தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 maart 2015

'கோத்தா பேஸ்' என்ற பெயரில் முகாம் இருக்கவில்லை: முன்னாள் கடற்படைத் தளபதி-இனி தலைமன்னார் வரை ரயில் பயணம் - இந்தியா விடுத்த கோரிக்கை இலங்கை அரசினால் நிராகரிப்பு

என்னால் ஜெனீவாவில் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை: மஹிந்த சமரசிங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 05:07.50 AM GMT ]
மஹிந்த அரசாங்கத்தில் வெளிநாட்டுக் கொள்கையில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அழுத்தங்கள் ஏற்பட்டதுடன், புதிய அரசாங்கத்தினால் ஐ.நா அறிக்கை தாமதப்படுத்தப்பட்டமை வரவேற்கத்தக்கது.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் ஜனாதிபதியின் மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்புக்கான விசேட பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட இருந்த அறிக்கை தாமதப்படுத்தப்பட்டமை புதிய அரசாங்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கையில் முன்னேற்றகரமாக வேலைத்திட்டங்களை மேற்கொள்ளமுடியும்.
மேலும் மனித உரிமைகள் என்பது அரசாங்கத்தில் இல்லை, மாறாக பொது நலன் கருதி மேற்கொள்ளப்படும் என முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
30 ஆண்டு கால யுத்தத்தினை நிறைவு செய்ய பல வழிகளில் உதவி செய்த இந்தியாவை நாம் இன்று மறந்துவிட்டோம், அதேபோல் அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் மதிக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
2009ம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழுவில் இணைந்து கொண்ட அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மனித உரிமை விவகாரத்தில் பெரிதாக அக்கறைகாட்டாத போதிலும்,
பராக் ஒபாமாவின் அரசாங்கத்தின் ஜனநாயக கட்சி மனித உரிமை விவகாரங்களில் முக்கிய கவனம் செலுத்தியது.
இதற்கு ஐரோப்பா, ஆபிரிக்கா ஏனைய ஆசிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கின, எனினும் நாம் இதனை புரிந்து கொள்வில்லை.
எனினும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையிலிருக்கும் சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய போதிலும் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்திய தேர்தலில் திசைதிருப்ப முடியாமல் போனது.
இது குறித்து தெளிவாக புரிந்து கொண்ட நான் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
எமது இராஜதந்திர சேவையில் அரசியல் ரீதியான நியமனங்கள் அதிகரித்து இருந்தன.
லக்ஷமன் கதிர்காமர் காலத்தோடு ஒப்பிடுகையில் 65% அரசியல் நியமனங்கள் கடந்த அரசில் காணப்பட்டன.
யுத்தத்திற்கு பிறகு மனித உரிமை விவகார அமைச்சு ஒன்றை நாம் தவிர்த்தது பாரிய பிழை. 2014ம் ஆண்டு நான் ஜெனீவாவுக்கு செல்லும்போது நிலைமை தலைகீழாக இருந்தது.
இந்நிலையில் என்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலையில் எனக்கு வழங்கிய தற்காலிக அதிகாரங்களைக் கொண்டு நான் செயற்பட்டேன் என முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

காலி கடலில் மூழ்கி யுவதி பலி- வாகன விபத்தில் இருவர் மரணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 05:12.52 AM GMT ]
காலி கடல் பகுதியில் குளிக்க சென்ற யுவதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று பெற்றோருடன் குளித்துக்கொண்டிருந்த 15 வயதுடைய யுவதியே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடற்படையினர் குறித்த யுவதியை கடலில் இருந்து மீட்டு, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்தில் இருவர் மரணம்
திருகோணமலை – ஹொரவபொத்தானை வீதியின் யான் ஓய பலத்திற்கு அருகில் நடந்த வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
பாதையில் நிறுத்தப்பட்டிருந்த கெண்டர் வாகனத்தில் மோதிய மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இராணுவ வீரர் ஒருவரும், சிவில் நபர் ஒருவருமே சம்பவத்தில் இறந்துள்ளனர். இவர்கள் எதா பெந்தி வெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஹொரவபொத்தானை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் என்னை சிறையில் அடைத்திருப்பார்கள்: அத்துரலிய ரத்ன தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 05:19.48 AM GMT ]
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் தான் தற்பெழுது சிறையில் இருந்திருக்க வேண்டும் என ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் பல விதமான சூழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும் எனவும் தன்னையும் சிறைக்கு அனுப்பியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி தலைமன்னார் வரை ரயில் பயணம் - இந்தியா விடுத்த கோரிக்கை இலங்கை அரசினால் நிராகரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 05:34.11 AM GMT ]
மன்னார் மடுவிலிருந்து தலைமன்னார் வரையான புகையிரத பாதை நிர்மாண பணிகள் நிறைவுபெற்றுள்ளன ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இப்புகையிரத பாதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எதிர்வரும் 14ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
63 கிலோ மீட்டர் நீளமுடைய இப்புகையிரத பாதை 143 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகையிரத பாதை திறப்பின் பின்னர் மடுவிலிருந்து தலைமன்னார் வரையும், தலைமன்னாரிலிருந்து மதவாச்சி வரையும் சில ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியா விடுத்த கோரிக்கை இலங்கை அரசினால் நிராகரிப்பு
இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரம் ஆரம்பிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை, மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஏ.எம்.ஜே.சாதிக் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரம் தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரமே ஆரம்பிக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் முறையான இறங்கு துறை வசதிகள் மற்றும் போதியளவு வசதிகள் செய்யப்படாமையினால் பயணிகள் கப்பல் சேவையை தற்போது ஆரம்பிப்பது சாத்தியமாகாது என வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் தலைமன்னார் இறங்குதுறையை திருத்தியமைக்க கடனுதவி வழங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இராமேஸ்வரம் இறங்குதுறைகளிலும் போதியளவு வசதியில்லாவிட்டால் இந்த கடனுதவி வழங்குவதில் பயனில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த இரு இறங்கு துறைகளிலும் இவ்வசதிகள் பயணிகளை கவர்வதற்கு அவசியமானது என இலங்கை அரசு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தூத்துக்குடி – கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதிலும் இந்தியா ஆர்வம் காட்டிய போதிலும், அது வர்த்தக ரீதியாக இலாபம் தராது இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் இரு கப்பல் சேவைகளையும் ஆரம்பிப்பதில் இரு நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUmsyJ.html


சீனா – இந்தியா இடையே தடுமாறும் இலங்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 06:51.16 AM GMT ]
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகாரப் பேட்டியில், நடுநிலையாக செயற்படும் முடிவை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எடுத்திருந்தாலும் அந்த முடிவைச் செயற்படுத்துவதில் கடுமையாகவே போராட வேண்டியிருக்கிறது.
கடந்த மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பீஜிங்கில் வைத்து வெளியிட்ட கருத்துக்களும் சீனா விடயத்தில் இலங்கையின் நகர்வுகள் தோல்வியில் முடிந்திருப்பதையே உணர்த்துகின்றன.
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு மிகவும் பொறுமையான ஒரு பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டிருந்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் உள்ளிட்ட சீனாவின் முதலீட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் எதிர்காலம் குறித்து அச்சங்கள் எழுந்திருந்த நிலையிலும் கூட, பீஜிங்கிற்கான பயணத்துக்காக மங்கள சமரவீர ஒன்றும் அவசரப்படவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் முக்கியத்துவமான நாடாக சீனாவே விளங்குகின்றது. சர்வதேச அளவில் சீனா தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறியுள்ள நிலையில், சீனா விடயத்தில், இலங்கையின் புதிய அரசாங்கம் கொஞ்சம் அளவுக்கதிகமாகவேபரிசோதனையை மேற்கொண்டுவிட்டது.
இந்தியாவை எப்டியாவது கைக்குள் புாட்டுக் கொண்டு விடவேண்டும் என்ற ஆவலும் அமெரிக்காவின் ஆதரவு இருக்கிறது என்ற எண்ணமும் சீனா விடயத்தில் இலங்கையைக் கொஞ்சம் கர்வம் கொள்ள வைத்து விட்டது.
ஆரம்பத்தில் கொழும்புத் துறைமுக நகரத்திட்ட விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் கொஞ்சம் கடும் போக்கையே வெளிப்படுத்தியதாயினும் பின்னர் மெல்ல மெல்ல தளர்ந்து போனது. குறிப்பாக சீன ஜனாதிபதியின் விசேட தூதுவராக உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சோ கொழும்பு வந்து சென்ற பின்னர் கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் கைவிடப்படாது என்றளவில் வெளிப்படையாக பேசத் தொடங்கியது புதிய அரசாங்கம்.
புதுடில்லியிடம் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இரத்துச் செய்யப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய அறிவிப்பு பலரையும் ஆச்சரியம்கொள்ள வைத்தது. அதாவது இந்தியத் தலைநகரிலே துணிச்சலுடன் அதைக் கூறியிருப்பதாக பலரும் கருதினர் அதேவேளை அந்த கருத்து இந்தியாவுக்கு ஏமாற்றத்தையே அளித்திருந்தது. ஏனென்றால் கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் இரத்துச் செய்யப்படும் என்று அதிகம் எதிர்ப்பார்த்திருந்தது இந்தியா தான்.
எனவே சீனா விடயத்தில் இலங்கை அரசின் நிலைப்பாடு புதுடில்லியை கொஞ்சம் அவதானமாகவே இருக்க வேண்டும் என்ற உணர்வை இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருந்தது. இப்போது கூட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வரவுள்ள நேரத்தில் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த முடிவெடுத்துள்ளது அரசாங்கம். ஆனால் இது நிரந்தரமான முடிவு அல்ல.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதி முறைப்படி பெறப்படவில்லை என்றும், அது தொடர்பாக பெறப்பட்ட அனுமதிகளை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அரசாங்கம் கூறியிருக்கிறது. அதாவது மோடி கொழும்புக்கு வந்து செல்லும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரப்போகிறது. அதற்கு பின்னர் சீனாவுடன் இந்த விடயத்தில் சமரசம் ஏற்படுத்தப்படும் வாய்புகள் உள்ளன.
சீனத் தரப்பின் கருத்துகளில் இருந்து அதனை உணர முடிகிறது. அதேவேளை சீனா - இந்தியா ஆகிய இரண்டு நாடுகளையும் சமதூரத்திலேயே தாம் வைத்து நோக்கவுள்ளதாகவும், தாம் அணி சேரா நாடு என்பதையும் மைத்திரிபால சிறிசேன புதுடில்லியில் வலியுறுத்தியிருந்தார்.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய போதும் இந்த நடுநிலைக் கோட்பாட்டையே முன்னிலைப்படுத்தியிருந்தார். இரண்டு நாடுகளின் பக்கமும் சேராமல் பொதுவான நிலையில் இருக்கவே இலங்கை விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் முட்டிமோதி வருகின்ற நிலையில் இரண்டு நாடுகளுக்கும் நடுவே தனியானதொரு பாதையில் பயணிக்க முனைகிறது இலங்கை அரசாங்கம். தாம் இரண்டு தரப்புக்கும் பொதுவானவர் என்று நிரூபிப்பதற்காக புதுடில்லியில் வைத்து சீனாவை அரவணைத்துப் பேசுவதும் பீஜிங்கில் வைத்து இந்தியாவுக்கு சார்பாக பேசுவதும் தமது புத்திசாலித்தனமான நகர்வாக கருதுகிறது இலங்கையின் புதிய அரசாங்கம்.
பீஜிங்கில் வைத்து சீன நீர்மூழ்கிகளுக்கு இனிமேல் இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி வழங்கப்படாது என்று தெளிவாக கூறியிருந்தார் மங்கள சமரவீர. இது கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தினால், கவலை கொண்டிருந்த இந்தியாவை அப்படியே ஆனந்தத்தில் உறைய வைத்துவிட்டது அதேவேளை சீனாவுக்கோ, கடுமையான எரிச்சலைத் தான் ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை உண்மையிலேயே யாருக்கு நண்பனாக இருக்கப் போகிறது என்ற கேள்வி இரு நாடுகளுக்குமே இருக்கிறது. மங்கள சமரவீர பீஜிங்கில் இருந்து ஜெனீவாவுக்கு புறப்பட்டதும் நீர்மூழ்கி குறித்த அவரது கருத்து குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யின்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு அவர் ஏடன் வளைகுடாவில் செல்லும் போது தான் எரிபொருள் நிரப்புவதற்காக நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துச் சென்றன. இது வழக்கமாக உலகில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தான். முன்னரே இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி பெற்று விட்டுதான் கொழும்பு துறைமுகத்துக்குள் சீன நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துச் சென்றன.
முன்னரே இரங்கை அரசாங்கத்திடம் அனுமதி பெற்று விட்டுதான் கொழும்புத் துறைமுகத்துக்குள் சீன நீர்மூழ்கிகள் நுழைந்தன. அதேபோல கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைக்கு செல்லும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் நீர்மூழ்கிகளுக்கு இலங்கை தொடர்ந்து அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று அவர் கூறியிருந்தார்.
இதன் வெளிப்படையான கருத்து சீன நீர் மூழ்கிகளுக்கு கொழும்பில் இனிமேலும் இடமளிக்கப்பட வேண்டும் என்பது தான். இதனை வேண்டுகோளாகவும் எடுத்துக் கொள்ளலாம் கண்டிப்பான வலியுறுத்தலாகவும் எடுத்துக் கொள்ளலாம். வரும் காலத்தில் சந்தர்ப்பம் வாய்க்கும் போது தான், சீனா இதனை வேண்டுகோளாக விடுத்ததா, அழுத்தமாக கொடுத்ததா அல்லது நிபந்தனையாக விதித்ததாக என்பதை உணர முடியும்.
ஏனென்றால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் பல்வேறு வகையிலானவை அத்துடன் தனியே நீர்மூழ்கி விவகாரத்தினால் மட்டும் இருநாட்டு உறவுகளில் சர்ச்சைகள் ஏற்கட்டிருக்கவுமில்லை.
சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு கோடி கோடியாக கடன்களை அள்ளிக் கொடுத்திருக்கிறது. சீனாவுக்கு கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை இருக்கிறது. இலங்கை நாணயப் பெறுமதிப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 65 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகம் இந்தக் கடன் இலங்கைக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இந்தக் கடனுக்கு அதிக வட்டி செலுத்தப்படுவதாக புதிய அரசாங்கம் கருதுகிறது. பீஜிங்கில் இதுபற்றி கவலை வெளியிட்டிருந்த மங்கள சமரவீர இதுகுறித்து பேசுவதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பீஜிங் வருவார் என்றும் கூறியிருந்தார். இதுவும் சீனாவுக்கு கடுப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை கேட்டு கொண்டதால் தான் கடன்களை வழங்கினோம் இருதரப்பும் இணங்கியே அதற்கான நிபந்தனைகள் தீர்மானிக்கப்பட்டன. இருதரப்புக்கும் நன்மையளிக்கும் வகையில் தான் கடன் விதிமுறைகள் வகுக்கப்பட்டன என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியிருந்தார்.
இதன் அர்த்தம் என்னவென்றால் சீனா வழங்கிய கடன்களுக்கான நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு தயாராக இல்லை என்பது தான் இந்த விதிமுறைகளைத் தளர்த்த முனைந்தால் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டிலான கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதிக்க முடிவெடுத்தாலும் முன்னய அரசாங்கத்துடன் செய்யப்பட்ட உடன்பாட்டுக்கமைய அதனைத் தொடர விடுவதில்லை என்பதே புதிய அரசின் நிலைப்பாடாக உள்ளது. அதாவது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் அதனை செயற்படுத்த எத்தனிக்கிறது இலங்கை.
ஆனால் சீனா அவ்வளவு இலகுவாக தன்னுடன் செய்து கொண்ட உடன்பாடுகளை மாற்றிக் கொள்ள இணங்காது என்பதையே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரின் கருத்துகளில் இருந்து உணர முடிகிறது. இலங்கை சீனா இந்தியா என முத்தரப்பு இழுபறிக்குள் இந்த ஒரு விவகாரம் மட்டும் மாட்டிக் கொள்ளவில்லை ஒன்றின் மீது கை வைத்தால் அது இன்னொன்றையும் கூடவே இழுத்துக் கொண்டு வருகின்றது. ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இந்த விவகாரங்கள் மாறியிருக்கின்றன.
இது ஒரு இடியப்ப சிக்கல் போலத் தான். சீனாவையும் சமாளித்து இந்தியாவையும் சமாளித்து நடுநிலையாக செயற்படுவதென்பது இலங்கைக்கு பெரிய சோதனை தான். இலங்கையின் மீது சீனாவின் செல்வாக்கு அளவுக்கதிகமாக வளர்ந்துள்ள நிலையில் அதனை விட்டு சற்று நகர்ந்து கொள்வது கடினமானது.
அதேவேளை சீனாவிடம் இருந்து புதிய அரசாங்கம் விலகிப் போகவில்லை என்று நம்பவைப்பதற்காக மங்கள சமரவீர பீஜிங் சென்றிருந்தால் அந்த முயற்சியில் தோல்வி கண்டிருக்கிறார் என்றே கூறமுடியும் இந்த மாத இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சீனா செல்லவுள்ளார். அவர் எவ்வாறு சீனாவைக் கையாள போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

முன்னாள் பிரதமர் இன்னமும் 15 அரசாங்க வாகனங்களை ஒப்படைக்கவில்லை: கரு ஜயசூரிய
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 06:03.17 AM GMT ]
முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன பிரதமராக பதவி வகித்திருந்த காலத்தில் பயன்படுத்திய அரசாங்க வாகனங்கள் இன்னமும் ஒப்படைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் முன்னாள் பிரதமர் ஜயரத்ன 15 அரசாங்க வாகனங்களை இன்னமும் ஒப்படைக்கவில்லை என அமைச்சர் கரு ஜயசூரிய அமைச்சரவையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'கோத்தா பேஸ்' என்ற பெயரில் முகாம் இருக்கவில்லை: முன்னாள் கடற்படைத் தளபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 05:38.05 AM GMT ]
'கோத்தா பேஸ்' என்ற பெயரில் முகாம்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் இது கடற்படையினருக்கு சேறுபூசுவதற்காக எவரோ செய்து வரும் பொய் பிரச்சாரம் என முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கடற்படை முகாமில் கோத்தா பேஸ் என்ற பெயரில் முகாம் ஒன்று இருந்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து முன்னாள் கடற்படைத் தளபதியிடம் சிங்கள ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
கோத்தா என்ற பெயரில் முகாம் எதுவும் இருக்கவில்லை. நான் அறிந்த வரையில் அப்படி எதுவும் இல்லை.
இது கடற்படையினருக்கு சேறுபூசுவதற்காக எவரோ மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரம். இதன் காரணமாக உண்மையை வெளியிட தீர்மானித்தேன்.
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் கடற்படையினர் முக்கிய பங்காற்றினர். ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரம் சென்று புலிகளின் கப்பலைகளை கடற்படையினர் அழித்தனர்.
இந்த பணியானது எமது சக்திக்கும் அப்பால் சென்று செய்த பணியாகும். அப்படியான முக்கிய சேவையை செய்த கடற்படையினர் மீது சேறுபூசுவதை பார்த்து கொண்டிருக்க முடியாது. இதனால், கோட்டா பேஸ் முகாம் பற்றிய செய்தியை தெளிவுப்படுத்த முடிவு செய்தேன் என்றார்.
இதேவேளை, திருகோணமலை கடற்படை முகாமில் கோட்டா பேஸ் என்ற முகாம் இருந்ததாகவும் அதில் 700 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தனக்கு தகவல் வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUmszA.html

Geen opmerkingen:

Een reactie posten