[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 02:20.20 PM GMT ]
சுவிஸில் வசிக்கும் திருநாவுக்கரசு தம்பதிகளின் புதல்வன் தாஜகன், தனது 16வது பிறந்தநாள் மகிழ்வை கிளிநொச்சி, பாரதிபுரம் உடன்பிறவா சொந்தங்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சுவிஸ் சூரிச் சிவன்கோவில் சைவ தமிழ் சங்கம், அன்பே சிவம் அமைப்பூடாக இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரம் ஒக்ஸ்போட் கல்வி நிலையத்தில் இன்று நடைபெற்ற எளிமையான நிகழ்வில், தாஜகனுக்கு சகோதர மாணவர்கள் கேக் வெட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஒக்ஸ்போட் கல்வி நிலையத்தின் நிர்வாகி கேதீஸ், அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் குமணன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சார்பாக அவரது செயலாளரும் த.தே.கூட்டமைப்பின் மாவட்டக்கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன்,
முன்னாள் பாரதி வித்தியாலயத்தின் அதிபரும் சமூக சேவையாளருமான இராஜேந்திரம், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் பாலாசிங்கசேதுபதி, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் தலைவரும் பச்சிலைப்பள்ளி பிரதேசபையின் உறுப்பினருமான சுரேன், இளைஞர் அணியின் செயலாளர் சர்வானந்தா, கல்வி நிலைய ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புலம்பெயர் மண்ணில் வாழ்ந்தபோதும் உணர்வால், தாயகத்திலேயே வாழ்வதாய் வாழும் உறவுகளுள் சுவிஸ் திரு திருமதி. திருநாவுக்கரசு தம்பதிகளின் செல்வப் புதல்வனின் இந்த பிறந்தநாள் நிகழ்வும் நல்ல முன்னுதாரணமான செயற்பாடாகுமென வாழ்த்தியோர் மனமகிழ்வுடன் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாரதிபுரம் ஒக்ஸ்போட் கல்வி நிலைய மாணவர்கள் தாஜகனுக்கு தம் வாழ்த்துப் பொதியினையும் அனுப்பி வைத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgq1.html
பொதுபல சேனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் பேரவை ஜனாதிபதியிடம் முறைப்பாடு
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 03:04.26 PM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
969 பௌத்த கடும்போக்குடைய அமைப்பின் தலைவர் அசீன் விராதுவை இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என முஸ்லிம் பேரவை கோரியிருந்தது.
அசீன் விராது தேரர் இலங்கைக்கு விஜயம் செய்வதனை தடுக்க முஸ்லிம் பேரவைக்கு உரிமை கிடையாது என ஞானசார தேரர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு பேருவளை அளுத்கம பிரதேசங்களில் ஏற்பட்ட அவலங்களையும் கருத்திற்கொள்ளாது கலகொடத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சில கடும்போக்குடைய தரப்பினர் தொடர்ச்சியாக குரோத பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.
புனித குர்ஆன் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பு, பிழையானதும் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றது.
புனித குர்ஆன் தொடர்பிலான ஞானசார தேரரின் விமர்சனங்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றிலும், பௌத்த சாசன அமைச்சின் சமய விவகாரப் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் பேரவை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமது அமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே ஞானசார தேரர் கருத்து வெளியிட்டு வருவதாக முஸ்லிம் பேரவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgq2.html
Geen opmerkingen:
Een reactie posten