தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 mei 2014

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியின் பரபரப்பு வாக்குமூலம்: அதிர்ந்துபோயுள்ளது இந்தியா


சென்னை மத்திய ரயில் நிலைய குண்டு வெடிப்பு: இலங்கை செல்லவிருந்த ஒருவர் கைது?
[ வியாழக்கிழமை, 01 மே 2014, 12:05.46 PM GMT ]
சென்னை, மத்திய ரயில் நிலையத்தில் இன்று இடம்பெற்ற இரட்டை வெடிகுண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இலங்கை செல்லத் தயாராக இருந்த ஒருவரைத் தாம் கைது செய்துள்ளதாகக் கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடும் பணியில் தாம் ஈடுபட்டிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய முகம்மது என்ற நபர் கைதானதாகக் கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு செல்லவிருந்த இந்த நபரிடம் தாம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கியூ பிரிவு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியின் பரபரப்பு வாக்குமூலம்: அதிர்ந்துபோயுள்ளது இந்தியா
[ வியாழக்கிழமை, 01 மே 2014, 12:36.19 PM GMT ]
சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகங்களை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத உளவாளி சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்தியாவை பொருளாதார ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் அழித்து, சீர்குலைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நாசகார திட்டங்களை தீட்டி அரங்கேற்றி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
பொருளாதார ரீதியாக இந்தியாவை அழிக்கும் நோக்கில், இந்திய ரூபாய் நாணயத்தாள்களை போன்ற பல ஆயிரம் கோடி கள்ள ரூபாய் நாணயங்கள் அச்சடித்து பாகிஸ்தான் இந்தியாவிற்குள் விநியோகம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் வழங்கி, இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர்.
அவ்வாறு ஊடுருவும் தீவிரவாதிகள், குண்டுகளை வெடிக்கச் செய்து மக்களை அழித்து, நாசகார வேலைகளில் ஈடுபடுகிறார்கள். நாடு முழுக்க அவ்வப்போது குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, என்பதும் குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகள் தரை மார்க்கமாகவும், ஆகாயமார்க்கமாக விமானத்திலும், கடல் வழியாக எந்திர படகுகளிலும் ஊடுருவி வந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்தகட்டமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை, இலங்கையில் இருந்து கடல் வழியாக ஊடுருவச் செய்து, தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் மிகப்பெரிய நாசவேலைகளில் ஈடுபடுத்த வாய்ப்பு உள்ளது என்று, மத்திய, மாநில உளவுப்பிரிவு பொலிஸார் எச்சரித்து வந்தனர்.
இதனால் மேற்கண்ட 3 மாநிலங்களின் கடலோர பகுதி பலத்த பாதுகாப்பு வளையமாக மாற்றப்பட்டுள்ளன.
உளவுப்பிரிவு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை உண்மை என்பதை நிரூபிக்கும் சம்பவம் நேற்று முன்தினம், சென்னையில் அரங்கேறியது.
பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்ப்பதற்காக, நவீன பயிற்சி பெற்ற பயங்கரவாத உளவாளி ஒருவர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர் சென்னையில் மண்ணடி மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் மாறி, மாறி விடுதிகளில் தங்கி இருந்து உளவு பார்த்து வருவதாகவும், மத்திய உளவுப்பிரிவு பொலிஸார், மாநில உளவுப்பிரிவு பொலிஸாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் அனுப்பியிருந்தனர்.
இந்த தகவலைத் தொடர்ந்து, தமிழக பொலிஸ் பணிப்பாளர் ராமானுஜம், தமிழகத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடி பிடிக்கும் கியூ பிரிவு பொலிஸாரை பாகிஸ்தான் உளவாளியை பிடிக்க களத்தில் இறக்கினார்.
பொலிஸ் ஆணையாளர் கண்ணப்பன், பொலிஸ் அத்தியட்சகர்கள் அருள்அரசு, பவானீஸ்வரி ஆகியோரின் தலைமையில் கியூ பிரிவு பொலிஸார் சென்னையில் மண்ணடி, திருவல்லிக்கேணி பகுதியை ரகசியமாக சுற்றி வளைத்து, கண்காணித்தனர்.
மண்ணடியில் உள்ள விடுதி ஒன்றில் இலங்கை பிரஜை ஒருவர் தங்கி இருந்தார். அவரை நேற்று முன்தினம் காலையில் பொலிஸார் பிடிக்க முயற்சித்த போதும் அவர் பொலிஸாரிடம் சிக்காமல் ஆட்டோவில் ஏறி சென்று விட்டார்.
அவரை பொலிஸார் பின் தொடர்ந்து சென்றனர். அந்த இலங்கை நபர் திருவல்லிக்கேணி சென்று, அங்கிருந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் உள்ள, சுவாமி சிவானந்தா சாலையில் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார். அவரை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.
அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் தான் பாகிஸ்தான் நாட்டின் உளவாளி என்று தெரிய வந்தது.
அவரது பெயர் முகமது ஜாகீர் உசேன் (வயது 37). அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
அவர் பொலிஸாரிடம் கூறிய தகவல்கள் வருமாறு,
இலங்கையில் கண்டி, எனது சொந்த ஊர். நான் பாகிஸ்தான் நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் முகவராக பணியாற்றி வருகிறேன். அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து கொடுப்பேன்.
அவர்கள் சொன்ன வேலைகளை செய்து கொடுத்தால், எனக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுப்பார்கள்.
இலங்கையில் கொழும்பு நகரத்தில் செயல்படும் பாகிஸ்தான் நாட்டின் தூதரகத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகள் இருவர் என்னோடு நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர்.
அவர்கள் என்னை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகத்தையும் குண்டு வைத்து தகர்க்க திட்டம் தீட்டி இருப்பதாகவும், அதற்கு அந்த தூதரங்களின் புகைப்படங்களை படம் பிடித்து அனுப்ப வேண்டும் என்றும் எனக்கு கட்டளை பிறப்பித்தனர். நான் விமானத்தில் சென்னை வந்தேன்.
முதல் கட்டமாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை படம் பிடித்து இ-மெயில் வாயிலாக, நான் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன்.
அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்று, அங்குள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரக அலுவகத்தை படம் பிடித்து அனுப்ப திட்டமிட்டு இருந்தேன்.
நான் சென்னையில் தங்கி இருக்க தேவையான செலவுக்கு, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பணம் கொடுத்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை தளம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை தளம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை புகைப்படங்களுடன் எடுத்து அனுப்பவும், எனக்கு ஆணை பிறப்பித்து உள்ளனர்.
எனக்கு 2 செயற்கை கோள் செல்போன்களும் கொடுத்து அனுப்பினார்கள். அதன்மூலம் நான், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளோடு பேசி இருக்கிறேன் என ஜாகீர் உசேன், பொலிஸாரிடம் கூறியுள்ளார். 
அவரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்த தமிழக பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் ஊடுருவிய, பாகிஸ்தான் உளவாளி: பல திடுக்கிடும் தகவல் ...
01 May, 2014 by admin
சென்னையில் ஊடுருவிய, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் உளவாளியை, தமிழக, 'க்யூ' பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு, சுற்றி வளைத்தனர். இவன், இலங்கையை சேர்ந்தவன்.அவன் சேகரித்து அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகத்தை, குண்டு வைத்து தகர்க்கும், ஐ.எஸ்.ஐ.,யின் நாசவேலை திட்டம் 
முறியடிக்கப்பட்டுள்ளது.

'லோக்சபா தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும்' என, மத்திய உளவுப்பிரிவு போலீசார், தமிழக உளவுப்பிரிவு, தீவிரவாதிகளை கண்காணிக்கும், 'க்யூ' பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கொடுத்தனர்.அதன் அடிப்படையில், சென்னை, திருவல்லிக் கேணி, மண்ணடி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளை, க்யூ பிரிவு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர்.மண்ணடியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த வாலிபன் மீது, க்யூ பிரிவு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணிக்க துவங்கினர்.அவன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் உளவாளி; சென்னையில் பதுங்கி, சதிச்செயலுக்கு உளவு பார்க்கிறான் என, தெரிய வந்ததும், நேற்று முன் தினம் இரவு, அவனை சுற்றி வளைத்தனர்.

ஆட்டோவில் தப்பி ஓட்டம்: 

போலீசார் நெருங்கி விட்டதை அறிந்த அவன், ஆட்டோவில் தப்பினான். சேப்பாக்கம், சிவானந்தம் சாலையில் உள்ள தொலைக்காட்சி நிலையம் அருகே அந்த ஆட்டோ வந்த போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த போலீசார், அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன:

அதன் விவரம் வருமாறு:

அந்த வாலிபன், இலங்கையை சேர்ந்த முகமது ஜாகீர் உசேன், 37; பட்டதாரி. அவனது மனைவி பெயர் பாத்திமா ரியசா. இரண்டு குழந்தைகள் உள்ளன.இலங்கையில் உள்ள, பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரி, அமீர் சுபேர் சித்திக் என்பவரின் நட்பு, ஜாகீர் உசேனுக்கு கிடைத்தது. ஜாகீர் உசேனை, பாகிஸ்தான் உளவாளியாக மாற்ற, சித்திக் முடிவு செய்தார். அதற்கு, ஜாகீர் உசேனும் சம்மதம் தெரிவித்தான். இதையடுத்து, ஜாகீர் உசேன், தூதரக உயர் அதிகாரி பாஸ் என்ற ஷாவிடம் அழைத்து செல்லப்பட்டான். ஷா மற்றும் சித்திக் ஆகியோரும், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினரும், ஜாகீர் உசேனுக்கு, இரண்டு ஆண்டுகளாக, உளவு தகவல் சேகரிப்பது தொடர்பாக கடும் பயிற்சி அளித்தனர்.

விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்திய நகரங்களின் வரைபடங்கள் அளிக்கப்பட்டன. மேலும், அந்த நகரங்களில், குண்டு வைத்து தகர்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் சொல்லி தரப்பட்டது.மேலும், சேகரித்த தகவல்களை, செயற்கைக் கோள் போன் மற்றும் 'இ-மெயில்' மூலம் சங்கேத மொழியில் அனுப்புவது குறித்து கற்றுத் தரப்பட்டது. தொடர் பயிற்சி காரணமாக, ஜாகீர் உசேன் அவற்றில் நிபுணத்துவம் பெற்றான்.அவனுக்கு, சென்னை யில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகம், கொச்சி, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்ப்பது தொடர்பான பணி தரப்பட்டது. 

6 மாதங்களாக... 

அதற்காக அவனுக்கு, முதல் கட்டமாக, இலங்கை கரன்சி மதிப்பில், 20 ஆயிரம் ரூபாய்தரப்பட்டது. தகர்ப்பு பணியை வெற்றிகரமாக முடித்தால், ஒரு கோடி ரூபாய் தருவதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், சென்னை வந்த ஜாகீர் உசேன், மண்ணடியில் தங்கினான். மருந்து மற்றும் துணி வியாபாரம் செய்வது போல் போக்கு காட்டி, அமெரிக்க துணை தூதரகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு; அங்குள்ள நுழைவு வாயில்கள்; விமான நிலையத்தில் இருந்து, தூதரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது; கடல் வழியாக சென்னைக்குள் ஊடுருவும் விதம் குறித்த தகவல்களை சேகரித்து, புகைப்படங்களுடன், இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளான்.

நாசவேலை முறியடிப்பு :

அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு, கடல் மற்றும் வான்வழி மார்க்கமாக, பயங்கரவாதிகளை அனுப்ப, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமைப்பு தயாரானது.இந்த சூழ்நிலையில் தான், ஜாகீர் உசேனை, க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதனால், பெரும் நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.பலி எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் உளவாளி தந்த அதிர்ச்சி தகவல்:''பலி எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் தருவதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்தனர்,'' என, சென்னையில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளி, ஜாகீர் உசேன், வாக்குமூலம் அளித்துள்ளான்.அவன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சென்னை, பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டனம் உள்ளிட்ட நகரங்களிலும் தாக்குதல் நடத்த முடிவு செய்தது.அதற்காக, உளவாளிகளாக, நான் உட்பட பலர், இந்தியாவிற்குள் ஊடுருவினோம். 

நான் சென்னையில் தங்கி, அதற்கான பணிகளில் ஈடுபட்டேன். மற்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு சென்று விட்டனர்.திட்டப்படி தாக்குதல் நடத்த, சில வாரங்கள் மட்டுமே இருந்ததால், சென்னையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தங்க வைக்க வாடகை வீடு பார்த்து வந்தேன்.மேலும், இவ்வளவு பெரியவேலையை, உள்ளூரில் இருப்பவர்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது என்பதால், சில உள்ளூர் வாலிபர்களை மூளைச் சலவை செய்து தயார்படுத்தினேன்.அவர்களை பற்றியும், சென்னையில் எனக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் விவரங்களை, இலங்கையில் உள்ள பாக்., தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளேன். நாசவேலை வெற்றிகரமாக நடந்து, அதிகளவில் உயிர் பலி ஏற்பட்டால், பலி எண்ணிக்கைக்கு ஏற்ப, பேசிய தொகையை விட, அதிகளவில் பணம் தருவதாகவும், இலங்கையில் உள்ள தூதரக அதிகாரிகள் உறுதி அளித்து இருந்தனர்.இவ்வாறு, அவன் தெரிவித்துள்ளான்.

எந்த பிரிவில் வழக்கு பதிவு ?

நாசவேலைக்கு உளவு பார்த்த ஜாகீர் உசேன் மீது, பயங்கரவாத தடைச்சட்டத்தின், 120 பி(கூட்டு சதி), 480(அரசு ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்து இருத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜாகீர் உசேனிடமிருந்து, 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள், இரண்டு; 500 ரூபாய் கள்ள நோட்டுகள், இரண்டு; நான்கு செயற்கைக்கோள் போன்கள்; 'லேப்-டாப்' ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஜாகீர் உசேன், சில ஆண்டுகளுக்கு முன், திருச்சி விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக பிடிபட்டு தப்பியுள்ளான். தற்போது அவன் வைத்து இருந்தது இலங்கையில் அளிக்கப்பட்ட ஒரிஜினல் பாஸ்போர்ட்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6770

Geen opmerkingen:

Een reactie posten