தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 maart 2015

போர்க்குற்ற விசாரணைக்கு முன் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கலாமா?

போலிக் கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்ற பெண் கைது!
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 11:38.35 AM GMT ]
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த இலங்கை பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பை சேர்ந்த 44 வயதான இந்த பெண், தனது வயதை 34 வயதென மாற்றி இந்த கடவுச்சீட்டை பெற்றுள்ளார்.
குறித்த பெண் 1971 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இத்தாலிக்கு செல்வதற்காக நேற்று விமான நிலையத்திற்கு வந்த இந்த பெண்ணின் ஆவணங்களை பரிசோதித்த குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள்,  அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மகிந்தவின் அரசியல் பயணம் உறுதி!- விமல் வீரவன்ச
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 11:39.51 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அல்லது புதிய கட்சியின் ஊடாக மீண்டும் அரசியலுக்கு வருவது உறுதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
வானொலி ஒன்றிற்கு இன்று காலை வழங்கிய செவ்வியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று நாரஹேன்பிட்டியவில் வைத்து ஊடகமொன்றிற்கு தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஊடாக மாத்திரமே அரசியலுக்கு வருவேன் என தெரிவித்திருந்தார்.
நான் மிக உண்மையாகவும் உறுதியாகவும் தெரிவிக்கிறேன் எங்கள் ஜனாதிபதி நாட்டின் தலைவர் மகிந்த அரசியலுக்கு வருவார், அவர் வரமாட்டார் என நினைத்திருந்தால் நாங்கள் பேரணி நடத்துவதற்கு எங்களுக்கென்ன பைத்தியமா என விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெயர் பலகையை பிடித்துக் கொண்டிருப்பவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்க மாட்டார்கள்.
பொதுத்தேர்தலில் அமைச்சர் பதவிக்கு விருப்பமென்றால் சுதந்திரக் கட்சியில் போட்டியிடுமாறு சிலர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
மகிந்த அமைச்சர் பதவிக்காக பொதுத்தேர்தலில் போட்டியிட தேவையில்லை. பிரதம வேட்பாளராக சுதந்திரக் கட்சியில் நியமிக்க முடியுமா இல்லையா என்பதனை எங்களுக்கு உறுதியாக தெரிவிக்க வேண்டும்.
எப்படியிருப்பினும் மகிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித மாற்றமும் இல்லை, அவர் போட்டியிடுவது உறுதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ராஜித ஒரு பொய்யர்: மஹிந்த குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:21.51 PM GMT ]
அமைச்சர் ராஜித சேனாரத்ன போலியான பிரச்சாரங்களை செய்து வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தன்னிடம் 5 வாகனங்கள் மாத்திரமே காணப்படுகின்றன எனவும், அதற்கு மேலான வாகனங்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 6 வாகனங்களும், பாதுகாப்பிற்காக 213 பொலிஸ், இராணுவ வீரர்களும் வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு நீதிமன்ற உத்தரவிற்கமைய குறைந்தளவிலான வாகனங்களும், பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதிகளில் சந்திரிக்காவுக்கு மாத்திரமே நீதிமன்றம் இவ்வாறான உத்தரவினை பிறப்பித்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைக்கு முன் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கலாமா?
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:51.43 PM GMT ]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்­ஷல் எனும் இராணுவ அதி உயர்பதவி வழங்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்­சவின் ஆட்சியில் தமிழர்களுக்கு எதிராக வன்னியில் பெரும் போர் நடத்தி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழிக்கும் மிகப்பெரும் சங்காரம் இடம்பெற்ற போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கே பீல்ட் மார்சல் என்ற அதிஉயர் விருது வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்­ஷல் பதவி வழங்கப்பட்டது எதற்காக என்று கேட்டால், வன்னியில் நடந்தது தெரியாதா? அதற்காகத்தான் வழங்கப்பட்டது என்று பதில் கிடைக்கும்.
அது சரி, மகிந்த ராஜபக்­சவின் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்புக் கொடுத்து அவர் இழந்த பதவி, பட்டம் என அனைத்தையும் மீள வழங்கியதோடு நிற்கக் கூடாதா?
பீல்ட் மார்­ஷல் என்ற பதவியை அவருக்குக் கட்டாயம் வழங்கத்தான் வேண்டுமா? அவ்வாறு அந்தப் பதவியை அவருக்கு வழங்கியதன் மூலம் தமிழர்களுக்கு நடந்த அத்தனை கொடூரமும் நியாயமானது என்பதாகக் கதை முடிக்கப்பட்டுள்ளது.
ஆக, வன்னிப் போரை நடத்திய எங்கள் நாட்டுத் தளபதிக்கு பீல்ட் மார்­ஷல் என்ற பதவியைக் கொடுத்து நாங்கள் கெளரவிக்கும் போது, நீங்கள் போர்க்குற்ற விசாரணை நடத்துவது எந்தளவு தூரம் நியாயமானது?
ஆகையால் சர்வதேச விசாரணை என்பதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்க மாட்டோம். உள்ளக விசாரணை மட்டுமே இடம்பெறும் என்று மைத்திரி அரசு கூறும். சரி, உள்ளக விசாரணை நியாயமாக நடக்கும். அதை நம்பலாம் என்று ஜனாதிபதி மைத்திரி கூறினால்,
ஐயா! பிரபு, உள்ளக விசாரணை நியாயமாக நடக்கும் என்றால் உள்ளக விசாரணை முடிவடைந்து விசாரணை அறிக்கையின் நிலைமையை அறிந்த பின்பல்லவா முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்­ஷல் என்ற பதவியை வழங்கியிருக்கவேண்டும்?
உள்ளக விசாரணையில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா குற்றம் இழைத்தார் என்பது தெரியவந்தால் இப்போது வழங்கப்பட்ட பீல்ட் மார்­ஷல் பதவியை மீளப் பெறுவதா?
ஆக, உள்ளக விசாரணை ஒரு கண்துடைப்பு. அதில் மகிந்த ராஜபக்­சவோ அல்லது சரத் பொன்சேகாவோ எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. போரில் தமிழ் மக்கள் இறக்கவுமில்லை என்பதாகவே விசாரணையின் முடிவு அமைக்கப்படும் என்ற தன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷ­ல் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அட! மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் ஜனாதிபதியாக்கி விட, அவர் செய்த முதல் வேலை சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியமையாகும். இப்போது பீல்ட் மார்ஷ­ல் பதவியும் கொடுத்துள்ளார்.
என்ன செய்வது? தமிழர்கள் யாரை நம்பினாலும் அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களாக இருப்பது எதற்கு என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlu0E.html

Geen opmerkingen:

Een reactie posten