மகிந்தரின் ஞானத்தால் மோடியுடன் உறவாம்! நிமல் சிறிபால டி சில்வா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் காணப்படுகின்ற பகுத்தறிவு மற்றும் அரசியல் ஞானம் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள முடிந்ததாக அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த செய்தியாளர் சந்திப்பில்- 13ம் திருத்தத்திற்கு மேல்சென்று வடக்கிற்கு அதிகாரம் வழங்குமாறு இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதியை வலியுறுத்தினாரா? என ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா- அது இராஜதந்திர சந்திப்பு என்பதால் அது குறித்து பதில் கூற முடியாது என தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதியிடம் காணப்படுகின்ற பகுத்தறிவு மற்றும் அரசியல் ஞானம் காரணமாக இந்திய பிரதமருடன் நல்லுறவை மேம்படுத்த முடிந்ததெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.jvpnews.com/srilanka/71129.html
வெருகல் கங்கை கதவுகள் மூடப்பட்டமையால் அவதியுறும் மக்கள்
இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக வெருகல் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன் தெரிவித்துள்ளார்.
மாவிலாற்றிலுள்ள வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டுள்ளதால் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பல கிராமங்கள் குடிநீரின்றி சிரமப்படுவதோடு சுமார் 1500 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்- வெருகல் கங்கைக்கு நீர் வழங்கும் மாவிலாற்றுக் கதவு கடந்த ஒரு வாரகாலமாக மூடப்பட்டுள்ளதால் வெருகல் கங்கை நீரோட்டமின்றி வரண்டுள்ளது. இதனால் கடல் நீர் வெருகல் கங்கைக்குள் ஊடுருவி கங்கை நீர் உவர் நீராக மாறியுள்ளது.
இந்த நிலைமை காரணமாக வெருகல் கங்கை நீரை நம்பியிருக்கும் வெருகல்- பூநகர்- வட்டவன்- மாவடிச்சேனை- சேனையூர்- முத்துச்சேனை- முகத்துவாரம்- சூரநகர்- ஆனைத்தீவு போன்ற கங்கைக் கரையோரக் கிராம மக்கள் குடிநீருக்கும் விவசாயத்துக்கான பாய்ச்சல் நீருக்கும் வழியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனரென கூறினார்.
இதேவேளை- மூன்று மாத கால அவகாசத்தில் வெருகல் கங்கைக்கு நீர் திறந்து விடப்படுமென்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் அளித்த உத்தவாதத்தின் அடிப்படையிலேயே தாங்கள் நிலக்கடலை போன்ற உப உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்கியதாகவும் தற்போது இடைநடுவில் கங்கை நீர் தடைப்படுத்தப்பட்டதால் கங்கைக்குள் கடல் உவர் நீர் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனை அறியாது நீர் பாய்ச்சிய விவசாயிகளின் பயிர்கள் எல்லாம் கருகி வாடிவிட்டதாக விவசாயிகள் சங்கத் தலைவரும் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவருமான என்.ஞானகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்- ஆனைத்தீவு கிராம சேவையாளர் பிரிவில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை- மிளகாய்- சோளம்- பயற்றை போன்ற பயிர்கள் கருகிப்போய் காணப்படுவதாக ஆனைத்தீவு கிராமசேவையாளர் லிங்கேஸ்வரன் ஜீவராணி தெரிவித்துள்ளார்.
இப்பாதிப்புக்களை கருத்திற்கொண்டு நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென இவ் ஆற்றை நம்பி வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/71126.html
மன்னார் மாவட்டத்தில் சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் கூறுகிறார்: M.Y.S.தேசப்பிரிய
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிங்கள மக்களை மன்னார் அரச அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. மீள்குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்தில் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார். அதேவேளை முசலி பிரதேசத்தில் சிங்கள குடியேற்றம் ஒன்றிற்கான விரிவான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக தமிழ் தேசியக்கூட்டபைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேற்குறித்த செய்தி தொடர்பில் உண்மைத் தன்மையினை அறியும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் யுத்த சூழ்நிலை ஏற்பட்ட போது மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த சிங்கள மக்கள் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் தாம் வாழ்ந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதனால் அவர்களையும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். ஆயினும் யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு இடம் பெயர்ந்தவர்கள் கட்டங்கட்டமாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மெனிக்பாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாம்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் அரசாங்கத்தினால் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களும் கட்டங்கட்டமாக அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது அவர்களுக்கு அரசாங்கத்தினால் அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்திலும் தற்போது சிங்கள மக்களின் மீள் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சி நிரலும் இல்லை அதற்கு அவசியமும் இல்லை. நாம் அரசாங்க அதிகாரிகள் மட்டுமே. இடம்பெயர்ந்த மக்கள் தாம் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறப் போவதாக விருப்பம் தெரிவித்தால் அதன் சாதக தன்மையினை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரச அதிகாரிகளாகிய எமது கடமையாக இருக்கின்றது. இதனடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவிலும் தற்போது சிங்கள மக்களின் மீள் குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. -யுத்தத்தின் காரணமாக மடு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மடுச்சந்தியிலிருந்து வெளியேறிய சிங்கள மக்கள் அப்பகுதிகளில் மீளவும் மீள்குடியேறி தமது இயல்பு வாழ்க்கையினை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், சௌவுத்பார், முசலி, மடு என பல பகுதிகளிலும் யுத்தத்தின் முன்னரான காலப்பகுதிகளில் சிங்கள மக்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களோடு இணைந்து வாழ்ந்திருக்கின்றார்கள். ஆகவே, யுத்தத்தின் காரணமாக நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறி வாழ்வதற்கு விருப்பம் தெரிவிக்கும் போது அதனை செய்து கொடுக்கும் கடமையில் இருந்து விலக முடியாது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/71122.html
Geen opmerkingen:
Een reactie posten