தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

தீர்வு குறித்து மோடியின் வலியுறுத்தல்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி!


ரத்துபஸ்வல கொலையாளிக்கு வெளிநாட்டு தூதரகத்தில் பதவி: விக்ரமபாகு கண்டனம்
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 08:13.00 AM GMT ]
ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைக்கு காரணமான இராணுவ அதிகாரியை வெளிநாட்டு தூதரகமொன்றில் பணிக்கு அமர்த்தியுள்ளது அரசாங்கம்.
இந்நடவடிக்கைக்கு நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து விக்ரமபாகு மேலும் தெரிவிக்கையில்,
ரத்துபஸ்வல மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து, மூன்று பேரை கொலை செய்து மேலும் பலருக்கு காயம் ஏற்படுத்தி அபகீர்த்தியான நடவடிக்கைக்கு தலைமையேற்ற இராணுவ அதிகாரிக்கு வெளிநாட்டு தூதரகத்தில் பணியில் நியமித்தமை பாரதூரமான தவறு.
இலங்கை மக்களின் உரிமைகளை வெளிப்படையாக மீறிய நாடு என்பதை இந்த நியமனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ரத்துபஸ்வல சம்பவத்துடன் தொடர்புடைய பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன துருக்கிக்கான இலங்கை தூதரகத்தின் இராணுவ இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களின் எழுச்சியை அடக்க ரத்துபஸ்வல மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த ஒருவருக்கு இப்படியான பதவி வழங்கப்பட்டது மிகவும் தவறு.
இந்த அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
ரத்துபஸ்வல மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் தீர்மானம், மகிந்த ராஜபக்ஷ கம்பனிக்கு தேவையான வகையில் எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஒருவரின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்பட்டதா என்பது இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை.
அது குறித்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்காது, அந்த அதிகாரியை இராணுவ இணைப்பாளராக வெளிநாட்டுக்கு அனுப்புவது பாரதூரமான பிரச்சினையாகும்.
இலங்கை மக்களின் உரிமைகளை வெளிப்படையாக பாரதூரமான வகையில் மீறும் நாடு என்பதே இதன் மூலம் தெளிவாகிறது. இப்படியான நடவடிக்கைகள் மூலம் உலகத்திற்கும் இது உறுதியாகும்.
அத்துடன் அரசாங்கத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளும் இதனை உறுதிப்படுத்தும் எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சில சருகு புலிகளைப் புலிகளாக நடமாடவிட்டிருக்கிறது!- விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 05:24.30 AM GMT ]
புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர் பெறுவதாகச் சர்வதேசத்துக்குக் காட்ட தன்வசம் உள்ள சில சருகு புலிகளைப் புலிகளாக நடமாடவிட்டு, அவர்களுடன் தொடர்பு கொண்டார்கள் என்ற பெயரில் பலரைக் கைதுசெய்யும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றும் போது, போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன என்பது உண்மைதான். ஆனால், ஆயுத ரீதியாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது தொடுத்த போர் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்புப் போர் இன்னமும் நின்றபாடில்லை. போர்க்காலத்தைவிட வேகமாகத் தமிழ் மக்களின் நிலங்கள் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எமது மக்களைப் பலவந்தமாக அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடித்துவிட்டு, அந்த இடங்களில் படையினர் முகாங்களை அமைத்து வருகின்றனர். இராணுவத்தை வெளியேற்றிவிட்டுத் தங்கள் சொந்த இடங்களிலேயே தங்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று எமது மக்கள் ஜனநாயக ரீதியாகப் போராடி வருகிறார்கள்.
படையினரின் பிரசன்னம் தொடர்ச்சியாகத் தேவை என்று உலக நாடுகளுக்குக் காட்டி, நிரந்தரமாகவே எமது பகுதிகளில் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கம் புலிகள் மீளிணைகிறார்கள் என்று புனைய ஆரம்பித்துள்ளது.
இதனை மேலும் சோடிப்பதற்காகப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று சொல்லிப் பலரைக் கைது செய்தும் வருகிறது. ஜனநாயக ரீதியாகப் போராட முற்படுபவர்களுக்கும் புலிச்சாயம் ப10சி பொய்வழக்குப் போட்டுக் கைது செய்கிறது.
இராணுவம் எமது மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். அரசாங்கத்தின் முடிக்குரிய காணிகளாக இருந்தாலும்கூட, அங்கு படையினர் நிலைகொள்வது பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாக இருந்தால் அங்கிருந்தும் அவர்கள் வெளியேறுவதுதான் நீதியானது என்று எமது முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அரசு மேற்கொள்ளும் திட்டமிட்ட நில அபகரிப்பை எப்பாடுபட்டாயினும் தடுத்தாக வேண்டும். இல்லாவிடில், தமிழ் மக்கள் தமது தாயகத்திலேயே சிறுபான்மையினராகி ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் சிங்கள பௌத்த பெருந்தேசிய இனத்துக்கு என்றாகிவிடும்.
எனவே இராணுவத்தின் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு எதிராக எமது போராட்டத்தை மேலும் விரைவும் விரிவுபடுத்த வேண்டும். இதற்குக் கட்சி வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தீர்வு குறித்து மோடியின் வலியுறுத்தல்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 04:28.13 AM GMT ]
இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுமாறு புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை வலியுறுத்தியுள்ளமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மகிழ்ச்சியை தருகின்றது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டதும் அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றதுடன், அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப் பகிர்வை அர்த்தப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான முதலாவது சந்திப்பிலேயே வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாது 13ம் திருத்தம், அதிகாரப்பகிர்வு என்பவற்றை அரசாங்கம் மீள ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஒருமைப்படுத்தும் அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான அரசாங்கத்திற்கும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையில்லை. அவர்கள் ஆட்சியில் இல்லாதபோது அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் செயலற்றுப் போய்விட்டது என்ற எண்ணத்திலேயே இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியில் இருந்தது. ஆனால், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மன்மோகன் சிங்கிற்கோ காங்கிரஸிற்கோ அல்ல. இந்தியாவிற்கு என்பதனை மோடி நினைவுபடுத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமரின் பதவி ஏற்பு விழாவிற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்துச் சென்று பொய்யான நாடகம் ஒன்றை காட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சித்தார். ஆனால், மிகவும் துணிச்சலுடன் மஹிந்தவின் அழைப்பை முதலமைச்சர் வெளிப்படையாக மறுத்தார். நான் தங்களுடன் வந்தால் நாட்டில் நிலவும் உண்மை மறைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த செய்தியும் இந்தியாவிற்குச் சென்றுள்ளது.
13ம் திருத்தம் அதற்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு என்பதனைவிட சாதாரண விடயங்களில்கூட நாம் ஒடுக்கப்படுகின்றோம். எமது வடமாகாண முதலமைச்சருக்கான அதிகாரங்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளன. முதலமைச்சரின் விருப்புக்கமைய மாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபரைக்கூட முதலமைச்சரினால் நியமிக்க முடியவில்லை. முதலமைச்சர் சரியான விதத்தில் யாப்பு அதிகாரங்களின்படி இயங்குவதற்குக்கூட இங்கு அனுமதி இல்லை.
இந்த சூழ்நிலைகளையெல்லாம் புரிந்துகொண்ட பின்னரே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதிக்கு 13ம் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்து நாடு இந்திய நாடு என்ற வகையில் இந்தியப் பிரதமர் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விளக்கமாக புரிந்து கொண்டுள்ளார் என்பன ஜனாதிபதி மஹிந்தவுடனான முதலாவது சந்திப்பே உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் வெளியிட்டுள்ள ஊடக செய்தி இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தி எம்மை அரசாங்கம் ஏமாற்ற முடியாது. 13ம் அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தி அதற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்பட வேண்டும் என்றார் சுமந்திரன் எம்.பி.

Geen opmerkingen:

Een reactie posten