற்கும் எம்மினத்தினை அடமானம் வைக்கும் முனைப்புடன் செயற்படும் துரேகிகளை மக்கள் இனம்கண்டு அவர்களுக்கு தக்கபாடம் புகட்ட முன்வரவேண்டும். தமிழரை காட்டிக்கொடுத்த பரம்பரையில் வந்தவர்களே இன்னும் மாற்றுச் சக்தியின் பிடிக்குள் சிக்குண்டு மீண்டும் தமிழரையும் அவர்களின் தியாகத்தினையும் சில்லறைகளுக்காக விலைபேசும் நிகழ்வினை முன்னெடுத்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அம்பாரை மாவட்டத் தமிழர்களாகிய நாம் பன்னெடுங்காலமாக மாற்று இனங்களினால் மாறிமாறி நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். கடந்த பொதுத் தேர்தலில் எம்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினரொருவரை தெரிந்து எம்குறை தீர்க்க அனுப்பியிருந்தோம் ஆனால் நடந்ததென்ன?...
இவரின் செயற்பாடுகளின் மூலமும் சொல்லாடலின் மூலமும் கூனிக்குறிகிய எம் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் மீண்டும் 5 வருடம் காத்திருந்து சமூகத்திற்கு சேவை செய்யக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை முழு மூச்சாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்ய வேண்டிய காலத்தில் எம்மினம் இருக்கும் தறுவாயில், இவ்வாறான சில்லறைகளுக்கு சோரம்போகும் சிலரின் செயற்பாடானது மிகவும் வருத்தமளிக்கின்றது.
இன்று எம்மத்தியில் நடப்பதென்ன? ஒருசிலர் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இயங்கினார்கள். கட்சியின் கட்டுக்கோப்பின் பிரகாரம் சில்லறை சேர்க்க முடியவில்லை..!! போனார்கள் முன்னைய அரசிடம் சில்லறை சேர்ந்தது ஆனால் பதவிகள் நிலைக்கவில்லை..!! மீண்டும் இன்னுமொரு கட்சிக்கு மாறி தமக்கென பதவி கேட்டுப்பெற்று மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் மக்களின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர் தெரிவினை தடுத்து நிறுத்தி தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை குறைக்க வேண்டும் எனும் சில நாடுகளின் திட்டத்தினை முன்னிலைப்படுத்தும் முகவர்களாக
செயற்படுக்கின்றார்கள்.
இவ்வாறானவர்கள் எமது கட்சித் தலைமைகளை சாடியே பிரச்சாரம் செய்கின்றார்கள். இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது எம்தலைமைகளை விமர்சிக்க?? இதுவரை காலமும் பதவிகளுக்கு ஆசைப்படாமல் மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் தன்னகப்படுத்தி தூக்கமில்லாமல் சதா எம்மினத்தின் விடிவுக்காக பாடுபடும் எம்தலைமை எங்கே? கொள்கையின்றி சில்லறைக்காக சோரம்போகும் இவ்வாறான சிறுமைகள் எங்கே..? இன்று எம் தலைமை நினைத்திருந்தால் எத்தனை அமைச்சுக்களை எடுத்திருக்கலாம்?? ஆனால் ஏன் எடுக்கவில்லை? இதுதான் எம் தலமையின் மூத்த அரசியல் ஞானம்.. அன்று அமைச்சு பதவி எடுத்திருந்தால் அவ்வமைச்சினை வைத்து 100 நாட்களுக்குள் என்ன செய்ய முடியும்?? இதற்கு உதாரணமாக சகோதர சமூகம் எடுத்த அமைச்சினை வைத்து என்ன அபிவிருத்தி செய்கின்றது? இங்குதான் நாம் பலமாக சிந்திக்க வேண்டும்.
ஆனால் எம் தலைமையின் இவ்வாறான செயற்பாட்டால் இன்று பல ஆயிரம் ஏக்கர் காணிகள் எம்மக்களிடம் மீளளிக்கப்பட்டு மீள்குடியேற்றப்படடுள்ளனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர். அத்துடன் பல வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் நேரடியான அபிவிருத்திகளுக்கான நிதி எம்மக்களுக்கு கிடைக்கின்றது. அத்துடன் எமக்கான தீர்வுத்திட்டமும் விரைவில் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கின்றோம்.
ஆனால், இத்தனையும் மத்தியில் அமைச்சினைப் பொற்றிருந்தால் கிடைக்குமா? நாம் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளத்துடிக்க நினைக்கையில் தடைக்கற்களாக பல அமைப்புக்களின் மூலம் செயற்படும் தமிழ் பேசும் துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட இம்முறையும் எம்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின் அணிதிரள்வார்கள் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை” எனக்கூறினார்
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUltyB.html


மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 12:40.56 AM GMT ]
இலங்கையில் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காணாமல் போனவர்கள் தொடர்பில் பகிரங்கமாக விபரங்களை வெளியிடக்கோரியும் மட்டக்களப்பில் நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவுக்கு அருகில் நடத்தினர்.
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் மற்றும் அதன் செயலாளர் பாரதிதாசன் உட்பட காணாமல்போனவர்களின் குடும்பத்தினர், பெண் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
காணாமல்போன உறவினர்களின் புகைப்படங்களை தாங்கிய நிலையில் இந்த போராட்டத்தில் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நாட்டில் நடைபெற்ற யுத்த காலத்தின்போதும் யுத்தம் நிறைவடைந்த போதும் பலர் காணாமல்போன நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல ஆணைக்குழுக்களின் விசாரணைகளினால் எந்தவித நன்மையும் கிட்டவில்லையென போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர். உள்ளக விசாரணையின்போது சர்வதேச விசாரணையாளர்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் இதுவரையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பில் பகிரங்கமாக பத்திரிகைகளில் அறிக்கையிட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இன்று நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறிக்கொள்ளும் நிலையில் காணாமல்போன தமது உறவினர்கள் தொடர்பில் தமக்கு உறுதியான முடிவினை இந்த அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன்,
காணாமல்போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 2200 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 332 முறைப்பாடுகள் மட்டுமே விசாரணை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் காத்தான்குடியில் 90 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டுள்ளது. ஏனையவை தொடர்பில் விசாரணைகள் ஏதும் நடாத்தப்படவில்லை.
இந்த விசாரணைகளின் முடிவு என்ன என்பது தொடர்பில் இதுவரையில் உரிய பதில் எதுவும் வழங்கப்படாத நிலையே உள்ளது.இன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள உள்ளக விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.இவற்றுடன் சர்வதேச விசாரணையாளர்களும் ஈடுபடுத்தப்படவேண்டும்.
நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம் காணமல்போனவர்களை கண்டுபிடித்து தரவேண்டிய நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும்.அத்துடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும். இதுவரையில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
இதன்போது மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
5
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUltyE.html


Geen opmerkingen:

Een reactie posten