தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபட ஈழத்தமிழர்களை உளவாளியாக மாற்றும் பாக்.தூதரக அதிகாரிகள்!

தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலையில் ஈடுபடும் சதித் திட்டத்துடன் இலங்கை தமிழரான அருண் செல்வராசன் ஊடுருவி உளவு பார்த்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் உளவாளியாக மாறி மிகவும் துணிச்சலுடன் சென்னை வடபழனியில் அடுக்கு மாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து தங்கி, ‘‘ஐஸ் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்’’ என்ற கம்பெனியையும் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் அருண் செல்வராசன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். யாரும் எளிதில் நுழைந்து விடமுடியாத துறைமுகம் உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளிலும் அருண் செல்வராசன் ஊடுருவி பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளார்.
முக்கியமான இடங்கள் பலவற்றையும் அவர் போட்டோக்கள் எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இந்த போட்டோக்கள் மற்றும் உளவு தகவல்கள் அனைத்தையுமே இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், சிராஜ் அலி இருவருக்கும் அருண் செல்வராசன் அனுப்பியுள்ளார். இவர்கள் தான், அருண் செல்வராசனை உளவாளியாக மாற்றி தமிழகத்திக்கு அனுப்பி வைத்து இயக்கியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் அருண் செல்வராசனை போலவே தமிழகத்தில் தங்கி இருந்து உளவுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் உளவாளியான ஜாகீர் உசேன் பிடிபட்டார்.
தமிழகத்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம், அமெரிக்கா தூதரகம், ஜெமினி மேம்பாலம் ஆகியவற்றின் போட்டோக்களும் அவரிமிருந்து கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த தகவல்களும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
ஜாகீர் உசேனை கைது செய்த கியூபிரிவு போலீசார், இலங்கை தூதரக அதிகாரிகளான பாஸ், சித்திக் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து ஜாகீர் உசேன், கடந்த 2012–ம் ஆண்டு கைதான திருச்சி தமிம் அன்சாரி ஆகியோரின் பின்னணி பற்றி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது அருண் செல்வராசன் சிக்கியுள்ளார்.
இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேன், அருண் செல்வராசன் ஆகிய 2 பேரை போல மேலும் பல ஈழத்தமிழர்களை மூளைச்சலவை செய்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தமிழகத்துக்கு உளவாளிகளாக அனுப்பி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவர்கள் யார் – யார்? என்கிற தகவல்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திரட்டியுள்ளனர்.
இதைவைத்து பார்க்கும் போது, தமிழகத்தில், இலங்கை தமிழர்களை வைத்தே, நாசவேலையில் ஈடுபட பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.
ஏற்கனவே ஜாகீர் உசேன் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பாக்.தூதரக அதிகாரிகளான பாஸ், சித்திக் இருவரையும் அருண் செல்வராசன் வழக்கிலும் சேர்க்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் இது போன்ற சதி செயல்களை முடிவுக்கு கொண்டு வந்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர். எனவே சதி திட்டத்துடன் செயல்பட்டு வரும் அந்த அதிகாரிகளை கைது செய்ய அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவித்துள்ளனர். இந்திய தூதரகம் மற்றும் இலங்கை அரசின் துணையுடன் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் சதி திட்டம் பற்றி முழுமையாக விசாரிக்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் அவர்கள் இலங்கை சென்று விசாரணை நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் உளவாளி அருண் செல்வராசன், பரங்கிமலையில் உள்ள ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமிக்குள் கடந்த 2009ம் ஆண்டே புகுந்திருப்பது தெரியவந்துள்ளது. அங்கு பார் டெண்டர் எடுத்திருந்த அவர் அதிகாரிகளுடன் போட்டோக்களும் எடுத்துள்ளார்.
இதனை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அருண் செல்வராசன் அனுப்பி வைத்துள்ளார்.
இந்திய இராணுவ அதிகாரிகளை புகைப்படம் எடுத்த இலங்கை உளவாளி! திடுக்கிடும் தகவல் - தென்னிந்தியாவில் பாதுகாப்பு தீவிரம்
தென்னிந்தியாவில், உளவுப்பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அருண் செல்வராஜா, இராணுவ உயரதிகாரிகளை படம் எடுத்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்காக உளவுப்பணியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட அருண், தற்போது தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
அருண் 2009 ஆம் ஆண்டு இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இரவுநேர போசனத்தின் போது உணவு பரிமாறுபவராக செயற்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சென்னையில் உள்ள முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
இந்தநிலையில் 2009ஆம் ஆண்டு இராணுவ கல்லூரியின் இராணுவ அதிகாரிகளுக்கான இரவுபோசனத்துக்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுடன் உடன்படிக்கை செய்யப்பட்டது.
இதன்போது குறித்த ஹோட்டலில் உள்ள தமது நண்பரின் ஊடாக அருண் செல்வராஜா, இராணுவ அதிகாரிகளுக்கான இரவுபோசன விருந்தின்போது உணவு பரிமாறுபராக செயற்பட்டுள்ளார்.
இந்தவேளையில் அவர் இராணுவ அதிகாரிகளுக்கு பானம் பரிமாறும் போது அருண், தாம் வைத்திருந்த பேனைக் கமராவினால் அதிகாரிகள் பலரை புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் பின்னர் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரத்தில் பணியாற்றும் தமது அதிகாரியான சாஜி என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இராப்போசன விருந்து இரவின்போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அருண் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.
இதேவேளை அருண் செல்வராஜாவின் விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர் கைது: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை
சென்னையில் இலங்கையரான அருண் செல்வராஜா என்பவர் கைது செய்யப்பட்டதையடுத்து,  மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
விமான நிலைய பகுதிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் விமானத்தில் செல்லும் பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, நேற்று காலை சென்னையில் இருந்து கொழும்புக்கு செல்ல இலங்கையைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 40) என்பவர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தபோது, அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அதில் ஒரு போத்தலில் “பாதரசம்” இருந்ததையடுத்து, அதனை எடுத்துச் செல்ல தடை அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாதரசம் விலை உயர்ந்தது என்பதால் அதை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என விக்னேஷ் கூறியுள்ளார். அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டதால் அவர், தனது விமான பயணத்தை இரத்து செய்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளார்.
மேலும் பயணிகள் கொண்டு சென்ற தங்கள் கைப்பைகளில் இருந்த திரவ பொருட்களை எடுத்துச் செல்லவும் அதிகாரிகள் தடை விதித்தனர். பயணிகள் கொண்டு வந்த திரவ பொருட்களை வீசி எறிந்து விட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவில் பாதுகாப்பு தீவிரம்: அருண் செல்வராஜா இந்திய உளவு பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்
தென்னிந்தியாவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் தென்னிந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் உளவுப்பிரிவுக்காக இலங்கை தமிழரான அருண் செல்வராஜா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டத்தை அவதானிப்பதற்காக முக்கிய மையங்கள் யாவற்றிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மின்சார மையங்கள், பாதுகாப்பு மையங்கள், முக்கிய ரயில்வே நிலையங்கள், வர்த்தக வீதிகள், புனித தலங்கள், கரையோர காவல் நிலையங்கள் என பல இடங்களிலும் இந்த பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
கரையோர இறங்கு தளங்களான தஞ்சாவூர், நாகப்பட்டிணம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மேலதிக படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை விசாரணை செய்யப்பட்டு வரும் அருண் செல்வராஜா, விரைவில் இந்திய உளவு வலைத்தள பிரிவினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfu3.html

Geen opmerkingen:

Een reactie posten