தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 maart 2015

போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளூர் விசாரணையில் ஐ.நா உள்வாங்கப்படமாட்டாது: ஜனாதிபதி

மோடியின் வருகை இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்: கனேடிய தமிழர் பேரவை
[ வியாழக்கிழமை, 12 மார்ச் 2015, 04:51.20 AM GMT ]
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் இந்திய பிரதமரின் வருகை பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வையும், அமைதியையும், உண்டாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமரை வரவேற்று கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வருடங்களின் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதோடு முதல் தடவையாக இந்திய பிரதமரொருவர் வடமாகாணத்திற்கு செல்வதும் தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் உறுதி பூண்டுள்ளதை அப்பேரவை வரவேற்றுள்ளதாகவும்,
2009ம் ஆண்டின் பின்னர் மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகள், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அகற்றுதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி பல்வேறு அமைப்புக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் தமிழர்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்படும் என கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டை இயல்புபு நிலைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அரச பதவிகளிலிருந்து இராணுவத்தை நீக்கியமை, வட, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயம், ஜெயக்குமாரி உள்ளிட்ட எண்மரின் விடுதலை, உள்ளிட்டவை இவற்றிற்கு சிறந்த உதாரணங்களாகும்.
அது மாத்திரமல்லாது யுத்த குற்ற விசாரணைகளையும் பக்கசார்பின்றி மேற்கொள்ளும் என கனேடிய தமிழர் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளளது.
மேலும் இலங்கையின் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணி அரசாங்கத்தினால் இலங்கையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று கொடுப்பதற்கான சிறந்த வாய்ப்பு இந்திய பிரதமரின் வருகையாகும்.
இதனை தவறவிடாது தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட இலங்கை அசாங்கத்திற்கு இந்திய பிரதமர் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என குறித்த பேரவை கேட்டு கொண்டுள்ளது.
அத்துடன் தமிழகத்திலுள்ள முகாம்களில் தஞ்சம் கொண்டுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அனுப்புதல், மற்றும் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்று கொடுப்பதற்கும் இந்திய பிரதமர் முன்னுரிமை வழங்க வேண்டும் என கனேடிய தமிழர் பேரவை கேட்டு கொண்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSWSUmvzC.html


மோடியின் இலங்கை வருகையை தமிழ் கட்சிகள் சாதகமாக்கி கொள்ள வேண்டும்: ஆனந்த சங்கரி
[ வியாழக்கிழமை, 12 மார்ச் 2015, 03:57.26 AM GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வை பெற்று தரும் புதிய திருப்புமுனையாகும்.
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு முடியாமல் பல தடைகள் ஏற்பட்டதை நாம் பலரும் அறிந்ததொரு விடயம்.
எனினும் இன்று தென்னிலங்கை அரசியற் கட்சிகளிடையே ஏற்பட்ட மாற்றமும், இலங்கை மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்ட ஆட்சி மாற்றமும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதில் மேலும் வல சேர்த்துள்ளது.
இந்திய பிரதமரின் வருகையானது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தகுந்த சந்தர்ப்பம் என்பதுடன்,தமிழ்க் கட்சிகள் ஒரே குரலில் பேசி ஒரு நிலையான தீர்வை எட்டுவதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்பதால் இதை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் சுஷ்மா ஸ்வராஜின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நான் அழைப்பு விடுகிறேன் எனவும்,
அவருடன் இணைந்து ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும், காலாகாலமாக புறக்கணிக்கப்பட்டுவரும் மலையக தமிழர்களின் தலைமைகளையும் ஒன்றுசேர்த்து இந்த அரிய சந்தர்ப்பத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள, இணைந்து செயற்பட அழைப்பை விடுப்பதுடன் கூட்டாக இணைந்து செயற்பட்டு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாகவும் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும், இந்திய அரசின் ஆர்வத்தையும் சாதகமாக்கி, எமது ஒற்றுமையை வழங்கி நிரந்தர தீர்வைக் காண அனைவரும் முன்வருவதுடன், இந்த சந்தர்ப்பத்தையும் நழுவவிடாது, பயன்படுத்தி கொள்வோம் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் கேட்டு கொண்டுள்ளோர்.

86 இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு
[ வியாழக்கிழமை, 12 மார்ச் 2015, 05:25.57 AM GMT ]
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 86 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் நாளை இலங்கை வரவுள்ள நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட மீனவர்கள் அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதன்படி 67 காரைக்கால் மீனவர்களும், 19 நாகை மீனவர்களும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம் மீனவர்களே விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளூர் விசாரணையில் ஐ.நா உள்வாங்கப்படமாட்டாது: ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 12 மார்ச் 2015, 02:43.25 AM GMT ]
போர்க்குற்றம் தொடர்பான இலங்கையின் உள்ளக விசாரணையின்போது ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் உள்வாங்கப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் அவர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஒரு மாதத்துக்குள் குழுவை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சர்வதேச அழுத்தத்தின்கீழ் அதில் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் உள்வாங்கப்படமாட்டார்கள் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிபிசி சிங்கள சேவையிடம் இந்தக்கருத்துக்களை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
குறித்த விசாரணைக்குழு பக்கச்சார்பற்ற வகையில் அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பவுள்ளதாகவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSWSUmvyJ.html

Geen opmerkingen:

Een reactie posten