ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றுடன் வாழும் வகையில் ஈழத் தமிழ் சமூகம் கொண்டுள்ள அபிலாஷையை நிறைவு செய்யும் விதத்தில் தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டை விரைவுபடுத்துமாறும், 13 ஆவது திருத்தத்தை முழு அளவிலும், அதற்கு அப்பாலும் விரைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதனை எட்டுமாறும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக வற்புறுத்தினார் என்று கூறப்படுகின்றது.
தான் பிரதமர் அலுவலகப் பொறுப்பை ஏற்ற முதல் நாளில் பொறுப்பேற்று சில மணி நேரத்தில் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்த போது இந்தியப் பிரதமர் இப்படி வற்புறுத்தினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்தச் சந்திப்புக் குறித்து விடுத்த செய்திக் குறிப்பிலும் இவ்விடயம் அடங்கியிருந்தது.
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் நல்லிணக்கம் உருவாக்கப்படாமை குறித்து புதிய இந்தியப் பிரதமர் விசனம் தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது. இருநாட்டு மீனவர் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகப் பேசினர் என்றும் கூறப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், வெளிவிவகார அமைச்சின் செயல் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தனா, யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கேஷுனுகா செனிவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் ஆகியோரும் உடனிருந்தனர்.
http://www.jvpnews.com/srilanka/70855.html
Geen opmerkingen:
Een reactie posten