கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? -ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 12:15.39 AM GMT ]
கடற்படை உத்தியோகத்தர்களினால் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களை கடத்திச் சென்று திருகோணமலை கோத்தபாய முகாமில் தடுத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, புலனாய்வு பிரிவினருக்கு நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
புலனாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை விசாரணைப் பிரிவினால் நீதிமன்றில் சாட்சியமளித்த போது தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவொன்றின் விசாரணைகளின் போது இளைஞர்கள் காணாமல் போன விடயம் அம்பலமானது.
முகாமில் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நீதவான் அறிவித்துள்ளார்.
கோத்தபாய முகாமை தாமே நிறுவியதாக கடற்படையின் சட்டப் பிரிவு பணிப்பாளர் வீரசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo0D.html
கடத்தல்கள் தொடர்பில் கடற்படையினரிடமிருந்து பல தகவல்கள் அம்பலம்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 01:58.40 AM GMT ]
இதன்மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த கடத்தல்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொடவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் கடத்தல்கள் தொடர்பில் சந்தேகங்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திருகோணமலையில் சில இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போனமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கடத்தல் சம்பவங்கள்: 7 கடற்படையினரிடம் விசாரணை
2008, மற்றும் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போயுள்ள 11 பேர் தொடர்பிலான விசாரணைகளில் ஏழு கடற்படை அதிகாரிகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் கொழும்பின் பல பிரதேசங்களிலிருந்தும் கடத்தப்பட்டு திருகோணமலை, கொழும்பு கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரிலேயே இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் மருதானை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் காணாமல் போனோர் உயிருடன் உள்ளனரா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை எனவும், இவர்கள் குறித்து பொறுப்புக்கூறத்தக்க அனைவரிடமும் குற்றப்புலனாய்வு பிரிவு சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் தஸநாயக்க விசாரணைகளின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் தேவையிருப்பின் அவர் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட குழுக்களில் ஒன்று அவரின் கீழ் செயற்பட்டுள்ளமை தொடர்பிலான சந்தேகத்திலேயே தஸநாயக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும் இன்னும் 3 முக்கிய கடற்படை அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், குற்றப்புலனாய்வு பிரிவினர் இதுவரை 31 வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெஹிவளையில் 2008ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கடத்தப்பட்ட இரு முஸ்லிம் மாணவர்கள் உள்ளிட்ட 5 மாணவர்களின் விவகாரம் இவ்விசாரணைகளில் முக்கிய இடம்பிடித்துள்ளதாகவும்,
மொத்தமாக இரு சிங்களவர்களும், இரு முஸ்லிம்களும், ஏழு தமிழர்களும் இவ்வாறு கடத்தப்பட்டு அவர்களிடம் கப்பம் கோரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo1D.html
Geen opmerkingen:
Een reactie posten