தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 maart 2015

தமிழ் கைதிகளின் விடுதலை விவகாரம்! சொலிசிட்டர் ஜெனரலுடனான சந்திப்பு தொடர்பாக சுமந்திரன் விளக்கம்!

வடக்கு அதிவேக பாதை: மகிந்தவுடனான ஒப்பந்தத்தைவிட குறைந்த நிதியில் முன்னெடுக்க சீன நிறுவனம் இணக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2015, 11:35.55 PM GMT ]
வடக்கு அதிவேகப் பாதையை நிர்மாணிபபதற்கு மகிந்த அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைவிட 60 மில்லியன் அமெரிக்கன் டொலர் குறைவான நிதியில் திட்டத்தை முன்னெடுக்க சீன நிறுவனம் புதிய அரசாங்கத்துடன் இணக்கம் கண்டுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அவ்வாறு கடந்த அரசாங்க காலத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அந்த சுமையும் மக்களையே சென்றடைந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோது அமைச்சர் இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்த நாடு வசதிபடைத்தோரின் ஆடுகளமாகவே விளங்கியது.  கடந்த ஆட்சிக்காலத்தில் எமது அயல் நாடுகளுடனான நட்புறவில் கூட திருப்தி காணப்படவில்லை.
வடக்கு அதிவேக பாதையை நிர்மாணிப்பதற்கு கடந்த அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் அப்போதைய ஒப்பந்தத்தை விட 60 மில்லியன் டொலர் குறைத்து அந்த திட்டத்தை மேற்கொள்ள முடியுமென தற்போதைய அரசாங்கத்துடன் இணக்கம் கண்டுள்ளது.
இதன் மூலம் எந்தளவு நிதி எவரது பைக்குள் போயிருக்கும் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. இதன் சுமை மக்களுக்கே போய்ச் சேரும் என்பதே உண்மை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
உலக வங்கியின் கூற்றுப்படி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் எமது நாட்டில் வீதி அபிவிருத்திக்காக நிதி செலவிடப்பட்டுள்ளமை அறிய வருகிறது.
பெரும் மோசடியொன்று இதில் இடம்பெற்றுள்ளமை தெட்டத்தெளிவாக விளங்குகிறது. மக்களுக்கான நிதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டுள்ள அரசாங்கம் என்ற வகையில் இவை அத்தனை திட்டங்களின் பின்னணி தொடர்பில் ஆராய்ந்து அனைத்து முறையற்ற செயற்பாடுகளையும் களைந்து முறைப்படி அவற்றை எதிர்காலத்தில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதை பிரதான விடயமாகக் கொண்டிருந்தோம். கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை மிகவும் குறைந்து காணப்பட்டபோதும் கடந்த அரசாங்கம் அதன் பலனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கத் தவறிவிட்டது.
நாம் 100 நாள் திட்டத்தில் எரிபொருள் விலை, எரிவாயு விலை உட்பட 13 முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். இதனால் மக்கள் தமது செலவை மீதப்படுத்த முடிந்துள்ளது.
நூறு நாள் திட்டத்தில் பல்வேறு வெற்றிகரமான செயற்திட்டங்களை அரசாங்கத்தால் மேற்கொள்ள முடிந்துள் ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் கைதிகளின் விடுதலை விவகாரம்! சொலிசிட்டர் ஜெனரலுடனான சந்திப்பு தொடர்பாக சுமந்திரன் விளக்கம்!
[ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2015, 11:54.43 PM GMT ]
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் சுகத் கம்லத்தை நேற்று சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதாகவும், இந்தச் சந்திப்புக்கு அமையவே குழுவொன்றை அவர் நியமித்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
இந்தக் குழு எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு முதன் முதலில் கூடி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவது குறித்து ஆராயும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் சுகத் கம்லத்தை நேற்று சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதாகவும், இந்தச் சந்திப்புக்கு அமையவே குழுவொன்றை அவர் நியமித்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இது தொடர்பாக ஆராய்ந்து அரசியல் கைதிகளை எந்த அடிப்படையில் துரிதமாக விடு விக்கலாம் என்பது குறித்து கலந்துரையாடுவதற்கு சிறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்த வரையில் மூன்று பிரிவினராக நாம் பார்க்கின்றோம். வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவர்கள், வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருபவர்கள் மற்றைய குழுவினர் எதுவித வழக்கும் தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்.
இவர்களை எந்த அடிப்படையில் விடுவிப்பது என்பது குறித்து இக்குழு ஆராயும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
தமிழ் அரசியல் கைதிகள் பலவந்தமாக புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
புனர்வாழ்வு என்பது கைதிகளின் விருப்பத்துக்கு மாறாகத்தான் செய்யப்படுகிறது. ஆனால் புனர்வாழ்வு என அனுப்பப்படுகின்ற போது, ஆறு மாதங்களுக்குப் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் ஆயின் ஆறு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நிச்சயம் எமக்கு உள்ளது.
புனர்வாழ்வுக்கு அனுப்பப்படாமல் இருந்தால் இரண்டு மூன்று வருடங்கள் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கான நிலைமையும் காணப்படுகிறது. புனர்வாழ்வு நடவடிக்கைகளின் மூலமே 900ற்கும் அதிகமாக இருந்த அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை 300 ஆகக் குறைக்க முடிந்துள்ளது.
புனர்வாழ்வுக்கு அனுப்பும் விடயத்தை சட்டப்படியாக ஏற்றுக்கொள்ள முடியாது இருந்தாலும், குறிப்பிட்ட காலத்துக்கு புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் ஆயின் அந்தக் காலத்தின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்ற நிச்சயம் உள்ளது என்றும் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. எந்தெந்த சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்ற முழு விபரங்களும் எம்மிடம் உள்ளன.
பயங்கரவாதம் தற்பொழுது இல்லை. இறுதி யுத்தத்தில் ஆயுதமேந்திப் போராடியவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSUSUmuyJ.html

Geen opmerkingen:

Een reactie posten