முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சம்பந்தர் கடிதம்..
இதனை எட்டுவதற்கு உங்களின் முழு ஆதரவு தொடர்ந்து அவசியம் என்று தங்களை வேண்டி நிற்கின்றோம்.!” – இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார். அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ஈட்டிய பெரு வெற்றியைப் பாராட்டி அவருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடிதத்தின் முழு விவரம் வருமாறு முதலமைச்சர் அவர்களே, தமிழ் மக்களை, குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழ் மக்களை, கணிசமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் இம்மடலை வரைகிறேன். கடைசியாக நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் கூட – அச்சுறுத்தும் வகையில் ஆயுதப் படைகள் பிரசன்னமாகியிருந்து தலையீடு செய்த போதிலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அவதானிகளின் மத்தியில் இடம்பெற்ற அத்தேர்தலில், எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் 38 ஆசனங்களில் 30ஐக் கைப்பற்றியிருந்தது.
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உங்களுக்குக் கிடைத்த பெரு வெற்றிக்கு இலங்கையின் தமிழ் மக்களின் சார்பில் மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரி விக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 39 ஆசனங்களில் 37 ஐ வெற்றி கொண்டதன் மூலம், தற்போதைய மற்றும் முன்னைய ஆளும் கட்சிகளுக்கு அடுத்ததாக நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தேசிய ரீதியில் நீங்கள் மிளிர்கின்றீர்கள்.
இந்த வியப்புக்குரிய பெறுபேறு உங்களின் செல்வாக்கை வெளிப்படுத்தவல்ல நல்ல குறியீடு என்பதும் உண்மையே. தங்களின் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்புக் களை வெற்றிரகமாக நிறைவேற்றுவதற்கு தங்களுக்கும் தங்களின் அரசுக்கும் எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் தாங்கள் தொடர்ந்து காட்டிவரும் சிரத்தைக்கு நாம் நன்றியாக இருக்கும் அதேசமயத்தில் எங்களிடையேயான உறவை வலுப் படுத்தும் வகையில் உங்களுடனும் உங்கள் அரசுடனும் நெருங்கிச் செயற்படுவதற்கு எதிர்பார்த்தும் இருக் கிறோம். மீண்டும் வன்முறை இடம்பெறுவதை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் விரும்பவில்லை. தாமும், இலங்கையில் உள்ள ஏனையோரோடு தத்தம் பிரதேசங்களின் சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வைக் கொண்டு நடத்துவதையே அவர்கள் விரும்புகின்றனர்.
1983 ஆம் ஆண்டின் தமிழர் எதிர்ப்பு படுகொலைகளின் தொடர்ச்சியாக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் இறுதித் தீர்வைக் கொண்டு வருவதற்காக இந்தியா எடுத்த நல் முயற்சிகளை இலங்கை இணங்கி ஏற்றுக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் இடை யூறுகள் ஏற்பட்ட போதிலும் இந்த முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்தியா தொடர்ந்தும் ஒரு பங்கை ஏற்று, வகித்து வந்தது. மே 2009 இல் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து, வன்முறை நிறுத்தப்பட்ட போது, சமத்துவம், நீதி, உண்மையான தீர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிணக்குக்கு நிரந்தரமாக முடிவு கட்டும் அனைத்து வாய்ப்புக்களும் உருவாகின. ஏற்றுக் கொள்ளத் தக்க அரசியல் தீர்வைக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை – போர் நிகழ்ந்த காலத்திலும், போரின் முடிவுக்குப் பின்னரும் – இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை வழங்கியிருந்தது.
துரதிஷ்டவசமாக இந்த வாக்குறுதி நிறைவு செய்யப்படவேயில்லை. இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி ஒன்றை தங்களின் மேலான கவனத்துக்காக நாம் இத்துடன் இணைத்துள்ளோம். அதில் பின்வரும் விடயங்களைத் தெரிவித்துள்ளோம்:- 01. தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்றைக் கொண்டு வருவோம் என சர்வதேச சமூகத்திற்கும், இந்தியாவுக்கும் ஏற்கனவே பல தடவைகள் தான் வழங்கிய உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவு செய்யவேயில்லை.
02.அந்தக் கடிதத்தில் நாம் விலாவாரியாகக் குறிப்பிட்டவாறு தனது பல்வேறு செயற்பாடுகள் மூலம் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களின் இனப்பரம்பல் முறையை மோசமாக மாற்றியமைக்கவும், அதன் மூலம் அவர்களின் இனத்துவ, மொழியியல், பண்பாட்டு அடையாளங்களை சீரழிக்கவுமான நிகழ்ச்சி நிரலையே இலங்கை அரசு முனைப்பாக முன்னெடுக்கிறது.
03. இலங்கை அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகள், ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வை எட்டுவதில் இலங்கை அரசுக்கு நேர்மையான பற்றுறுதி இல்லை என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் நல்லிணக்கம், நிரந்தர சமாதானம், அமைதி ஆகியவற்றுக்கான முயற்சிகளைப் பலவீனப்படுத்தும்; மோதல் நிலையைத் தீவிரப்படுத்துகின்ற சூழலை உருவாக்கும் மேலும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு, அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பிரதேசங் களில் மீளச் சரிபண்ணவே முடியாத பல இழப்புக்களை ஏற்படுத்தும்.
இலங்கையில் நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கௌரவமான தீர்வு ஒன்று எட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவின் பங்களிப்புத் தொடரவேண்டும் என்று பிரதமரிடம் நாம் கோரியுள்ளோம். இதனை எட்டுவதற்கு உங்களின் முழு ஆதரவு தொடர்ந்து அவசியம் என்று தங்களை வேண்டி நிற்கிறோம். இயன்ற விரைவில் தங்களைச் சந்திக்க எதிர்பார்த்திருக்கிறோம். அத்தகைய வாய்ப்பை எமக்கு வழங்குமாறு ஆர்வத்துடன் வேண்டுகிறோம். – என்று உள்ளது.
மகிந்த மறைக்க அம்பலப் படுத்தினார் சுஜாதா சிங்…
“13வது திருத்தம் தொடர்பான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பிரதிபலிப்பு என்ன? கடந்த 25 ஆண்டுகளாக இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து இருநாட்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தி வருகின்றன. இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை.
சிறிலங்கா அதிபரின் பிரதிபலிப்பு எப்படியிருந்தது?
அவர் திருத்தத்தில் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளாரா அல்லது இன்றைய சந்திப்பில் ஏதேனும் சில சாக்குப்பாக்குகளைக் கூறிவிட்டுச் செல்கிறாரா?”என்று செய்தியாளர் ஒருவர் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங்கிடம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அவர், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா அதிபருடன் 13வது திருத்தம் குறித்து கலந்துரையாடினார்.
இந்த விவகாரம் குறித்து அவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடத்தினர். சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் நலனுக்கு 13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது முக்கியம் என்றும், அதற்கு அப்பாலும் செல்ல வேண்டியது அவசியம் என்றும் நாம் எமது தரப்பில் சிறிலங்கா அதிபரிடம் கேட்டுக் கொண்டோம்.
எனவே, இந்தியப் பிரதமரிடம் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை செவிமடுத்து, சிறிலங்கா பொருத்தமான நடவடிக்கையை எடுக்கும் என்று நாம் நம்புகிறோம்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மூடிமறைக்க முயன்றதைப் போட்டுடைத்தார் சுஜாதா சிங்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்திய விவகாரத்தை, சிறிலங்கா அதிபர் செயலகம் மூடி மறைத்து விட்டது.
நேற்றுக்காலை புதுடெல்லியில் இருநாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்புத் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கையில், நரேந்திர மோடியுடனான சந்திப்பில், நல்லிணக்க முயற்சிகள், மீள்கட்டுமான. புனர்வாழ்வு நடவடிக்கைகள், மீனவர்கள் விவகாரம், மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் குறித்தே பேசப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
13வது திருத்தச்சட்டம் குறித்து ஒரு வார்த்தையேயும் அதில் கூறப்பட்டிருக்கவில்லை.
ஆனால், நேற்று புதுடெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நரேந்திர மோடி வலியுறுத்தியதை இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் போட்டுடைத்து விட்டார்.
இதனால், 13வது திருத்தச்சட்டம் குறித்து பேசப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்ற சிறிலங்காவின் முயற்சி தோல்வி கண்டுள்ளது.
இராசநாயகத்திற்கு காரைதீவு பிரதேச ஆலய அறங்காவலர் ஒன்றியம் வக்காளத்து
கட்சியின் நடவடிக்கைகளுக்கு இயைந்து செயற்படாதவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் அவ்வாறு செயற்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் இருவருக்கு தவிசாளர் பதவிகள் வழங்க தமிழரசுக் கட்சியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு காரைதீவு பிரதேச ஆலய அறங்காவலர் ஒன்றியம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் செயலாளரால் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக யோகரத்தினம் கோபிகாந்தையும் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக சிவலிங்கம் குணரத்தினத்தையும் நியமிப்பதற்கு அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரிடம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு இவர்கள் இருவரும் காரணமாக இருந்தார்கள் என்றும் இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் இந்த நடவடிக்கை குறித்து இரண்டு பிரதேச சபைகளைச் சேர்ந்த பொது அமைப்புகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
காரைதீவு பிரதேச ஆலய அறங்காவலர் ஒன்றியத்தின் பேச்சாளர் எஸ்.தில்லையம்பலம் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் – “எமது பிரதேச சபையைச் சேர்ந்த மூவர் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தமிழரசுக் கட்சியிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தோம். அதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பதிலாக அந்த உறுப்பினர்களுக்கு மீளவும் பதவி வழங்கவே கட்சி முயற்சிக்கின்றது. இது தமிழரசு கட்சியின் வங்குரோத்து நிலையே எடுத்துக் காட்டுக்கின்றது. கட்சி இவ்வாறு நடந்து கொள்ளுமானால் அவர்கள் மீதான நம்பிக்கை பொதுமக்களிடம் இருந்து அற்றுப் போகும் என்பதை உணரவேண்டும்”. – என்றார். வரவு – செலவுத் திட்டத் தோல்விக்குக் காரணமானவர்கள் விசாரணைகளின் பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என்று தமிழரசுக் கட்சியின் செயலாளர் அறிவித்திருந்தார்.
கட்சியின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டியவர்களே மீளவும் பதவியில் அமர்த்த முயற்சிப்பது பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten