தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 maart 2015

மைத்திரி அரசாவது தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன்



வலி.கிழக்கு வளலாய் பகுதியில் காணிகளைப் பார்வையிட உரிமையாளர்களுக்கு வாய்ப்பு
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 09:30.58 AM GMT ]
வலி.கிழக்கு வளலாய் பகுதி மக்கள் நாளை மறுதினம் தமது சொந்த நிலங்களைப் பார்வையிடவும், காணிகளை அடையாளப்படுத்தவும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மீள்குடியேற்ற நடவடிக்கை குழுவின் தலைவர் ஹரீன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேற்படிக் குழுவின் கூட்டம் இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
வலி. கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட வளலாய் பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக 272 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்கான பதிவினை மேற்கொண்டிருக்கின்றனர்.
இதற்கமைய நாளை மறுதினம் காணி உரிமையாளர்கள் தங்கள் காணிகளுக்குச் சென்று, தங்கள் காணிகளை அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வெள்ளிக்கிழமை காலை காணி உரிமையாளர்கள் கே.கே.எஸ்.விதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தின் தொடக்கப் பகுதிக்கு வருகைதர வேண்டும். அதன் பின்னர் அவர்கள் தங்கள், காணிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு அங்கு அடையாளப்படுத்த அனுமதிக்கப்படுவர்.
இதற்கமைய 233ஏக்கர் நிலம் அடையாளப்படுத்தப்படவுள்ளது. இது மீள்குடியேற்றத்தின் முதற்கட்டமாகும். இதேபோன்று 1000ஏக்கர் நிலத்தில் மீதமாகவுள்ள பகுதிகளும் பகுதி பகுதியாக, பார்வையிடவும் அடையாளப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இம்மாதத்தின் 31ம் திகதிக்குள் 1000 ஏக்கர் நிலத்தில் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


முன்னாள் போராளிகளுடன் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் கலந்துரையாடல்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 10:07.15 AM GMT ]
வட மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சு ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு உதவித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் குறித்த குடும்பங்களை அமைச்சர் டெனீஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில், புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மாவீரர்களின் குடும்பங்கள், காணாமல் போனோரின் பெற்றோர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதுடன், தங்களின் நிலை தொடர்பாக தெளிவு படுத்தியுள்ளனர்.
மேலும் இவ்விடயத்தில் எந்தவித அரசியல் வாதிகளையும் உள்வாங்காது தூய நோக்கோடு முன்னகர்த்திச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர்.
புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மரணமடைந்த போராளிகளின் குடும்பங்களையும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இவ்விடயத்தில் அரசியல் கலப்படமின்றி செல்வதே எல்லோருக்கும் நன்மை பயக்குமென்றும்,
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த சவால்கள் வந்தாலும் அதற்கு முகம் கொடுக்க தயார் எனவும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இதன்போது தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu4I.html


மைத்திரி அரசாவது தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 10:33.57 AM GMT ]
எமது மக்கள் இந்த நாட்டில் ஏற்பட்ட பல போராட்டங்களினால் பல்வேறு இழப்புக்களை சந்தித்து, இறுதியில் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் விசனம் தெரிவித்துள்ளார்.
அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அக்கரைப்பற்று தீவுக்காலை கிராமத்தில் கணவனை இழந்த விதவைகளுக்கு நிதி வழங்கும் நிகழ்வு நேற்று தீவுக்காலை பொது மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீஸ்வரன், பிரதேச செயலக நிர்வாகிகள், ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ரெட்ணவேல், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார், கிராமசேவை உத்தியோகஸ்தர் மற்றும் நிதி உதவிகளை பெறுவோர் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
2002 கிழக்கு மாகாணசபைக்கு தெரிவாகி முதன்முதலாக எனது நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள முதலாவது நிகழ்வு என்பதுடன், எமக்கு ஒதுக்கப்படும் நிதியின் மூலம் எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது மக்கள் சகல வழிகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலில் பிரவேசித்தேன் ஆனால் அவ்வாறு செய்வதற்கு ஒன்றுமில்லாத நிலையிலே இன்று அரசியலை கொண்டு நடத்தவேண்டிய சூழ்நிலை இருக்கின்றது என்பது மனவேதனை தரும் விடயமாகும்.
முன்னைய ஆட்சியில் பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் இணைந்து வேலை செய்யமுடியாத நிலையில் இருந்தோம். ஆனால் புதிய ஆட்சி மாற்றத்தின்பின்னர் அந்தநிலை சற்று மாற்றமடைந்து காணப்படுவதனை இது போன்ற நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்ளமுடியும்.
எமது வட,கிழக்கு மக்களுக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் த.தே.கூட்டமைப்பு இன்றும் ஒன்று பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
புதிய அரசாங்கம் ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றியபோது பல கட்சிகள் அந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றிருந்தார்கள் ஆனால் த.தே.கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
நீண்ட காலமாக எமது இனத்தின் விடுதலைக்காக ஆயுத போராட்டம், அகிம்சை ரீதியான போராட்டம், தற்போது இராஜதந்திரப் போராட்டம் என பல போராட்ட வடிவங்களை மேற்கொண்டு வரும் காரணத்தினாலேயே நாங்கள் அமைச்சு பதவிகளை ஏற்கவில்லை.
இந்தச்சந்தர்ப்பத்தில் நாங்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டால் எமது மக்களின் விடுதலையை பெற்றுக்கொடுக்க திராணி அற்றவர்களாக போய்விடுவோம்.
புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாணசபை ஆட்டம் கண்டது. அதில் இருந்த முதலமைச்சர் தமிழர் பிரதேசங்களையும் தமிழ் மக்களையும் முற்றுமுழுதாக புறக்கணித்தே தமது கடமையினை மேற்கொண்டார்.
அத்துடன் எமது மக்கள் தொடர்பாக நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரிக்கும் ஒருவராகவே செயற்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமத்துவம், பிராந்தியம், அபிவிருத்தி என்று பல மில்லியன் ரூபாக்களை கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கியபோதும் திட்டமிட்டு முற்றுமுழுதாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்க்கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழர்களுக்கான வேலைவாய்ப்பில் நீதிமன்றம் செல்லக்கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சபையில் த.தே.கூட்டமைப்பானது முஸ்லிம் காங்கிரஸ் போன்று செயற்பட்டிருந்தால் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பெரும் இடைவெளியை உருவாக்கியிருந்திருக்கும் அந்த இடைவெளி நீண்ட காலத்திற்கு இரண்டு சமூகங்களுக்கும் ஒரு மனக்கசப்பான செயற்பாடாகவே இருந்துவந்திருக்கும் அதனை கருத்தில் கொண்டு எமது தலைமைகளும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் எடுத்த தூரநோக்கு சிந்தனையின் ஊடாக தமிழ், முஸ்லிம் மக்களுடைய உறவில் விரிசலை தடுத்திருக்கின்றோம்.
எமது மக்களின் நிலங்கள் பல வழிகளில் சூறையாடப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக இராணுவ முகங்கள் அமைப்பதற்கென்றும், தொல்பொருள் அகழ்வுக்கென்றும், வனபரிபால இலாக்காவுக்காகவும் பூர்வீக நிலங்கள் இன்றும் அபகரிக்கும் செயற்பாடே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இனிவரும் காலங்களிலாவது புதிய அரசு தமிழ்மக்களுக்கான தீர்வினை வழங்க வேண்டும் இந்த தீர்வு எமது மக்களுக்கு கிடைக்கும் வரைக்கும் த.தே.கூட்டமைப்பின் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu4J.html

Geen opmerkingen:

Een reactie posten