தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 maart 2015

தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளதாக தகவல்: மறுக்கும் கடற்படை



நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு தனி வீடுகள்! இன்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 08:21.54 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக 52 குடும்பங்களுக்கு 7 பேர்ச் காணியில் தனி வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அக்கரப்பத்தனை போட்மோர், டயகம பிரதேசங்களில் நடைபெற்றது.
அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டப் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கும் மற்றும் டயகம இரண்டாம் பிரிவில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இந்தநிகழ்வில், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
 
 
 
 
 
 
 
 
இரண்டாம் இணைப்பு
இந்த வீடுகளில் 30 வீடுகள் தலவாக்கலை, பொட்மோர் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளதுடன் 22 வீடுகள் அக்கரபத்தனை, டயகம தோட்டத்திலும் நிர்மாணிக்கப்பட உள்ளன.
இரண்டு படுக்கை அறைகள், சமையலறை, குளியலறை என்பவற்றை கொண்டிருக்கும் எனவும் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக தலா 7 பேர்ச்சஸ் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பீ. திகாம்பரம், கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன், பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர் வேலாயுதம்,
மலையகத்தில் வெள்ளம், மண்சரிவு மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும்.
முதற்கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் பதுளை, நுவரெலியா, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.
அத்துடன் இரண்டாம் கட்டமாக தனிவீடுகளிலுள்ள மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.
2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு முழுமையாக காணி உறுதிப்பத்திரங்களை உடனடியாக வழங்க முடியாது எனவும் ஏனையவர்களுக்கு கட்டம் கட்டமாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க முடியும்.
மேலும், மலையக மக்களின் விடிவிற்காக செயற்பட்டு வரும் புதிய அரசாங்கத்தை பலப்படுத்த மக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ராஜாங்க அமைச்சர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து விரைவில் பேச்சு: ரிசாட்
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 08:29.33 AM GMT ]
விடுதலை புலிகளினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியயூதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளுடன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் வடபுல மக்கள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மற்றும் அத்தியாவசியமான தேவைகள் குறித்தும்,
இதுவரையில் விடுவிக்கப்படாத நிலையிலுள்ள மக்களின் விவசாய மற்றும் குடியேற்ற காணிகளின் விடுவிப்பு குறித்தும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடபுல மக்கள் மீள்குடியேறுவதற்கு தயாராகவுள்ளனர் எனவும், அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினால் தாமதமடைந்து வருகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத்தினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தீர்வினை பெற்று கொடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கர்ப்பிணி தாய்மாருக்கு மாதம் இரண்டாயிரம் வழங்கப்படும்!– அமைச்சரவை பேச்சாளர்
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 09:00.15 AM GMT ]
வரவு செலவுத் திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 20 ஆயிரம் ரூபா மாதம் 2 ஆயிரம் என்ற கணக்கில் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் முறை திருத்தத்தின் பின்னர், புதிய தேர்தல் நடத்தப்படும். தொகுதிவாரி மற்றும் விகிதாசார அடிப்படையிலான கலப்பு தேர்தல் முறையாக அது இருக்கும்.

கடந்த அரசாங்கத்தில் தினேஷ் குணவர்தன குழு பரிந்துரை தேர்தல் முறைக்கும் அப்பால் சென்ற தேர்தல் முறையாக புதிய தேர்தல் முறை அமையும்.
அரசியலமைப்புத் திருத்ததிற்கு பிறகோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பு பின்னரோ பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையாளரின் அறிக்கை அடுத்த சில தினங்களில் கிடைக்கும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் புத்திசாலி: முஸ்லிம் காங்கிரஸ் பாராட்டு
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 09:02.25 AM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் புத்திசாலித்தனமான முடிவு இன ஐக்கியத்தை வலுப்படுத்துகின்றது என முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது.
இக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதில் இருந்த இழுபறி நிலைமைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமயோசிதமாக அரசியல் அனுபவத்தின் புத்திசாலித்தனத்துடன் எடுத்த முடிவு கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் இன ஐக்கியத்தை வலுப்படுத்த உதவியுள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பு குறித்து மாகாணத்தில் வாழும் தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இனமுறுகல் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சரியான தருணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரினால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அக்குழு பாராட்டியுள்ளது.
மேலும் த.தே.கூ தலைவரினால் எடுக்கப்பட்ட முடிவு துணிச்சலும், அரசியல் புத்திசாதூர்யமும் மிக்கதுடன், இரு இனங்களுக்கிடையிலும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது.


ஐயோ காங்கேசன்துறையில் கட்டிய மாளிகை என்னுடையது இல்லை. மஹிந்த
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 09:39.15 AM GMT ]
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஜனாதிபதி மாளிகை அல்ல எனவும் அது சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எனது பாவணைக்காக காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகையை கட்ட நடவடிக்கை எடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
காங்கேசன்துறையில் எந்த ஜனாதிபதி மாளிகையும் கட்டப்படவில்லை என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 1980 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அழிப்பதற்கு முன்னர், யாழ்ப்பாண கோட்டையில் ஜனாதிபதி மாளிகை ஒன்று இருந்தது என்பதை நினைவுப்படுத்த வேண்டும்.
அங்கிருந்த மாளிகை இதுவரை மீள நிர்மாணிக்கப்படவில்லை. காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்படுவது ஜனாதிபதி செயலகத்தின் கீழ் வரும் சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம். கடற்படையினரே அந்த கட்டடத்தின் நிர்மாணிப் பணிகளுக்கு பொறுப்பாக இருந்தனர்.
இலங்கையில், உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், இலங்கை மன்றக் கல்லூரி, தாமரை தடாகம் ஆகியன மாநாட்டு மத்திய நிலையங்கள் ஜனாதிபதி செயலகத்தின் பொறுப்பின் கீழ் உள்ளன.
காங்கேசன்துறை மற்றும் அருகம்பை பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடங்கள் ஜனாதிபதி மாளிகைகள் அல்ல. அவை சர்வதேச மாநாட்டு மத்திய நிலையங்கள்.
இலங்கையில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளின் போது வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் ஏனைய உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகளின் பயன்பாட்டுக்காக இவை கட்டப்படுகின்றன.
நாட்டில் சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காங்கேசன்துறை மற்றும் அருகம்பை பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச மாநாட்டு மத்திய நிலையங்களில் தங்குமிட வசதிகள் உள்ளன.
இதுதான் ஏனைய மாநாட்டு மத்திய நிலையங்களுக்கு இவற்றுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடாகும். இந்த மத்திய நிலையங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இவ்வாறான கட்டடங்களை நிர்மாணிப்புகளை ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்க மேற்கொள்ளப்படும் வீண் செலவுகள் என கடந்த காலம் முழுவதும் எனக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதில் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது எனக் கூறவேண்டும். பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTZSUmqzC.html

தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளதாக தகவல்: மறுக்கும் கடற்படை
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 09:40.43 AM GMT ]
தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை மீனவர்கள் சி்றைப்பிடித்து வைத்துள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராமநாதபுரம் கோடியகரையில் இருந்து கடந்த 1 ஆம் திகதி மாலை கடலுக்குச் சென்ற மீனவர்களையே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து வைத்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மீனவர்கள் கோடியகரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களை சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தியதுடன் பணம் கொடுக்காவிட்டால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர் எனவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து படகு உரிமையாளர் அந்த ஊடகத்திற்கு தெரிவிக்கையில், கடந்த 1 ஆம் திகதி 7 மீனவர்களுடன் எனது நாட்டுப்படகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றது. வழக்கமாக 3 நாளில் படகு கரை திரும்பி விடும். அதன்படி நேற்று மாலை படகு திரும்ப வேண்டும். ஆனால் எந்தவித தகவலும் இல்லாததால் நாட்டுப்படகில் உள்ள செல்போனை தொடர்பு கொண்டேன். அப்போது சிங்கள மொழியில், ‘தொடர்பு கொள்ள முடியாது’ என்ற வாசகம் கேட்டது என தெரிவித்தார்.
படகில் உள்ள மீனவர் ஒருவர் படகு உரிமையாளரான மைக்கேலை தொடர்பு கொண்டு தெரிவித்த தகவலின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என மேலும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இது குறித்து, இந்திய தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் யாழ். நீரியல் வளத்துறைத் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், கடற்றொழில் சங்கங்களும் சம்பவம் குறித்து தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளன.
இது குறித்து கடற்படைக்கு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் அறிவித்துள்ளதாகவும் திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

http://www.tamilwin.com/show-RUmtyDTZSUmqzD.html

Geen opmerkingen:

Een reactie posten