தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 maart 2015

கிளிநொச்சியில் மாணவர்களும், பெற்றோரும் கவனயீர்ப்பு போராட்டம், வட,கிழக்கில் காணாமல் போனோரின் உறவுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முன்னெடுக்கும் அமைதி வழிபோராட்டம்!

தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகவியலாளர்களும் உறவுக்கார பங்காளிகள்: மனோ கணேசன்
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 07:00.56 AM GMT ]
தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகவியலாளர்களும் உறவுக்கார பங்காளிகள். இந்த உறவிலே நட்பு, அன்பு, பற்று, பாச உணர்வுகள் இருக்கும். அதேபோல் கோபம், சண்டை, வருத்த உணர்வுகளும் இருக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதை நான் இன உணர்வை அடிப்படையாக கொண்டு செயற்படும் தமிழ் ஊடகவியலாளர்களிடையிலும், தமிழ் அரசியல்வாதிகளிடையிலும் காண்கிறேன் என்றார்.
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்திய விருது விழாவிலே சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தலை நிமிர்ந்து செயற்படும் ஊடகவியாலாளர், அரசியலர் மத்தியில் இந்த உணர்வு பரிமாற்றங்கள் சகஜம். இதன்மூலம் இவர்கள் இயங்குகிறார்கள் என்பது உறுதிபடுத்தப்படுகிறது.
கொழும்பில் இருந்தே மிகப்பெரும்பாலான தமிழ் ஊடக நிறுவனங்கள், தம் நாடு தழுவிய பணிகளை முன்னெடுக்கின்றன.
எனவே ஜனநாயக தேர்தல்களில், கொழும்பில் வாழும் தமிழ் மக்களின் பேரதிக வாக்குகளை பெற்றுள்ள கட்சியின் தலைவன் என்ற முறையில் நான் பெருமையடைகின்றேன்.
அதுமட்டுமல்லாமல், நமது நாட்டு ஊடக சமூக பரப்பிலே நமது தமிழ் ஊடகவியலார்கள் சந்தித்துள்ள சவால்களை நான் நேரடியாக அறிவேன்.
இங்குள்ள தமிழ் ஊடக நண்பர்கள் எந்தளவுக்கு தமிழ் சமூகத்தின் முன்னெடுப்புகளுக்கு திரைமறைவில் நின்று பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்கள் என்பதையும் நான் நேரடியாக அறிவேன்.
இங்கே உரையாற்றிய விழாக்குழு தலைவர் ஒரு கருத்தை சொன்னார். ஒரு காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் துன்பங்களை சந்தித்த போது, பெரும்பான்மை இன ஊடகவியலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய ஊடக அமைப்புகள் உதவிக்கு வரவில்லை.
அதனாலேயே தாம் இந்த தமிழ் ஊடகவியலாளர் அமைப்பை கட்டியெழுப்பும் முடிவுக்கு கூட்டாக வந்தோம் என்று சொன்னார். பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில ஊடக நண்பர்கள் தனிப்பட்ட முறையில், தமிழ் ஊடகவியலாளரின் பிரத்தியேக பிரச்சினைகளை கண்டுக் கொண்டார்களே தவிர அமைப்பு ரீதியாக, தேசிய ஊடக அமைப்புகள் தமக்கு உதவிடவில்லை என்று சொன்னார்.
இந்த தகவல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இது நூறு விகித உண்மை என்று எனக்கு நன்கு புரிகிறது.
இப்போது நாடு முழுக்க தேர்தல் முறை மாற்றம் பற்றி பேசப்படுகிறது. இந்த மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சிறு கட்சிகளை, பெரும்பான்மை கட்சிகளை அண்டி வாழும் சூழலை ஏற்படுத்த முயல்கிறார்கள்.
இது பற்றி வினா எழுப்பினால், இனரீதியான கட்சிகளை கைவிட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை கட்சிகளுடன் இணையும் நோக்கில் இனி எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என எமக்கு உபதேசம் செய்கிறார்கள்.
பெரும்பான்மை கட்சிகள், சிங்கள தேசியத்தை மாத்திரம் முன்னெடுப்பதை கைவிட்டு, இலங்கை தேசியம் என்ற கொள்கையை முன்னெடுத்தால் நாம் ஏன் இனரீதியான கட்சிகளை முன்னெடுக்கின்றோம்? இங்கே எங்கே, சிறிலங்காவும், சுதந்திரமும், ஐக்கியமும், தேசியமும் இருக்கின்றன? இல்லவே இல்லை.
எனவேதான் எமக்கு உபதேசம் செய்வதை நிறுத்தி விட்டு நீங்கள் மாறுங்கள் என பெரும்பான்மை கட்சிகளிடம் சொல்கிறோம். தேர்தல் காலங்களில் நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டங்களின் காரணமாக பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்கிறோம். மற்றபடி எங்கள் தனித்துவத்தை பேணிக்கொள்கிறோம்.
அதேபோல்தான் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும், பெரும்பான்மை தேசிய ஊடக அமைப்புகளுடன் சேர்ந்து பொது பிரச்சினைகளில் செயற்படுகிறது.
அதேவேளை தம் தனித்துவத்தையும் பேணிக் கொள்கிறது. இந்த அடிப்படையில்தான் முஸ்லிம் மீடியா போரம் என்ற அமைப்பும் இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், நீங்களும், நாங்களும் சொந்தக்கார பங்காளிகள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq5F.html


வட,கிழக்கில் காணாமல் போனோரின் உறவுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முன்னெடுக்கும் அமைதி வழிபோராட்டம்!
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 06:42.27 AM GMT ]
நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடத்தப்பட்டு, காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வடக்கு,கிழக்கில் உள்ள சகல மாவட்டங்களும் உள்ளடங்களாக மிகப்பெரியளவிலான அமைதி வழி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.
எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு வடக்கு,கிழக்கில் உள்ள சகல மாவட்டங்களிலும் சம நேரத்தில் மிகப்பெரிய அமைதி வழி  கவனயீர்ப்பு போராட்டத்தையும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலகங்களை நோக்கிய ஊர்வலத்தையும் பின்னர் மகஜர் கையளிப்புக்களையும் செய்யவுள்ளதாக வடக்கு கிழக்கு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகளின் அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்திலும் நடைபெறும் இந்த அமைதிவழி போராட்டம் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள உதிரவேங்கை வைரவர் கோவில் முன்பாக திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.
இவ்வார்ப்பாட்டத்திற்காக பேருந்து ஒழுங்குகள் தரப்பட்டுள்ளன. கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலத்திற்கு அருகில் இருந்து புறப்படும் பேருந்து வட்டக்கச்சி சந்தை,வட்டக்கச்சி மத்திய கல்லூரி,கோவிந்தன் கடைச்சந்தி, காக்காகடை சந்தி என்பற்றின் ஊடாக வந்தடையும்,
கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரிக்கு அருகில் இருந்து புறப்படும் பேருந்து புளியம்பொக்கணை சந்தி.கண்டாவளை சந்தி, முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி, பரந்தன் ஊடாக வந்தடையும், கிளிநொச்சி வேரவில் மகா வித்தியாலயத்திற்கு அருகில் புறப்படும் பேருந்து நாச்சுக்குடா சந்தி,பூநகரி வாடியடி பரந்தன் ஊடாக வந்தடையும்,
கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலத்திற்கு அருகில் புறப்படும் பேருந்து ஜெயபுரம் வன்னேரி ஆனைவிழுந்தான் அம்பலபெருமாள் சந்தி,அக்கராயன் வைத்தியசாலை சந்தி. திருமுறிகண்டி பொன்னகர் சந்தி இரணைமடு சந்தி ஊடாக வந்தடையும் ,
கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்கால் கூழாவடி சந்தியில் இருந்து புறப்படும் பேருந்து எட்டாம் வாய்க்கால் இந்துக்கல்லூரி கரடிப்போக்கு சந்தியூடாக வந்தடையும், கிளிநொச்சி பளையில் இருந்து புறப்படும் பேருந்து பளை பஸ் நிலையத்தில் இருந்து புதுக்காட்டு சந்தி இயக்கச்சி சந்தி,உமையாள்புரம் பரந்தன் ஊடாக வந்தடையும்.
மேற்குறிப்பிட்ட சகல இடங்களில் இருந்தும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு பேரூந்துகள் புறப்படும் என்பதை ஏற்பாட்டாளர்கள் காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளின் சொந்தங்கள், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் சொந்தங்கள்,மனித உரிமை ஆர்வலர்கள்,ஊடவியலாளர்கள், புத்திஜீவிகள் கிராமிய மாவட்ட மட்டங்களின் பொது அமைப்புக்கள,மக்கள் பிரதிநிதிகள்,
உள்ளிட்ட உயிர்கள் மேலும் எங்கள் உறவுகள் மேலும் கருணையுள்ள உள்ளங்கள் ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்கள் உரிமையுடன் தெரிவித்துக்கொள்வதுடன், சகல மாவட்டங்களிலும் ஒரு நேரத்தில் நடக்கும் இந்த அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து மக்களும் திரண்டு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி சதுக்கத்தில் எதிர்வரும்  23ஆம் திகதி  காலை 10 மணி  ஆரம்பமாகி ஊர்வலமும் நடைபெறும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq5E.html


கிளிநொச்சியில் மாணவர்களும், பெற்றோரும் கவனயீர்ப்பு போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 07:14.55 AM GMT ]
கிளிநொச்சி பூனகரி கோட்டக் கல்வி வலயத்திற்குட்பட்ட வேரவில் இந்து மகா வித்தியாலயத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி, பாடசாலை மாணவர்களும், பெற்றோரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
நேற்று இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில், உயர்தரம் மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கும் கணிதம், வரலாறு, சுகாதாரம், வர்த்தகம் போன்ற முக்கிய பாடங்கள் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
இந்த பிரச்சனைக்கு உரிய அதிகாரிகள் முன்வந்து தீர்வு பெற்றுத்தர வேண்டும் என இன்றைய போராட்டத்தின் போது மாணவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் போராட்டத்தின் போது மாணவர்கள், மாணர்களின் சொத்து கல்வியே, எங்களுக்கு முறையான ஆசிரியர் வேண்டாமா?, எங்களுக்கு கற்பிக்க முன்வர மாட்டீர்களா? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டினையும் நிறுத்தி காலை 8 மணி முதல் வெயிலிலும் பாராமல் இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq5H.html

Geen opmerkingen:

Een reactie posten