மலேசியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சந்தேகநபர்கள் என்ற பேரில் அண்மையில் மலேசியாவிலிருந்து மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எவ்வாறெனினும், நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் எனவும், துன்புறுத்தப்படக் கூடாது எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
நாடு கடத்தப்பட்ட இருவருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அகதி அந்தஸ்து வழங்கியுள்ளதுடன் ஏனைய நபருக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த தருணத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பலவந்தமான அடிப்படையில் மலேசியா குறித்த இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்டவர்களை இலங்கை அரசாங்கம் எவ்வாறு நடாத்தும் என்பது குறித்து சர்வதேச சமூகம் கண்காணித்து வருவதாக மனித உரிமை கண்காணிப்பாகத்தின் ஆசிய பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் பில் ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதனை தடுத்து நிறுத்த மலேசியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா பலவந்தமாக நாடு கடத்தியதனை சாதகமாக பயன்படுத்தி புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய அரசாங்கம் சர்வதேச புகலிடக் கோரிக்கையாளர் சட்டங்களுக்கு மதிப்பளிப்பதனை விடவும், இலங்கையுடனான ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten