[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 12:06.20 PM GMT ]
மட்டக்களப்பு, குருக்கள்மடம் எனுமிடத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் காத்தான்குடி முஸ்லிம்களின் புதைகுழிப் பிரதேசத்தைப் பார்வையிடுவதற்காக சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று இன்று காலை 08:30 மணிக்கு குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தது.
குறித்த புதைகுழி கடந்த மாதம் தோண்டப்படவிருந்தது.
இந்த நிலையில், டாக்டர். அஜித் தென்னக்கோன் தலைமையில் பத்து சட்ட வைத்திய நிபுணர்கள் குறித்த புதைகுழிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்தனர்.
எனினும், அடையளப்படுத்தப்பட்ட இடம் தொடர்பில் கருத்து முரண்பாடு காணப்பட்டதால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய நிபுணர் குழு பொலிசாருக்கு அறிவுறுத்தி கொழும்பு திரும்பியது.
விசேட பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து வருகை தந்த இந்த சட்ட வைத்திய நிபுணர்கள் குழுவினருடன், காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்து களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தவருமான றவூப் ஏ. மஜீத்,
மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வுப் பிரிவினர், பாதுகாப்புத் தரப்பினர் என பலரும் குறித்த நேரத்திற்கு அங்கு சமூகமளித்தனர்.
குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அடுத்துள்ள அடையாளம் காட்டப்பட்ட இப்புதைகுழிப் பிரதேசத்திற்கு முன்னதாக சமூகமளித்திருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஏ.எப்.எம். ஷிப்லி மற்றும் மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் இந்த சட்ட வைத்திய நிபுணர் குழுவுடன் அங்கே இணைந்து கொண்டனர்.
தனது உறவினர் உட்பட காத்தான்குடி முஸ்லிம்கள் பலர் கடத்தப்பட்டது தொடர்பாகவும், இந்த மனிதப் புதைகுழி தொடர்பாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், அதன் தொடராக களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்திலும் நேரில் ஆஜராகி இப்புதைகுழிப் பிரதேசத்தை அடையாளம் காட்டிய நகர சபை உறுப்பினர் றவூப்.ஏ.மஜீத், சட்ட வைத்திய நிபுணர்கள் குழுவினரிடம் தான் அடையாளப்படுத்திய பிரதேசத்தை மீண்டும் உறுதிப்படுத்தி அடையாளம் காட்டியதுடன், அப்பிரதேசத்தையே தோண்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இச்சமயத்தில் குறுக்கிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி, கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து சட்ட வைத்திய நிபுணர் குழுவினருக்கு விளக்கியதுடன், இதுதொடர்பாக தான் காணாமல் போனோரைப் பற்றி விசாரணை செய்து வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறையிட்டிருப்பதாகவும், பல கட்ட நடவடிக்கைகளை இதுதொடர்பில் மேற்கொண்டு வருவதாகவும்,
கடத்தப்பட்ட உறவினர்கள் பலரையும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வைத்துள்ளதாகவும், ஏற்கனவே அடையாளம் காட்டப்பட்டுள்ள இடத்திற்கும் புறம்பாக அவ்விடத்திலுள்ள மேலும் சில பகுதிகளையும் தோண்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இச்சந்தர்ப்பத்தில் அங்கு சமூகமளித்த மற்றுமொருவர், ஏற்கனவே அடையாளம் காட்டப்பட்ட பகுதிகளுக்குச் சமீபமாக சுனாமியின்போது இறந்த அப்பிரதேச இந்துக்கள் சிலரும் இந்து மத ஆசாரப்படி புதைக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம்களின் புதைகுழியைத் தோண்டுவதை தான் ஆட்சேபிக்கவில்லையெனவும், இந்து மத ஆசாரப்படி புதைக்கப்பட்ட சடலங்களை மீண்டும் தோண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
இவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த சட்ட வைத்திய நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர். அஜித் தென்னகோன் பதிலளிக்கையில்,
வழக்காளி றவூப் மஜீத் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் பிறப்பித்த கட்டளைக்கமையவே அடையாளப்படுத்தப்பட்ட புதைகுழிப் பகுதியைத் தோண்டுவதற்கான ஆரம்பச் செயற்பாடுகளை முன்னெடுக்கவே தாங்கள் இன்று இங்கே வருகை தந்ததாக அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்காளி அடையாளப்படுத்தப்பட்ட இடம் தொடர்பில் இங்கே கருத்து முரண்பாடுகள் காணப்படுவதால் இதுபற்றி பொலிசார் மீண்டும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து தோண்டுவதற்கான இடத்தை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதுடன், அதன் பின்னரே தமது நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 24ம் திகதி இந்த வழக்கு மீண்டும் அழைக்கப்படவுள்ளதால், அதற்கு முன்னதாக பொலிசார் தமது அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தோண்டப்பட வேண்டிய புதைகுழிப் பிரதேசத்தை திட்டமாக அடையாளப்படுத்த வேண்டும் எனவும் சட்ட வைத்திய நிபுணர் குழுவின் தலைவர் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கி அங்கிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfu6.html
எனக்கும் ராஜபக்சவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ’கத்தி’ தயாரிப்பாளர் சுபாஷ்கான் விளக்கம்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 12:26.51 PM GMT ]
விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு லைக்கா நிறுவன அதிபர் நெருக்கமானவர் என்றும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. போராட்டங்களும் நடந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் தமிழ் அமைப்பு தலைவர்களை சந்தித்தனர். ராஜபக்சவுடன் பட நிறுவனத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து சீமான் உள்ளிட்ட பலர் ‘கத்தி’ படத்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் ‘கத்தி’ பட சர்ச்சை குறித்து ‘லைக்கா’ பட நிறுவன அதிபர் சுபாஷ்கான் பேட்டி அளித்தார். அவர், ’’கத்தி படத்தில் தமிழ் விரோத காட்சிகள் எதுவும் இல்லை. ராஜபக்சவுக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எவ்வித தொழில் தொடர்பும் கிடையாது. நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறினேன்.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த 27 வருடமாக தொழில் செய்து வருகிறேன். என் உறவினர்கள் பலர் இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு உள்ளனர். எனவே ‘கத்தி’ பட தயாரிப்பாளரான எனக்கும் ராஜபக்சவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfu7.html
Geen opmerkingen:
Een reactie posten