ஒருசில வாரங்களுக்கு முன்னர் வன்னியின் வெடிவைத்தகல் பகுதியில் மூன்று தமிழ் இளைஞர்கள் சிங்களப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி எல்லா ஊடகங்களையும் நீக்கமற நிறைத்து நின்றன....
அதிர்ச்சி, சோகம், சந்தேகம் போன்ற உணர்வுகளுடன் அந்த செய்தி நம் எல்லோரையும் ஆட்கொண்டு இருந்தது, இப்போது மறந்துவிட்டோம்...
தெய்வீகன், அப்பன், கோபி ஆகிய அந்த இளைஞர்கள் வெடிவைத்தகல் பகுதியில் சிங்கள பேரினவாதப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை சிங்கள அரசு வெளியிட்ட உடனேயே 'சிங்கள அரசினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்களே தெய்வீகன், அப்பன், கோபி என்றும் அவர்களை இப்போது சிங்கள அரசே கொன்று விட்டதாகவும் ஊகங்களும் புரளிகளும் பெருமளவில் பரபரப்பாக கிளம்பின.
உண்மையிலேயே ஒரு விடுதலை அமைப்பு போன்ற தோற்றத்துடன் குளோனிங் விடுதலை அமைப்பு ஒன்றை சிங்கள பேரினவாத அரசு உருவாக்கி அதில் வெற்றிபெற முடியுமா? அந்த போலி அமைப்பை மக்கள் மத்தியில் உண்மையான இயக்கம் போன்று உள்நுழைக்க முடியுமா? என்பதை சுருக்கமாக பார்ப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்...
முதலில் ஒரு விடயம்:... தெய்வீகன், கோபி, அப்பன் ஆகியோர் தமது மக்களை இனஅழிப்பு செய்த ஒரு படைகளுக்கு எதிராக, இப்போதும் ஆயுத பலத்தால் தமிழ் மக்களை ஆக்கிரமித்து கொடுமைகள் புரிந்துவரும் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்து பாடுபட்டதாகவே தெரிகிறது, அவர்களின் நோக்கம் தூய்மையானது.
இனி விடயத்துக்கு வருவோம்..
எதிர்காலத்தில் தன்னும் தமது கைப்பாவைகளை கொண்டு ஒரு போலி விடுதலை அமைப்பை சிங்களம் உருவாக்கி எமது மக்களை நீண்ட காலத்துக்கு குழப்ப முடியுமா..?
2009 மே மாதத்தில் தமிழீழத்துக்கான ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை அழித்தெறிந்து விட்டதாக சிங்களம் பிரகடனம் செய்து கொண்டாடினாலும்கூட அதன் ஆழ்மனதில் ஒரு பெரீய பயம் எந்த நேரமும் எழுந்து எழுந்த வண்ணமே இருக்கின்றது. அது அவர்களின் அச்சத்திலிருந்து எழுகிறது. 1983ல் இருந்து 2009 மே வரையான காலப்பகுதிக்குள் முழுச்சிங்கள இனமும் எந்தவிதமான அச்சநிலைக்குள் வாழ்ந்தது என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.
எனவே மீண்டும் அப்படி ஒரு நிலைமை தோன்றுவதை ஒருபோதும் சிங்கள பேரினவாத தலைமை விரும்பாது. அதனை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தி அழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும்.
வெறும் ஆயுதங்களை மட்டும் நம்பி இருக்காமல் புதிய முறைகளை நடைமுறைப்படுத்தி உளவியல் ரீதியாக தமிழ் மக்களை களைப்புக்குள் அமிழ்த்தி இறுதியில் அழிப்பதுதான் நோக்கம்.
இந்த புதியமுறைகள் எவையாக இருக்கும் என்று பார்ப்பதற்கு முன்னால் சிங்களத்தின் படையக திட்டமிடல் வரலாற்றை பார்ப்பது அவசியம்.
இவர்கள் என்னவிதமான முறைகளை மாற்றி மாற்றி பாவித்தார்கள் என்பதை மேஜர். ஜெனரல் சரத் முனசிங்கவின் 'ஒரு போர்வீரனின் பார்வை' என்ற புத்தகம் ஓரளவுக்கு சொல்கிறது.
விடுதலைப் போராட்டம் முளைவிட்டு கருவாகிய 1970 காலப் பகுதியில் இருந்து 1999 காலம் வரை சிங்கள இராணுவத்தில் பணியாற்றி, அதன் பல பிரிவுகளில், புலனாய்வு பொறுப்பாளர் பதவி உட்பட செயற்பட்ட மேஜர் ஜெனரல் சரத் முனசிங்காவின் நூல், தமிழீழ தாயக கோட்பாட்டை அழிப்பதில் சிங்கள தேசம் நடாத்தும் போர் என்பது தனித்து படைகளால் மட்டும் நடாத்தப்படுவது அல்ல. தமிம் மக்களின் உளவியலை சிதைக்கும் ஒவ்வொரு முறையையும் அது நாற்பது வருடங்களாக செயற்படுத்தியே வந்துள்ளது என்பதையே கூறுகின்றது.
முதலில் தமிழ்மக்கள் மத்தியில் தகவல் கொடுப்பவர்களை வைத்து போராட்டத்தை அழித்து விடலாம் என்று செயற்படும் படைகள் அது முடியாமல் போன போது புதிது புதிதான முறைகளை எவ்வாறு பிரயோகித்தனர் என்பதை சுய வாக்குமூலமாக அதில் கூறுகின்றார்.
இந்த புதிய முறைகளில் சிங்களத்தின் ஆசானாக இந்தியாவே இருக்க முடியும்.வேறு யாருக்கு அந்தத் தகுதி உண்டு..?
உலகில் விடுதலை அமைப்புகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்குவதில் அழித்தெறிவதில் அதிக அனுபவம் வாய்ந்த தேசம் எது என்றால் எல்லோரும் அமெரிக்கா என்றே கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள்.
ஆனால் அமெரிக்காவைவிட அதிக அனுபவமும் பட்டறிவும் இந்த விடயத்தில் இந்தியாவுக்கு உண்டு. எத்தனை விடுதலைப் போராட்டங்களை, புரட்சிகளை ஒடுக்கி அதன்மீது ஒற்றை தேசம் ஒன்றை கட்டிஇருக்கிறார்கள்.
பிரித்தானியர் வருகைக்கு முன்னர் பலநூறு பிரிவுகளாக சமஸ்தானங்களாக இருந்த நிலமே இந்தியா. அது சுதந்திரம் அடைந்ததுகூட ஒரு பெரிய பிரிவினையுடன்தான்.
சுதந்திரத்தின் மறுநாளே இந்தியாவின் நெஞ்சுப் பகுதியில் இருந்த சிறுநிலப்பரப்பான ஹைதராபாத் தான் ஒருபோதும் இந்தியாவின் ஒரு அங்கம் அல்ல என்றும் ஹைதராபாத் தனிநாடே என்றும் பிரகடனம் செய்ததும் அதனை 1948 செப்டம்பரில் இந்திய இராணுவத்தை அனுப்பி மீட்டதும் அதன் பின்னர் திராவிட நாடு தொடங்கி மீசோரம் வரை தனியாக பிரிந்து சென்று தேசம் அமைக்கும் போராட்டங்களை நடாத்தியதுமான ஒரு வரலாறும் அதனை பல பல வடிவங்களில் இந்திய மத்திய அரசு அடக்கியதும் எந்தவொரு தேசத்திலும் இப்படியான படிப்புகள் அதன் படைகளுக்கும் அதன் புலனாய்வு அமைப்புக்கும் கிட்டி இருக்காது.
அந்த அனுபவங்களில் மிக முக்கியமானது போலியான அமைப்புகளை உருவாக்கி குழப்புதல் இறுதியில் இலட்சியத்தை அழித்து மக்களை மறக்க செய்தல் என்பதே ஆகும்.
அசாமின் விடுதலைக்கான போராட்ட அமைப்பின் வீரியத்தை குறைப்பதற்காக அசாம் கன பரிசத் அமைப்பை உருவாக்கியதும் அந்த முரணுக்குள் அசாம் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடாத்திய உல்பாவை இன்னும் செயலற்றதாக்கியதும் இறுதியில் உல்பா நான்கு வருடங்களுக்கு முன்னர் தமது தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டதும் ஒரு சிறு உதாரணங்களே..
இதனை போன்று காலிஸ்தான் போராட்டத்திலும் போலியாக ஒரு அகாலிதள் அமைப்பை உருவாக்கியதும் இன்று காலிஸ்தான் கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்துள்ளதும் உதாரணமே..
போலியான ஒரு விடுதலை அமைப்பை ஆக்கிரமிப்பாளனே உருவாக்கும் இந்த முறையின் பாடங்களை கற்றுக்கொண்ட சிங்களம் அதனை இப்போது எம்மீது நடைமுறைப்படுத்த முயல்கிறது..
ஆனால் மிகவும் உக்கிரமாக எழுந்துள்ள தமிழ்-சிங்கள முரண்பாட்டினுள் இந்த போலி அமைப்பு ஒருபோதும் வேர்விட்டு வளரவே முடியாது என்பதுதான் உண்மை.
ஒரு விடுதலை அமைப்பு உருவாகி வளர தேவையான
1) விடுதலை அமைப்பு ஒன்றின் மிக முக்கியமான சக்தியான மக்கள் ஆதரவு
2) புதிய போராளிகளை இணைத்தல்
3) ஒரு தலைமையை அறிமுகம் செய்தல்
2) புதிய போராளிகளை இணைத்தல்
3) ஒரு தலைமையை அறிமுகம் செய்தல்
என்ற அடிப்படைகள் மூன்றுமே இந்த போலி அமைப்புக்கு ஒருபோதும் கிட்டப்போதில்லை.
மக்கள் ஆதரவு என்ற பலம் ஒரு விடுதலை அமைப்பின் செயற்பாடுகளை வைத்தே தீர்க்கமாகும். ஒரு போலி அமைப்பு ஒருபோதும் உறுதியான கொள்கைகளை இலக்குகளை தெரிவுசெய்யாது.. அதிலும் கடந்த முப்பது வருடங்களாக ஒரு உன்னதமான அர்ப்பணிப்பு நிறைந்த விடுதலைப் போராட்டத்தை தமது கண்களால் கண்டிருந்த மக்களுக்கு இருக்கும் மோப்ப சக்தி எது உண்மையானது எது போலியானது என்பதை தெரியப்படுத்திவிடும்.
சிங்களம் உருவாக்கும் குளோனிங் விடுதலை அமைப்பின் முக்கிய செயற்பாடே உண்மையான போர்க்குணம் மிக்கவர்களை அடையாளம் கண்டு சிங்களப் படைகளுக்கு அறிவித்து அழிப்பது ஆகும்.
வான்வரை எழுந்து பறந்த இந்த விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டதற்கு பெரும் துரோகமே காரணம் என்றே சாதாரண மக்கள் நம்புகிறார்கள். இதனால் ஒருவிதமான சந்தேக பார்வை ஒருவர் மீது ஒருவருக்கு தமிழீழ தேசியம் முழுதற்கும் எழுந்துமுள்ளது. சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்க்குணத்தை எவருடனும் பகிர்ந்துகொள்ள அஞ்சும் ஒரு நிலையே தாயகத்திலும் புலத்திலும் நிலவுகிறது.
இந்நிலையில் இந்த போலி விடுதலை அமைப்புகள் தமது கருத்துகளை மக்கள் மத்தியில் வீசி அதில் அகப்படும் உண்மையான போர்க்குணம் மிக்கவர்களை அடையாளம் காண எடுக்கும் முயற்சி நிச்சயம் எடுபடாது.
இறுதியாக ஒன்று.
தமிழினத்தை பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் நேர்மையான, வீரமிக்க, வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு தலைவனை கண்டவர்கள். அவரை சூரியதேவனாக, கடவுளாக கூட அவர்கள் உருவகிக்கும் அளவுக்கு அவரின் ஆளுமை எல்லோர் மனங்களுள்ளும் நிறைந்திருக்கு.
சிங்கள பேரினவாதமோ, அல்லது இந்திய வல்லாதிக்கமோ தமது நலன்களை நீண்ட காலத்துக்கு பேணுவதற்காக நவீன ஆயுதங்களுடன், மிகப்பெரிய ஊடக வெளிச்சத்தில், விளம்பரங்களுடன் ஒரு போலி விடுதலை அமைப்பை உருவாக்கலாம்..
ஒரு போதும்.... ஒருபோதுமே....ஒரு தலைவனை உருவாக்க முடியவே முடியாது...
ஏனென்றால் தமிழர்கள் உண்மையான ஒரு தலைமையை, தலைவன் ஒருவனின் விஸ்வரூபத்தை கண்டவர்கள்..குளோனிங் அமைப்பு அந்த தலைமையின் கால்பெருவிரல் நகம் அளவுக்குகூட இருக்காது..
ச.ச.முத்து
ilamparavai@hotmail.com
ilamparavai@hotmail.com
Geen opmerkingen:
Een reactie posten