தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 maart 2015

13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்! ஹசன் அலி

மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்!– காமினி லொக்குகே
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 07:07.03 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது அரசியல்வாதிகளுக்கு அவரை தவிர எவரும் இருக்கவில்லை.
அவர் தோல்வியடைந்து சில மணி நேரத்தில் அவரை திட்ட ஆரம்பித்து விட்டனர். குறைகூறினர். நாங்கள் அப்படி செய்யவில்லை.
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவே நிறுத்தப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் என்றார்.
காமினி லொக்குகே, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பை மாற்ற திருத்தங்களை கோரும் பிரதமர் ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 07:47.45 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது சம்பந்தமான சட்டமூலத்திற்கு தேவையான திருத்த யோசனைகளை துரிதமாக வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியல்கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த திருத்தச் சட்ட மூலம் இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன் 68 பக்கங்களை கொண்ட சட்டமூலத்தின் பிரதிகள் பிரதமரால், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அண்மையில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு விவகாரம் தொடர்பான குழு, சட்டமூலத்தை ஆராய்ந்து, கட்சியின் யோசனைகளையும் திருத்தங்களையும் அடுத்த வாரத்திற்குள் பிரதமரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அவசர சட்டமூலமாக கொண்டு வராது, அதனை ஆராய இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms0C.html

மைத்திரி இல்லாவிட்டால் மஹிந்தவே பிரதமர்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 07:52.41 AM GMT ]
பொது தேர்தலில் சுதந்திர கட்சியின் வெற்றிக்காக ஜனாதிபதி பிரச்சாரம் செய்வது தொடர்பில் அறிவிக்கப்படாவிட்டால் மஹிந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன பொது தேர்தலில் நடுநிலை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனும் எண்ணப்பாடும் வளர்ந்து வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் நிலைப்பாடு குறித்தும் அது தொடர்பில் தமது பங்களிப்பு குறித்தும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதகம் ஏற்படும் வகையிலான முடிவை எடுக்கமாட்டார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்! ஹசன் அலி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 08:00.29 AM GMT ]
13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்பதில் புதிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மிகவும் உறுதியாக இருந்து செயற்படுகின்றார் என இராஜாங்க பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி தெரிவித்தார்.
இன்று காலையில் மட்டக்களப்பில் உள்ள பல வைத்தியசாலைகளை பார்வையிட்டு அங்குள்ள குறைநிறைகளை கேட்டறியும் பொருட்டு பிரதி அமைச்சர் ஹசன் அலி உட்பட அவரது உயரதிகாரிகள் கொண்ட குழுவொன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டது. அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு பிரதி இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று கிழக்கு மாகாணத்திற்கு சகல அதிகாரங்களும் கொண்ட மாகாணசபையாக கிழக்கு மாகாணசபை திகழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக கிழக்கு மாகாணசபையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக ஒரு தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைத்திருக்கின்றோம். அதனூடாக அனைத்து வளங்களையும் பெற்றுக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்.
இலங்கையில் அனைத்து இனங்களுக்கும் அனைத்து அதிகாரங்களும் கிடைக்கவேண்டும் என்பதில் எமது சுகாதார அமைச்சர் உறுதியாக இருந்து செயற்பட்டு வருகின்றார். அதனொரு கட்டமே இந்த நாட்டிலே 13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்றும், அதனூடாக சிறுபான்மை இனம் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.
மாகாணசபையின் கீழ் இயங்கும் அனைத்து வைத்தியசாலைகளும் முன்வைக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தங்களை மாகாணசபையின் கீழ் இருந்து விடுபடச்செய்து மத்திய அரசாங்கத்திற்குள் இணைப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்து தரவேண்டும் எனும் கோரிக்கையினை முன்வைக்கின்றார்கள்.

ஆனால் மத்திய அரசு மாகாணத்தின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் ஒழுங்கான வளங்களை பங்கீடு செய்திருக்குமானால் எந்தஒரு மாகாணசபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளும் மத்திய அரசாங்கத்தில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் மாறாக மத்திய அரசு ஒழுங்கான வளங்களை பங்கீடு செய்யாமையே இதற்கு முழுக்காரணமாகும்.
எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே 100 நாள் வேலைத்திட்டத்தினை மையமாக வைத்து அமைச்சரின் வேண்டுதல்களுக்கு ஏற்ப அனைத்து கிழக்கு மாகாணங்களிலும் உள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று பிரச்சினைகளை ஆராய்ந்து அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றேன்.
அதனொரு கட்டமாக அண்மையில் அம்பாறையில் உள்ள 17 வைத்தியசாலைகளுக்குச் சென்று அங்கு உள்ள வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றேன்.
30 வருட போராட்ட காலத்தில் இரண்டு இனங்களுக்குள்ளும் ஒரு கசப்புணர்வுகள் இருந்ததன் காரணமாக இரண்டு சமூகங்களும் முஸ்லிம்கள் தமிழர் பிரதேசங்களுக்குச் செல்லாமலும், தமிழர்கள் முஸ்லிம் பிரதேசங்களுக்குச் செல்வதிலும் மனக்கசப்புற்றிருந்தார்கள். அந்நிலை இனிமேல் எவரிடமும் வரக்கூடாது. அதனை ஓரங்கட்டிவிட்டு இரண்டு சமூகமூம் ஒருவரை ஒருவர் புரிந்து செயற்பட முன்வர வேண்டும்.
வடகிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம் சமூகத்தினது தாயகம் இக்கோட்பாட்டினை அடிப்படையாக வைத்துத்தான் முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வாதிகளும் தங்களது அரசியல் சிந்தனைகள் மூலம் செயற்பட்டு வருகின்றார்கள்.
இதற்கான அனைத்து வேலைப்பாடுகளையும் எமது இரண்டு இனங்களும் ஒன்று சேர்ந்து பழைய மனக்கசப்புக்களை மறந்து எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரங்களை பகிர்ந்து எமது மக்களின் குறைகளை போக்க உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms0E.html

Geen opmerkingen:

Een reactie posten