தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 maart 2015

ஐ.நா.வை நோக்கி பத்து லட்சம் கையெழுத்துக்கள்!



கிளிநொச்சி, முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் தொடர்பாக ரணில் அறிந்து கொள்ளவில்லையாம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 02:45.05 PM GMT ]
படையினர் கையகப்படுத்தியிருக்கும் நிலங்களில் மீள்குடியேற்றம் தொடர்பாக எமக்கு யாழ்ப்பாணத்திலிருந்து பல கோரிக்கைகள் வந்தபோதும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து எமக்கு முறைப்பாடுகள் பெரிதாக கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி இரு மாவட்டங்களுக்கும் இன்றையதினம் சென்றிருந்த பிரதமர், இரு மாவட்டங்களினதும் செயலகங்களிலும் சந்திப்புக்களை நடத்தி மாவட்டத்தின் நிலைமைகளை
கேட்டறிந்துகொண்டிருந்தார்.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான், கிருஷ்ணபுரம், பளை, இரணைமாதா நகர் போன்ற இடங்களில் மக்கள் மீள்குடியேற வேண்டிய நிலையில் உள்ளமையினையும், அரசாங்கத்திற்குச் சொந்தமான திணைக்கள காணிகள் பலவற்றையும் படையினர் வைத்திருப்பதாகவும் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் கேப்பாபிலவு, புதுக்குடியிருப்பு, விசுவமடு, செம்மலை, உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டிய தேவை உள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்படி மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களை கேட்டறிந்து கொண்ட பிரதமர், இந்த விடயம் தாம் அறியவில்லை எனவும் இதனடிப்படையில் அடுத்தக்கட்டமாக இந்தமாவட்டங்களில் மக்களை மீள்குடியேற்றுவோம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இதர பிரச்சினைகள் தொடர்பாக துறைசார் அமைச்சர்களுடன் பேசி தீர்வினை கண்டு கொள்ளுமாறும் அதற்காக அமைச்சர்களுக்கு தாம் தெளிவுபடுத்துவதாகவும் தெரிவித்த பிரதமர், வடமாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள், தீர்க்கப்படாமலிருக்கின்றன.
எனவே அவற்றை தீர்த்துவைப்பதற்காக எனது அலுவலகத்தில் வடமாகாணத்திற்கென தனித்துவமான அதிகாரி ஒருவரை நியமிப்பேன் எனவும் உறுதியளித்திருக்கின்றார்.

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் உதவியுடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா முனைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 04:13.56 PM GMT ]
இலங்கையில் அரசாங்க மாற்றத்தை அடுத்து பாகிஸ்தானின் உதவியுடன் வளர்ந்துவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை இந்திய புலனாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்திய செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இந்திய புலனாய்வு சேவை அதிகாரி ஒருவரின் தகவல்படி,
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகம் ஆதரவு வழங்கி வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  இதற்காக இலங்கையின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு உதவிய இலங்கையர் வழங்கிய தகவல்களின்படி, இலங்கையிலும் விசாரணைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு இலங்கை ஒத்துழைக்க உறுதியளித்துள்ளதாகவும் இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போதும் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlx0A.html

ஐ.நா.வை நோக்கி பத்து லட்சம் கையெழுத்துக்கள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 04:03.10 PM GMT ]
இனப்படுகொலைக்கு சர்வதேச சுதந்திர விசாரணை தேவை. இந்த கோரிக்கையை முன்வைத்து புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் கையெழுத்து வேட்டையை நடத்தி வருகின்றனர். பத்து இலட்சம் கையெழுத்துக்களுடன் ஐ.நா. வில் இக்கோரிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது
பத்து இலட்சம் கையெழுத்து என்ற இலக்கு தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.நா. வுக்கு வழங்கப்படும் மகஜர் ஒன்றிலேயே இந்த கையெழுத்துக்கள் வாங்கப்படுகின்றன.
இலங்கையில் இனப்படுகொலை தொடர்கின்றது. போர்க் குற்றங்களுடன் அது குறித்தும் விசாரணை செய்ய சர்வதேச சுதந்திர ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பத்து இலட்சம் பேரின் கையெழுத்துக்களை பெறும் முயற்சியில் கடந்த ஒரு மாத காலமாக புலம்பெயர் அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. உலகின் பல நாடுகளிலும் கையெழுத்து வேட்டை தொடர்ந்து இடம்பெறுகின்றது.
அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டவாதிகள், ஜனநாயக விடுதலை அமைப்புக்களின் பிரதிநிதிகள், அந்தந்த நாடுகளில் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்ட மக்களும் இதில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
சர்வதேச ரீதியில் விடப்படும் கோரிக்கையாகவே இது அமையப்பெறுகின்றது. தனித்து தமிழர்கள் மாத்திரம் இதில் கையெழுத்திடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்திற்குள் பத்து இலட்சம் கையெழுத்துக்கள் என்ற திட்டத்துடன் இது ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், செப்டம்பர் மாதத்திற்கு முன்பாகவே பத்து இலட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு விடும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கையெழுத்துக்கள் உலகில் பல நாடுகளிலும் பெறப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் தற்போது ஒன்று சேர்க்கப்படுகின்றன.
ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கமைய ஐ.நா., மனித உரிமை ஆணைக்குழு விசாரணைக்குழுவொன்றை நியமித்துள்ளது. அக்குழுவின் விசாரணை அறிக்கை கடந்த மாதம் 25ம் திகதி வெளியிடப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசின் வேண்டுதலின் பேரில் அது செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டமை தெரிந்ததே.
அந்த அறிவிப்பு வெளி வந்தது முதல் உலகத்தமிழர் மத்தியில் தொடர்ச்சியாக ஏமாற்றம் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன் எதிரொலியாகவே பத்து லட்சம் கையெழுத்துக்கள் வாங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு நியமித்த விசாரணைக்குழு ஏற்கனவே போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் முடிவுற்ற நிலையில் புதிதாக விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனக் கோரப்படுவதன் நோக்கமென்ன?
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பின்பே சிரியாவில் படுகொலைகள் நடைபெற்றன. ஆனால், சிரியா படுகொலை குறித்து விசாரணை செய்ய ஐ.நா. பாதுகாப்பு சபை ஆணைக்குழு ஒன்றை நியமித்தது.
ஆனால், அதை விட மிக மோசமான இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு சாதாரண விசாரணைக்குழு ஒன்றையே நியமித்துள்ளது. எனவே ஐ.நா. பாதுகாப்புச்சபை இனப்படுகொலை தொடர்பாக விசாரணை செய்ய சர்வதேச சுதந்திர ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
அவ்வாறான ஆணைக்குழு விசாரணை அறிக்கை நேரடியாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்படும் போது அங்கு ஒரு தீர்வு கிடைக்க வழியேற்படும். தற்போதைய விசாரணைக்குழு அறிக்கை மேலும் ஒரு சில படிகளைக் கடந்தே ஐ.நா. பாதுகாப்பு சபையை சென்றடையும்.
எனவே இதனைக்கருத்திற் கொண்டே சர்வதேச சுதந்திர ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என இம் மகஜரில் கோரப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு நியமித்துள்ள விசாரணைக்குழு என்றே உத்தியோகபூர்வமாக தற்போது அழைக்கப்படுகின்றது.
அதற்குரிய சர்வதேச சட்ட வலு குறைவாக அமைகின்றது. ஆனால், நடைபெற்ற விசாரணை தொடர்பாக சுதந்திர ஆணைக்குழு செயற்பட முடியும். என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மகஜர் விரைவில் ஐ.நா. நோக்கி அனுப்பப்படுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பத்து லட்சம் கையெழுத்துக்களுடன் செல்லும் மகஜர் அல்லது மனு ஐ.நா.வின் முக்கிய கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 28வது கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது. ஜெனிவா பணிமனையில் கடந்த மார்ச் 2ம் திகதி முதல் 27ம் திகதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெறும். இலங்கைப் பிரச்சினை தொடர்பான விடயம் முக்கிய விவாதமாக இடம்பெறவிருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதைவிட வேறு முக்கிய பிரச்சினையாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் விடயம் ஆராயப்பட்டது. ஐ.நா .மனித உரிமை ஆணையாளர் இளவரசர் சையத் அல் உசேன் ஜெனீவாவில் உப மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் பல நாடுகளின் மனித உரிமை பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுவது அதிகரித்து வருவதாக அவர்கள் அங்கு கவலை தெரிவித்தனர். மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசுகளே அவற்றை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினர்.
அதேநேரத்தில் அங்கு பிரதிநிதிகள் கேட்பதற்கு முன்பாக ஆணையாளர் இலங்கை விடயம் தொடர்பாகவும் சில விபரங்களை தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை செப்டம்பர் மாதத்திற்கு முன்பே வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத்தொடர் செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகின்றது. விசாரணைக்குழு அறிக்கை அந்த கூட்டத்தில் வெளியிடப்படும் என்றே இதுவரை குறிப்பிடப்பட்டு வருகின்றது என அங்கு பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
ஆனால், அந்த அறிக்கையை தாம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட இருப்பதாக ஆணையாளர் அப்போது குறிப்பிட்டார். ஆகஸ்ட் மாதத்தில் அறிக்கை வெளியிடப்பட்டாலும் அது குறித்து பேரவைக்கூட்டத் தொடரில் விவாதம் நடத்தலாம்.
இங்கே விசாரணை அறிக்கையின் விபரங்கள் மிக முக்கியமானவை. அதன் மூலம் உண்மைகள் வெளியாகலாம் எனத் தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பணிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். அது தொடர்பான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க தமது பணியகம் எப்போதுமே தயாராகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டின் போது தாம் வாழும் நாடுகளின் மனித உரிமை நிலைவரம் குறித்து அந்தந்த நாட்டுப் பிரதிநிதிகள் விரிவாகக் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlxzJ.html

Geen opmerkingen:

Een reactie posten