யாழ். மாவட்டத்தில் இராணுவ தேவைக்கென காணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு காணி தர முடியாது என நிராகரித்து ஒப்பமிட்டு திருப்பி அனுப்பியதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (26) காலை 9.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீள்குடியேற்றம் காணி சுவீகரிப்பு போன்ற பல விடயங்கள் விவாதிக்கப்பட்டன. காணி சுவீகரிப்பு தொடர்பாக விவாதிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் 20 – 23 காணிகளை இராணுவத்தினர் தமது தேவைக்கு என சுவீகரிப்பதற்காக என்னிடம் விண்ணப்பித்திருந்தனர். காணி சுவீகரிப்பது ஆயின் அது மக்களின் பொது தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட வேண்டும் இராணுவத்தினர் அவ்வாறு இல்லாமல் தமது முகாம் அமைப்பதற்காகவே அக் காணிகளை சுவீகரிபதற்காக விண்ணப்பித்து இருந்தனர்.
பொது தேவைக்கு அல்லாமல் இராணுவ தேவைக்காக காணிகளை சுவீகரிக்க முடியாது என அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்து ஒப்பமிட்டு அனுப்பி விட்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். இக் கூட்டத்தின் இணைத்தலைவர்களாக ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர்.
அத்துடன் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை சபாநாயகர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாளைய தினமும் காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten