தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 september 2014

சாமியின் முடிச்சில் சிக்கிக் கொண்ட ஜெயா (படங்கள், வீடியோ இணைப்பு)


கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக கருதலாம். அவரது இந்த பெரும் தோல்விக்கு முக்கியக் காரணம், சுப்பிரமணியம் சாமிதான். காரணம், இவர்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவி்ப்பு வழக்கை முதலில் தொடர்ந்தவர் ஆவார்.

இந்திய அரசியலில் மிகவும் வித்தியாசமான, வில்லங்கமான ஒரு அரசியல்வாதி சாமி. இவர் ஆக்கப்பூர்வமான செயல்களை விட பலரைப் பாதிக்கும் வகையிலான அரசியலைத்தான் இவர் பெரும்பாலும் நடத்தி வந்திருக்கிறார்.

அத்தி பூத்தாற் போல இவரால் சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன - முல்லைப் பெரியாறு அணை வழக்கை உதாரணமாகச் சொல்லலாம்.

நிச்சயம் சாமியை யாருமே குறைத்து எடை போட முடியாது. காரணம், இவர் போட்ட வழக்குளில் பெரும்பாலானவற்றில் இவருக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான் யார் மீதாவது இவர் வழக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் பீதியடைந்து போகிறார்கள்.

யாருக்கு எப்படியோ ஆனால் ஜெயலிதாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியவர் சாமிதான்.

கிட்டத்தட்ட தமிழக அரசியல்வாதிகள் அத்தனை பேருக்குமே இவர் சிம்ம சொப்பனாக திகழ்ந்து வருகிறார். திமுக தொடங்கி அதிமுக வரை யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 1996ம் ஆண்டு திமுக அரசுதான் போட்டது என்றாலும் கூட அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் இந்த சாமிதான்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவரது சொத்து குவிப்பு தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் கோப்புகளாக்கி அப்போதைய ஆளுநரிடம் வழங்கி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரியிருந்தார் சாமி.

உண்மையில் சாமி சேர்த்துக் கொடுத்த அத்தனை ஆதாரங்களுமே வலுவானவை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் பின்னர் வந்த திமுக அரசு வழக்கைப் போட்டது. அந்த வகையில் சாமிக்குத்தான் திமுக நன்றி சொல்ல வேண்டும். அவர் சேகரித்து வைத்திருந்த அத்தனை ஆதாரங்களுமே ஜெயலலிதா வழக்கை மேலும் சிக்கலாக்கி விட்டது என்பதே உண்மை.

உண்மையில் ஜெயலலிதா மீதான பிற வழக்குகளை திமுக அரசுதான் போட்டது. அதை சாமி போடவில்லை. எனவே அந்த வழக்குகளில் ஜெயலலிதா எளிதாக வந்து விட்டார். ஆனால் சாமி போட்ட முடிச்சை அவிழ்க்கத்தான் அவரால் முடியாமல் போய் விட்டது.

ஒரு காலத்தில் ஜெயலலிதா மீது நட்பாகத்தான் இருந்தார் சாமி. ஜெயலலிதாவும் கூட திமுகவுக்கு எதிராக சாமியைத்தான் பயன்படுத்தி வந்தார்.

ஆனால் பின்னர் திடீரென எதிரியாகி விட்டனர் இருவரும். டான்சி ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மூலம் அனுமதி வாங்கிய சாமியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். அதுதான் சாமிக்கும் பெரிய ஹைலைட்டான அரசியல் வெற்றியாகும்.

ஆனால் அதன் பின்னர் அதே வேகத்தில் பல்டி அடித்து மீண்டும் ஜெயலலிதாவுடன் நட்பானார் சாமி. அதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் தூதராகவும் மாறினார் சாமி. வாஜ்பாய் அரசில் ஜெயலலிதா இணைய சாமிதான் முக்கியக் காரணமும் கூட.

தனக்கு எதிராக செயல்பட்டவர் என்பதையும் பாராமல், சாமியின் பிறந்த நாளன்று அவரது கட்சி அலுவலகத்துக்கே நேரில் போய் வாழ்த்தியவர் ஜெயலலிதா. சாமிக்கு போர்ட் ஐகான் காரைப் பரிசாகவும் கொடுத்தார்.

அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் சாமியை நிறுத்தி வெற்றி பெறவும் வைத்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் போயஸ் தோட்டத்தின் ராஜகுரு என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தவர் சாமி. உண்மையில் சாமியை அரசியல் ரீதியாக வளர்த்து விட்டவர் ஜெயலலிதா என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் வாஜ்பாய் ஆட்சியை மிகக் குறுகிய காலத்தில் கவிழ்த்த ஜெயலலிதா மீது கோபம் கொண்டார் சாமி. மீண்டும் இருவரும் எலியும் புலியுமாக மாறினர்.

ஜெயலலிதாவுக்கு எதிராக அதன் பின்னர் தீவிரமாக செயல்பட்ட சாமியை, அதிமுகவினர் போகும் இடமெல்லாம் தூற்றி தாக்க முற்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த சாமியை, அதிமுக மகளிர் அணியினர் புடவையைத் தூக்கி கொடுத்த வரவேற்பு அப்போது அந்த இடத்தில் இருந்தவர்களால் இன்றைக்கும் மறக்க முடியாது.

இந்த வழக்கு குறித்து தீர்ப்புக்கு முன்பு ஏஎன்ஐக்கு சாமி அளித்த பேட்டியில்,

இந்த வழக்கிலிருந்து நிச்சயம் ஜெயலலிதா தப்ப முடியாது. காரணம், இதில் வலுவான ஆதாரங்கள் உள்ளன.

முதல்வர் ஜெயலலிதா தவறு செய்திருப்பது உண்மை. இந்த வழக்கில் எல்லாமே தெளிவாக உள்ளன. எதையும் மூடி மறைக்க முடியாது. அவரால் இனியும் யாரையும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார் சாமி.

மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த சாமி காரணமாகி விட்டார்.
jaya-cm
 jaya-cm-01
jaya-cm-02
27 Sep 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1411854421&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten