தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

மோடி பதவியேற்புக்கு மஹிந்த அழைத்தமையை கண்டித்து ம.தி.மு.க. தீர்மானம்

ஈழத்தமிழ் இனத்திற்கு மன்னிக்க முடியாத துரோகமும், தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும் புரிந்த காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, தமிழர்களுக்கு மனமகிழ்ச்சி. இருந்த போதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்புக்கு, போர்க்குற்றவாளியான இலங்கை ஜனாதிபதியை, எமது எதிரப்புக்களையும் மீறி அழைத்தமை ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை சென்னை, தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கியமான 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:- இந்திய நாட்டின் ஜனநாயக ஒளி உலகம் வியக்கப் பிரகாசிக்கிறது.

1977 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், காங்கிரஸ் அல்லாத ஓர் அரசியல் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றது இல்லை. 16 ஆவது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியின் அலை ஓங்கி எழுந்ததால், பாரதீய ஜனதா கட்சி 282 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களையும் பெற்றமை பிரமிக்கத்தக்க சாதனை வெற்றி ஆகும். கடந்த பத்து ஆண்டுக் காலமாக இந்திய ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் எழ முடியாத படுதோல்வியைச் சந்தித்ததோடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற தகுதியைக் கூடப் பெற முடியவில்லை.
ஈழத்தமிழ் இனத்திற்கு மன்னிக்க முடியாத துரோகமும், தாய்த்தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும் புரிந்த காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, தமிழர்களுக்கு மனமகிழ்ச்சி. எளிய குடும்பத்தில் பிறந்து, ஒரு துறவியாகவே வாழ்ந்து, தனது தலைமைப் பண்பை நாட்டின் கோடானுகோடி மக்கள் மனதில் பதிய வைத்து, உன்னதமான வெற்றியை ஈட்டி, இந்தியாவின் 15 ஆவது பிரதமராகப் பொறுப்பு ஏற்று உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற நரேந்திரமோடி, மே 26 ஆம் திகதி பிரதமராகப் பொறுப்பு ஏற்ற நிகழ்வு, இந்திய ஜனநாயகத்திற்கு மகுடம் சூட்டி இருக்கின்றது.

சமுதாயத்தின் அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்து, தொண்டராக உழைத்து உயர்ந்து, இந்தியாவின் தலைமைப் பொறுப்பை நரேந்திர மோடி ஏற்கின்ற இனிய நாளில், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதைப் போல, இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து இனப் படுகொலைக்குக் காரணமான ராஜபக்‌ஷ பங்கேற்க இருப்பதை அறிந்தவுடன் வேதனையில் துடித்த பொதுச்செயலாளர் வைகோ, மே 23 ஆம் நாள் நரேந்திர மோடியைச் சந்தித்தார். ‘இரத்தக் கறை படிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு வருகை தரும் செய்தி எங்களைப் பேரிடியாகத் தாக்குகிறது.


பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய நபரை, புகழ்மிக்க உங்களுடைய பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. கொலைகார இராஜபக்‌ஷ வருகையைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். ஆனால், சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்ற போர்வையில் ராஜபக்‌ஷவின் வருகை உறுதியானதும், அந்த வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மே 26 ஆம் நாள் டெல்லி ஜந்தர் மந்தரில் கறுப்புக்கொடி அறப்போர் நடைபெறும் என்று பிரகடனம் செய்தது மட்டும் அன்றி, அறிவித்த 48 மணி நேரத்தில் அதற்கான ஏற்பாடுகளையும் திட்டமிட்டு மேற்கொண்டு, வெற்றிகரமாக நடத்திக் காட்டி, தாய்த் தமிழகம் மட்டும் அன்றி உலகெங்கும் உள்ள தமிழர்களின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.- என்று அந்த தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
http://www.jvpnews.com/srilanka/71100.html
TajkimTajkim-01Tajkim-02

Geen opmerkingen:

Een reactie posten