இனப்படுகொலையாளியான ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என சட்டசபையில் தைரியமாக தீர்மானம் போட்டதற்காகவா ஜெயலலிதாவுக்கு இந்த தண்டனை என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும் இயக்குநருமான ராஜ்கிரண். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிந்துள்ளதாவது: 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்து, முதல் பிரதமராக நேரு ஐயா பதவி Sற்றதிலருந்து இன்று வரை, மத்தியிலும் மாநிலங்களிலும் ஊழல் வழக்கில் சிக்காத அரசியல்வாதிகளே கிடையாது.
ஆனால், யாருக்குமே வழங்கப்படாத “வக்கிரமான” தண்டனை, தமிழக முதல்வருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு, எந்தவிதமான சூழ்நிலைகளால் தவறுகள் ஏற்பட்டதென்பது ஒரு புறமிருக்க தற்போதைய ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு, அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டிருக்கின்றன.
காவிரிப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும், தமிழக மீனவர் பிரச்சினையிலும், ஓங்கிக் குரல் கொடுத்தது தப்பா? இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கவும், இனப்படுகொலையாளி ராஜபக்சே தண்டிக்கப்படவேண்டும் என்றும், ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் வழியிலான வாழ்வுரிமை வேண்டும் என்றும், சட்டசபையில் தைரியமாக தீர்மானம் போட்டது தப்பா? தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தால் இதுதான் கதி என்பது மாதிரியான மிரட்டல் என்ன வகையான ஜனநாயகம்? தமிழகத்தை என்னவாக்கத் திட்டம்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.