தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

அப்பாவி மக்களை ஆழ்கிடங்குக்குள் புதைக்க திட்டம் தீட்டுவது யார்?



புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் ஜனநாயக தன்மையில் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டு முழு நிறைவேற்று பணிகளை ஆற்றி வருகின்றனர். இந்த புதிய அரசாங்கம் நூறு நாள் வேலைத்திட்டம் என்ற தொனிப்பொருளில் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. 
அத்தகைய பணிகளில் மக்கள் நலன் பேணும் திட்டங்கள் பல செவ்வனே மேற்கொண்டாலும், சில செயற்பாடுகள் மக்களின் வாழ்கை தரத்தில் ஒரு சமூகத்தின் முன்னேற்றகர செயற்பாட்டை தடுப்பனவாகவே உள்ளன.
அத்தகைய நிகழ்வு இன்று மலையகத்தின் பல பாகங்களில் இடம் பெற்று வருகின்றது. 
நெடுங்காலமாக மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் அத்துடன், சுற்று சூழலியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் இரத்தினகல் அகழ்வு குறித்தே இங்கு நோக்கப்படுகின்றது.
இன்று நாட்டின் ஜனாதிபதியே சுற்றாடல் துறை அமைச்சராகவும் சுற்றாடல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதான நபர் என்ற வகையில் மலையகத்தில் இடம் பெறும் இரத்தினகல் அகழ்வு தொடர்பாக ஏற்படும் சூழலியல் மற்றும் மனித வாழ்கைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அவரையும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான மத்திய நிலையத்தினதும் கடமையாகும்.
ஜனாதிபதி, தான் ஆட்சிக்கு வந்தால் சூழலியல் ரீதியாக சட்டவிரோதமாக சுரண்டப்படும் இயற்கை கணிமங்கள், இரத்தினக்கல் அகழ்வு, மற்றும் சூழலுக்கு பாதுகாப்பற்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதாக கூறியிருந்தார். அவ்வாறு கூறியவற்றில் சில நடைமுறையும் படுத்தப்பட்டு வருவதனை காணகூடியதாக உள்ளது.
குறிப்பாக கொழும்பு போர்ட்சிட்டி இடைநிறுத்தம், உமா ஓயாதிட்டம் இடைநிறுத்தம் யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் உட்பட்ட பல இடங்களில் குடிநீரில் நஞ்சு தன்மை காணப்படுவதாக கூறிய விடயத்தில் உடனடி கவனம், மற்றும் இரத்தினபுரி பகுதியில் சட்ட விரோத இரத்தின கல் அகழ்வு தடை, போன்றன,
சுற்றாடல் ரீதியாகவும் மனித சமூகத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடிய விடயங்கள் என்ற ரீதியில் உடனடியாக தடுத்து நிறுத்தப்படடு அவை மீள்பரீசீலனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு நாட்டில் சூழலியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் விடங்களை தடுத்து நிறுத்த முன் வரும் அரசாங்கம் மலையகத்தில் பெரும் சூழலியல் மற்றும் மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய தற்போது மீண்டும் ஏற்படுத்த போகின்ற இரத்தினக் கல் அகழ்வுக்கு ஏல விற்பனைக்கு விட தீர்மானித்திருப்பது எத்தகைய விதத்தில் பொருத்தமாகும்.
இத்தகைய ஏல விற்பனை கெசல்கமுவ ஓயாவை மையப்படுத்திய பொகவந்தலாவ பிரதேசத்திலேயே விடப்படவுள்ளது. இந்த ஏல விற்பனை பற்றி பல சமூக ஆர்வலர்கள் புத்திஜீவிகள், மற்றும் பிரதேச வாழ் மக்களிடையே பெரும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது.
ஏற்கனவே இந்ந கெசல்கமுவ ஓயா பகுதி ஏல விற்பனைக்கு விடப்பட்டு அரசாங்கம் உற்பட பல சமூக விரோத சக்கதிகள் இயற்கை கனிமங்களை சூறையாடி கொள்ளை இலாபம் ஈட்டிக்கொண்டது யாவரும் அறிந்த உண்மை.
அதன் பிறகு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த இரத்தினக்கல் அகழ்வு கைவிடப்பட்டிருந்தது. இதனை தடுப்பதற்கான வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், இந் நடவடிக்கைக்கு இடைக்கால தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தமையை இங்கு சுட்டிக்காட்டலாம்.
ஆனாலும் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பொகவந்தலாவ பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த தற்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது பிரச்சார உரையின் போது தாம் ஆட்சிக்கு வந்தால் இப்பிரதேசத்தில் இரத்தினக்கல் அகழ்விற்கான குத்தகையை பெற்று தருவேன் என சூளுரைத்திருந்தார்.
இதன் பின்னணியில் பிரதேச சபை உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் கைகூலிகலாக இருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
இத்தகைய பிரதமரின் உரைக்கு அப்பிரதேச வாழ் மக்கள் தமது எதிர்கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதனை பறைசாற்றும் வகையில் தற்போது அவர் கூறியதுக்கிணங்க இந்த கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பள்ளத்தாக்கில் இரத்தினக்கல் அகழ்வை மேற்கொள்ள சட்டரீதியான அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.
அக்குத்தகைக்கான ஏலவிற்பனை எதிர்வரும் இரண்டாம் திகதி ஹட்டன் நகரில் இடம்பெறயிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலைகளும், புத்திஜீவிகள் சமூக, சூழலியல் ஆய்வாளர்களின் மத்தியில் பாரிய கண்டனங்களும் முனவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மக்கள் வாழும் பிரதேசம், குடியிருப்பு பகுதி, தொழில் புரியும் பிரதான இடங்களில் இத்தகைய ஆபத்தான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர் மத்திய சுற்றாடல் ஆய்வு பிரிவில், தேசிய கட்டிட ஆய்வு நிலையம் என்பன தகுந்த முறையில் ஆய்வுகளை மேற்கொண்டு,
அப்பிரதேசத்தில் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளலலாம் என்று உறுதிப்படுத்திய ஆய்வறிக்கையினை சமர்ப்பித்து ஏற்றுகொண்ட பிறகே இப்பிரதேசம் ஏல விற்பனைக்கு விடப்பட வேண்டும் என்பது இலங்கையின் சூழலியல் சார் சட்ட ஏற்பாடாகும்.
ஆனால் இப்பிரதேசம் இதற்கு முன்பும் இவ்வாரான ஆய்வுகளும், அறிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதும் அதற்கான எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கு முன்பும் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாக பல சூழலியல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன.
அவை வருமாறு,
ஏற்கனவே இரத்தினக்கல் அகழப்பட்டு உரிய முறையிலன்று கைவிடப்பட்டதால் பிரதேசத்தின் அண்மையில் உள்ள குடியிருப்புகள் நிலம் தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
குறித்த பிரதேசத்தில் அண்மித்த தொழில் புரியும் இடங்களில் மக்கள் சில விசவாயுக்களின் தாக்கத்தினால் மயக்கமுற்றும், சுவாச ரீதியான பிரச்சினைகளுக்கும் உள்ளாகியிருந்தனர்.
இவ்வகழ்வை அண்மித்த பாடசாலையான தெரேசியா தமிழ் வித்தியாலயத்தின் கட்டிடப்பகுதி தாழிறங்கியமை.
கால்நடைகளுக்கான புல்மேயும் இடங்கள் மண்மேடுகளினால் நிரப்பட்டதனால் கால்நடை வளர்ப்பாளர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தமை.
சட்டவிரோதமான போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை அதிகரித்தமை.
சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் விபச்சார விடுதிகளும், விபச்சாரங்களும் அதிகரித்தன்.
பாடசாலை மாணவர்களின் இடைவிலகள் அதிகரித்தமை.
பல சந்தேகத்துக்கிடமான வெளியாரின் நடமாற்றம் இப்பிரதேசத்தில் அதிகரித்தமை.
கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்தமை.
இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை இல்லாததன் காரணமாக விலையுயர்ந்த இரத்தினங்கள் வெளிநாட்டவர்களுக்கு கைமாற்றப்பட்டதும், சூறையாடப்பட்டதும்.
இப்பிரதேசத்துக்கே உரித்தான மக்களின் வாழ்க்கை, பொருளாதாரத்தில் எத்தகைய அபிவித்தியும் ஏற்படாமை.
இவ்வகழ்வினை பயன்படுத்தி ஏனைய பெருமதிமிக்க மரங்கள், மூலிகைகள், உற்பட ஏனைய வளங்கள் சூறையாடப்பட்டன.
இவ்வாறான தாக்கங்களும், குறைபாடுகளும் ஏற்கனவே இணங்காணப்பட்டும் நடந்தேறியும் வந்துள்ளது. அவ்வாறாயின் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கவனம் இதுவரை திரும்பாததன் காரணம் என்ன? தற்போது விடப்படவிருக்கும் ஏல விற்பனை குறித்து இச்சபை உடனடியாக கவனம் செலுத்துமா?
இத்தகைய சூழலியல் ரீதியான சுரண்டல்களுக்கு சுற்றாடல் துறை அமைச்சர் என்ற வகையில் நாட்டின் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமா?
நாட்டின் இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டியது அரசாங்கரத்தின் கடமை என்ற ரீதியில் பிரதமர் உட்பட்ட அமைச்சரவை எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க போகின்றன?
இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதேச, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அது குறித்து உடனடியாக அக்கறை கொண்டு அத்திட்டத்தை தடுத்து நிறுத்த முன்வருவார்களா? என்ற கேள்விகளுடன் “சூழல் எமது சொத்து. அதனை அற்ப நலத்திற்காக ஒரு போதும் விற்க மாட்டோம்” என்ற வாசகத்துடன் நிறைவு செய்கின்றோம்.
தொடர்ந்து இந்த அரசாங்கம் மலையக மக்களை இவ்வாறான முயற்சிகள் மூலம் தேர்தலில் வாக்கு பலத்தை அதிகரித்து கொள்ளலாம் என்று நினைக்குமாயின், அது கானல் நீரின் தன்மைக்கு ஒப்பாகும்.
மலையகத்தில் இடம் பெற்ற, இடம் பெற போகின்ற அடையாளம் காணப்பட்டுள்ள 3600 பிரதேசங்கள் பாரிய மண்சரிவு அபாயத்திற்கு இத்தகைய இரத்தினக்கல் அகழ்வுகளே காரணம். எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தத்திற்கு அரசாங்கமே பொறுபேற்க வேண்டும். என்பதும் எமது கருத்து.
அதற்கு முன் தடுத்து நிறுத்த போகின்றதா? அல்லது மலையக மக்களை உயிருடன் மண்ணில் புதைக்க போகின்றதா?
இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்
மலையகம்
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko4B.html

Geen opmerkingen:

Een reactie posten