தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கனகராயன்குளம் சிறுமி சரண்யாவின் மரணம் !

கனகராயன்குளம் மன்னகுளம் சந்தியைச் சேர்ந்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவியான 15 வயதுடைய செல்வராசா சரண்யா என்ற சிறுமி சிவராத்திரியை முன்னிட்டு, தெரிந்தவர்களுடன் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் சென்றதாகவும், இரண்டு தினங்கள் கழித்து திரும்பி வந்த அவர், சுகயீனம் காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் வைத்தியத்திற்காக, கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர் அங்கு உயிாிழந்துள்ளார்.
தொண்டை நோகின்றது கதைக்க முடியாத என்ற காரணத்திற்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆயினும், இவருடைய மரணம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், இந்தச் சிறுமி மோசமான முறையில் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக சிறுமியின் அம்மம்மாவுக்கும், இந்த சிறுமியின் மரணத்தையடுத்து, அவர்களுக்கு உதவிபுரிவதற்காகச் சென்றிருந்த ஊர் முக்கியஸ்தர்களிடமும், வைத்தியசாலையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி திருலோகமூர்த்தி விசாரணைகளை நடத்தியதன் பி;ன்னர் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து சிறுமியின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. சுகயீனம் காரணமாக கடந்த புதன்கிழமை மாங்குளம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட இந்தச் சிறுமி மறுநாள் வியாழக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் மரணமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு வல்றுறவுக்கு இந்தச் சிறுமி உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்ப்பட்டுள்ள போதிலும், சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தனது அம்மம்மா சீதையம்மாவிடம் வளர்ந்து வந்த இந்த சிறுமிக்குப் பெற்றோர் இருவரும் இல்லை. இயல்பாக பாடசாலைக்குச் சென்று வந்த இந்தச் சிறுமி, அவருடைய மூத்த சகோதரன் தங்கியிருக்கின்ற வீட்டில் உள்ள இரண்டு சிறுமிகளுடன் நட்பு கொண்டிருந்ததாகவும், அந்தச் சிறுமிகளின் தாயாருடனும் நன்றாகப் பழகி வந்ததாகவும், அவர்களுடைய வீட்டில் இருந்தே இந்தச் சிறுமியும் ஏனையோரும் திருக்கேதீஸ்வரம் போய் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 16 ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் சென்றிருந்த இந்தச் சிறுமி இரண்டு தினங்களின் பின்னர் 18 ஆம் திகதி திரும்பி வந்து, ஒரு வாரம் கழிந்த நிலையில் கடந்த புதன்கிழமையே சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சிறுமியை வைத்தியசாலைக்குக் கூட்டிச் சென்று அனுமதித்த அந்த வீட்டுப் பெண், இது குறித்து சிறுமியின் அம்மம்மாவிற்கோ அல்லது வேறு உறவினர்களுக்கோ உடனடியாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராஜா, ஜி.ரிலிங்கநாதன், தர்மபால செனிவிரத்ன ஆகியோர் உயிரிழந்த சிறுமியின் அம்மம்மா மற்றும் அந்தக் கிராமத்து முக்கியஸ்தர்கள், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten