தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 maart 2015

உலக மகளிர் தினம்! இலங்கையில் சிறையில் வாடும் தமிழ்ப் பெண்களின் நிலை தொடர்கதையாகிறது!



வான் மோதியதில் சிறுமி பலி- வானைத் தீயிட்டுக் கொழுத்திய பொதுமக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 04:53.45 PM GMT ]
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குருநாகலில் இருந்து வந்த வானுடன் குறித்த சிறுமி மோதியதில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாவடிவேம்பைச் சேர்ந்த சிவயோகன் யசோதா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
இந்தவிபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் வாகனத்தை  தீயிட்டு கொழுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms4F.html


என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக் கொள்ளம்மா: முன்னாள் போராளியின் கடைசி வார்த்தை
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 05:16.37 PM GMT ]
கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இவர் 2009ம் ஆண்டு போராளியாக இருந்தபோது நெஞ்சில் எறிகணைச் சிதறல் பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கியதால் இறக்கும் வரை முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.
இவரது தகப்பனார் தாயை விட்டுப்பிரிந்து சென்றதால், இவருடன் சேர்ந்த மூன்று சகோதரர்களையும் தாயே பராமரித்து வருகிறார்.
முன்னாள் போராளியை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தர்சினி என்ற இளம் யுவதி காதலித்து திருமணம் செய்து வாழ்க்கை கொடுத்த நிலையில், தற்போது மூன்று மாத கைக்குழந்தையுடன் கணவரை இழந்து 24 வயதில் விதவையாகியுள்ளார்.
தர்சினி தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறியே, முன்னாள் போராளிக்கு வாழ்க்கை கொடுத்து, நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது பெரும் தியாகம் ஆகும்.
முன்னாள் போராளி இறக்கும் இறுதி தருணத்தில் தாயாரின் கையைப்பிடித்து, “அம்மா எனது மனைவியையும் பிள்ளையையும் இறுதி வரை நீங்க தான் அம்மா பார்க்க வேண்டும். கைவிட்டுறாதீங்க அம்மா” என்று கண்ணீர் மல்க, தாயாரிடமிருந்தும், மனைவி தர்சினியிடமிருந்தும் விடைபெற்றார்.
நேரில் துக்கம் விசாரிக்க சென்ற வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தனிடம் ஜெயக்குமாரின் தாயார் புஸ்பலதா கண்கலங்கி தெரிவித்தார்.
முன்னாள் போராளிக்கு வாழ்வு கொடுத்த தர்சினிக்கும், அவரது மூன்று மாத குழந்தைக்கும், இவர்கள் இருவரையும் இறுதி வரை தம்மோடு வைத்து பராமரிக்கும் ஜெயக்குமாரின் தாயாருக்கும் உதவ நல்லுள்ளம் கொண்டோர் முன்வர வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த தாயாருக்கு ஒரு கடை ஒன்று இருப்பதாகவும், இரண்டு வருடங்கள் கடையை நடாத்தி வந்தபோதும் ஜெயக்குமாரின் மருத்துவ செலவு, பராமரிப்பு காரணமாக கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும், தற்போது கடையை திறந்து வியாபாரம் செய்வதற்கு உதவ யாராவது முன்வர வேண்டும் என்றும், மருமகள் தர்சினியையும், குழந்தையையும் இறுதிவரை தன்னால் பராமரிக்க முடியும் என்றும் ஆனந்தன் எம்.பியிடம் போராளியின் தாயார் தெரிவித்துள்ளார்.
தொடர்புகளுக்கு: 0094 7744 92555,   0094 7765 22735
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms4G.html

பெண்ணியம் தமிழ்த் தேசியத்தால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது!- ஈழச் செயற்பாட்டாளர் நிர்மலா!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 11:47.48 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த் தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா இராஜசிங்கம்.
இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத் தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சினைகள் குறித்து தமிழோசையிடம் விரிவாக பேசிய பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா இராஜசிங்கம் இந்த கருத்தை முன்வைத்தார்.
தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்த மற்றும் எடுத்துவரும் அரசியல் கட்சிகளானாலும் சரி, ஆயுதக் குழுக்களானாலும் சரி, பெண்ணை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே கடந்த காலத்தில் முயன்றார்கள், தற்போதும் முயல்கிறார்கள் என்று கூறிய நிர்மலா, பெண்ணை தமிழ்க்கலாச்சார பிரதிநிதியாக்கி, அந்த கலாச்சார பிரதிநிதியை கட்டுக்குள் வைத்திருப்பதே தமிழ்க் கலாச்சார பாதுகாப்புக்கான ஒரே வழி என்பதாகவே தமிழ்த் தேசிய அரசியல் கருத்தாடல் இருப்பதாக தெரிவித்தார்.
பெண்களின் உடைகள் மற்றும் நடமாட்டம் குறித்து முன்பு விடுதலைப்புலிகள் அமைப்பு கட்டுப்பாடுகள் விதித்ததாகவும், இன்றும் தமிழ்த் தேசிய அரசியல் சித்தாந்தம் அதே அணுகுமுறையையே பெண்கள் தொடர்பில் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார் நிர்மலா.
போர்க்காலத்தில் மட்டுமல்லாமல் போர் முடிந்த பிறகும் ஈழத்தில் வசிக்கும் பெண்கள் தொடந்தும் மோசமான பாலியல் பலாத்கார பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலே நிலவுவதாக தெரிவித்த நிர்மலா, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் ஆழமான இராணுவமயமான சூழல் நிலவுவதால், பெண்களின் அன்றாட நடமாட்டம் கூட அச்சத்துடனான செயல்பாடாக பெண்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருப்பதாக கூறினார்.
இந்த சூழல் காரணமாக, இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு படைதரப்பினர் தவிர, தமிழ்ச்சமூக ஆண்களுக்குள்ளேயே இருக்கும் பெண் வெறுப்பு நிறைந்த தமிழ் ஆண்களின் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் தமிழ்ப்பெண்கள் பெருமளவு உள்ளாக நேர்வதாகவும் நிர்மலா அச்சம் வெளியிட்டார்.
அதேசமயம் பாதுகாப்புப்படையினர் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகளைப் பற்றி மட்டுமே தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அதிகம் பேசுவதாகவும், தமிழ்ச்சமூக ஆண்களால் செய்யப்படும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களை பேச மறுதலிக்கும் மனோநிலையே நிலவுவதாகவும் நிர்மலா விமர்சித்தார்.
புலம்பெயர்ந்துவாழும் தமிழ்ச்சமூகங்களிலும் கூட பெண்கள் மிக மோசமான குடும்ப வன்முறைகளை எதிர்கொள்ளும் போக்கு தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவித்த நிர்மலா இராஜசிங்கம், 50 வயது, 60 வயது பெண்கள் கூட அவர்களின் கணவர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில்கூட தம் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதாக கூறினார்.
தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பலவிதமான தாக்குதல்கள், துஷ்பிரயோகங்கள் குறித்து பேச மறுதலிக்கும் போக்குதான் தமிழ்ப் பெண்களும், பெண்ணிய செயற்பாட்டாளர்களும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடை என்றும் கூறினார் நிர்மலா இராஜசிங்கம்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms4I.html

உலக மகளிர் தினம்! இலங்கையில் சிறையில் வாடும் தமிழ்ப் பெண்களின் நிலை தொடர்கதையாகிறது!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 11:34.26 PM GMT ]
மார்ச் மாதம் 8ம் திகதியை அனைத்துலக பெண்கள் தினமாக உலகம் கொண்டாடிவரும். வேளையில் சிறிலங்கா சிறைகளில் பெருந்தொகையான தமிழ் பெண்கள் அடைக்கப்பட்டு பல வருடங்களாகியும் அவர்கள்மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில், எவ்வித நீதி முறைமைகளுக்கும் உட்படுத்தப்படாத நிலையில் அரசியல் கைதிகளாக சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 
காணாமல்போன பெண்களைத்தேடி உறவினர்கள் இன்னமும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இராணுவத்தினரின் காமஇச்சைக்குப் பலியான பலநூறு பெண்களுக்காக நீதிவேண்டி சமூக அமைப்புக்கள் பற்பல போராட்டங்கள் நடத்தியும் பலனேதும் கிடைக்கவில்லை.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் கூறியுள்ளார். அவர் மேலும் தொடர்கையில்,
சிறிலங்காவில் தமிழர்கள் சாதகமாக வாக்களித்த காரணத்தால் சமீபத்தில் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமும் தமிழ் பெண்கள் படும் அவலங்களை புறக்கணித்தே வருகிறது என்றார்.
காணாமல் போனோர் குறித்த போராட்டங்களில் உணர்வோடு பங்குபற்றி ஒட்டுமொத்த தமிழினத்தின் உணர்வலைக்கு எடுத்துக்காட்டாக தாய் ஜெயக்குமாரி பாலேந்திராவும், பதின்மூன்றே அகவையுடைய அவரது மகள் விபூசிகாவும் விளங்கினார்கள்.
தமது குடும்ப அங்கத்தவர்கள் நான்குபேரை எமது இனவிடுதலைக்கு விலையாக்கிய வீர மறவர்கள். ஜெனீவா சென்று தமது குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படுத்தி, சிறிலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது காலாகாலமாக கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையை உலகின் கண்கள்முன் நிறுத்துவதற்கும் ஆயத்தமாகி வந்த சமயத்தில் கடந்த ஆண்டு (2014) பங்குனி மாதம் இருவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.
இராணுவத்தின் உத்தரவின் பேரில் தாய் ஜெயக்குமாரியின் முன்னிலையில் சரணடைந்த அவரின் பதினைந்து வயது மகன் பற்றிய தகவல் ஏதும் இதுவரை இல்லை. அப்படியொரு நபர் தமது பாதுகாப்பில் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் கைவிரித்துவிட்டது. ஆயினும், இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட வெளியீடொன்றில் அவரது மகனின் படமும் காணப்படுவது குறிப்பிட வேண்டியது.
அப்பாவித் தமிழர்கள் வகைதொகையின்றி கொன்றொழிக்கப்பட்ட யுத்தத்தின் போது இறுதியில் சிறிலங்காவின் பதில் பாதுகாப்பமைச்சராக பணிபுரிந்த தற்போதைய ஜனாதிபதியோ, ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு உரித்தான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க மறுத்துள்ள நிலையில், தமிழர்கள் மீது யுத்தக் குற்றம், மனிதநேயத்திற்கெதிரான குற்றம், இனப்படுகொலை புரிந்த குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச அளவில் ஆளாகியுள்ள இராணுவத்தினருக்கு இவ்வதிகாரங்களை வழங்கியுள்ளமை ஜனநாயக விரோத செயலாகும்.
சிறிலங்காவின் கிழக்குமாகாணத்தில் திருகோணமலையில் கோத்தபாயாவின் இரகசிய தடுப்பு முகாம் ஒன்றில் 700க்கும் அதிகமான மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவர் கூறியுள்ளார். இவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பாவனைப்படுத்திய எண்ணெய்க் கழிவு, இரசாயனக்கழிவு முதலியவற்றை குழிகளில் கலந்து விடுவதன் மூலம் நிலக்கீழ் நீர்வளம் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவருகிறது. சுற்றாடலில் உள்ள கிணறுகளில் இதன் தாக்கம் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
பலவருடங்களாக மாசடைந்த நீரைப் பருகியதால் மக்கள் நோய்வாய்ப்பட்டும் பிறக்கும் குழந்தைகள் பலதரப்பட்ட குறைபாடுகளுடன் காணப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் கவனத்திற்கு இது கொண்டுவரப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இராணுவத்தினரின் மனிதநேயமற்ற இந்நடவடிக்கையும் அரசாங்கத்தின் அசமந்தப் போக்கும் குறிப்பிட்ட மக்களை சுற்றுவட்டாரத்திலிருந்து அப்புறப்படுத்தும் இரகசிய இனச்சுத்திகரிப்புத் திட்டத்தின் அம்சமோ என மக்கள் அஞ்சுகின்றார்கள். என்றும் அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் கூறியுள்ளார்.
அரசாங்கம் மாறியும் தமிழர்படும் இன்னல்களில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms4H.html

Geen opmerkingen:

Een reactie posten