இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத் தண்டனையுடன் 100 ரூபாய் கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசியலில் பல புதுமைகளை, புரட்சிகளைப் படைத்த ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பினை எதிர்பார்த்திராக அதிமுகவினர் கொத்தளித்துள்ளனர்.
தமிழகமெங்கும் கடையடைப்பு… தீக்குளிப்பு.. என பதற்ற நிலையில் உள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இலங்கையிலும் இந்தப் பதற்றம் நிலவுகின்றது.
ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தபோது, நாட்டினரின் கவனத்தை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் ஈர்த்தவர். எம்.ஜி.ஆரை. மட்டுமே முதல்வராகப் பார்த்து பூரித்திருந்த அதிமுகவினருக்கு ஜெயலலிதா. அடுத்த எம்.ஜி.ஆர். போல தோன்றினார்.
முதல் பெண் முதல்வர் தமிழகத்தின் முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வர், இளம் வயது முதல்வர் என்ற பெருமைகளும் ஜெயலலிதாவையே சாரும்.
1991ம் ஆண்டு ஜூலை 24ம் திகதி முதல்வர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதா 1996ம் ஆண்டு மே 12ம் திகதி வரை அதில் நீடித்தார்.
இந்த ஆட்சியின் ஆரம்ப காலங்கள் உண்மையிலேயே அருமையானதாக இருந்தது என்பது அவரது எதிரிகளே கூட ஒப்புக் கொள்வார்கள்.
ஈழத்தமிழர்களின் நலனிகளிலும் அக்கறை செலுத்தியுள்ளார். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தவர் ஜெயலலிதா. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச குழுவினர் இந்தியாவில் விசாரணை நடத்த விசா வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும் ஈழத்தமிழர்களை ஆதரித்த அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார். அதுமட்டுமின்றி, இலங்கையின் மனித உரிமைகள் மீறல்களையும் கண்டித்து தமிழக சட்டப் பேரவையில் 4 தீர்மானங்களையும் நிறைவேற்றியிருந்தார்.
மத்திய அரசாங்கத்தில் அறுதிப் பெரும்பான்மையின்றி ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்திற்கு, இலங்கை தொடர்பாக ஜெயலலிதாவின் கண்டிப்புக்களும், அழுத்தங்களும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்து. இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்து.
அது மட்டுமன்றி இலங்கை இராணு வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் இந்திய அரசாங்கத்திற்கு ஜெயலலிதா நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தார்.
இது பிராந்திய பாதுகாப்பு முறைகளை கற்றுக்கொள்ளும் இலங்கை இராணுவத்தினருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கடுப்பில் தான் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறான புகைப்படங்கள் வெளியாகின.
ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை இலங்கை அரசாங்கத்திற்கு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகுந்த சந்தோசத்தினையே அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இது இவ்வாறிருக்கட்டும்..
இன்று பெங்களூர் சிறையில் ஜெயலலிதா..!
முதல்முறை முதல்வராக கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரையில் முதலமைச்சர் பதவியில் இருந்த ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, 1996ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
27-6-1996 அன்று அவரது முறைப்பாட்டினை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் திகதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
வழக்கு குறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28ம் திகதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் திகதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார்.
இன்று சொத்துக் குவிப்பு மீதான தீர்ப்பு 1000 பங்கங்களில் வெளியானது. தீர்ப்பின் இறுதி வடிவத்தை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவே தனது கைப்பட எழுதியுள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் “முதல்” முதல்வர் என்ற பெயரை ஜெயலலிதா எடுத்து சிறப்பு கவனம் பெற்றுள்ளார்.
18 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் அம்மா குற்றவாளியாக இருக்க மாட்டார் என்ற அதிமுகவினரின் பயங்கர நம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVhoy.html
Geen opmerkingen:
Een reactie posten