பதினெட்டு வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு ஒருவழியாக தீர்ப்பு வழங்கப்பட்டாகிவிட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இத்தகைய ஒருதீர்ப்பு வரும் என்பதை எல்லோரும் எதிர்பார்த்தே இருந்தனர்.
ஜெயலலிதா அம்மையார் உட்பட.ஆனால் இந்திய திருநாட்டில் ஊழல் குற்றங்கள் இப்படி நிரூபிக்கப்பட்டு தண்டனையும் அளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பபடுவது அரிதிலும் அரிது என்பதால் இந்த தீர்ப்பு ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியதை மறுக்கமுடியாது.
தீர்ப்பு அளிக்கப்பட்டு எல்லோரும் "நீதியின் முன் அனைவரும் சமம்","நீதி வென்றுவிட்டது" போன்ற கருத்துகளை சொல்லிக்கொண்டு இருக்கும் அதே தருணத்தில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் சட்ட நிபுணருமான ராம் ஜெத்மலானி இந்த தீர்ப்பை வெளிப்படையாக விமர்சித்தும் இருக்கிறார்.
பாய்ந்தடித்து கொண்டு கர்நாடகா அரசின் முதலமைச்சர் சீதா ராமையா 'இந்த தீர்ப்புக்கும் கர்நாடக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தும் விட்டார்.(நம்புகின்றோம்)
இதற்கிடையில் ஜெயலலிதா சிறைக்குள் களி உருண்டையும்,சாம்பாரும் சாப்பிட்டார், இல்லை இல்லை ஆனந்த பவனம் உணவு விடுதியில் இருந்துதான் அவருக்கு சாப்பாடு செல்கிறது என்ற நேரலை செய்திகளை தருவதில் ஊடகங்கள் வெகுவாக போட்டியில் இறங்கியுள்ளன.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சட்டசபை உறுப்பினர்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு அடுத்த முதல்வர் ஆகின்றார். மறக்காமல் கையில் பெரிய சைஸ் ஜெயலலிதா அம்மையார் படமும் வைத்தபடியே போஸ் கொடுக்க அவர் தவறவில்லை.(நவீன பரதன்??)
ஆனால் இந்த ஆக்கத்தின் நோக்கம் ஜெயலலிதா இல்லாத அரசியல் தமிழகத்திலும் அதனை அண்டியும் (இலங்கைதீவிலும்) எப்படி இருக்கும் என்று ஒரு பறவைப்பார்வை பார்ப்பதுதான்..
முதலில்,ஜெயலலிதா அம்மையார் இல்லாதது யாருக்கு மகிழ்வு என்று பார்த்தால், முதல் மகிழ்வு கருணாநிதிக்கு தான்.
எப்படி எம்.ஜி.ராமச்சந்திரன் உயிருடன் இருக்கும் வரைக்கும் தமிழக அரியணையில் ஏறவே முடியாது என்ற நிலை தோன்றி இருந்ததோ அவ்வாறே இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஜெயலலிதா அம்மையார் இருக்கும் வரைக்கும் தமிழக அரியணை கருணாநிதிக்கு மட்டுமல்ல திமுகவுக்குகூட கிடையவே கிடையாது என்ற நிலையே உருவாகி இருந்தது.
பிறகு, தனித்து நின்றே ஜெயலலிதா அம்மையாரின் அதிமுக 44.3 வீத வாக்குகளை பெற்றது தமிழக வரலாற்றிலேயே முதன்முறை. அதிலும் அதிமுக வுக்கும் திமுக வுக்கும் வித்தியாசம் ஏறத்தாழ 20 வீதம். நினைத்தே பார்க்க முடியாது என்ற நிலையில் கருணாநிதிக்கு இது மகிழ்வு. குதூகலம்.(இந்த பேருவகையை 2ஜி அலைக்கற்றை இடைபுகுந்து குழப்பாமல் விட்டால் சரி)
அடுத்து,பாஜக வுக்கு ஜெயலலிதா அம்மையார் இல்லாத தமிழகம் மிகத்தேவை. பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியீட்டிய பாஜக அடுத்த இரண்டரை மாதங்களுள் வடக்கு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் தமது பலமான மாநிலங்களில்கூட மண்கவ்வி இருப்பது தென்னிந்திய மாநிலங்களின் மீது அவர்களுக்கு ஒரு பெரிய கவனம் வந்துள்ளது.
இம்முறை தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே ஒரு பாஜக பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ராதாகிருஸ்ணன் இந்த தீர்ப்பை பற்றி சொல்லும் போது, தமிழகத்தில் பாஜக வின் எதிர்காலம் பிரகாசமாக இப்போது தோன்றுகிறது என்று சொன்னதுடன் நிற்காமல் இந்த தீர்ப்பு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி இருப்பது இனி பாஜக தமிழக அரசியலில் ஒரு ரவுண்ட் வர உள்ளதையே காட்டுகின்றது.
இரண்டாவதாக, ஆளும் கட்சி என்ற முறையில் பாஜகவுக்கு ஜெயலலிதா அம்மையார் ஏராளம் இக்கட்டுகளை ஏற்படுத்தி வந்துள்ளதால் ஜெயலலிதா அம்மையார் இல்லாத ஒரு தமிழகத்தையே அவர்கள் விரும்புகிறார்கள்.
உதாரணத்துக்கு என்னதான் பாஜக கட்சி சிங்களத்துடன் கைகோர்த்து உறவாட முனைந்தாலும் அதற்கு வேட்டு வைத்து அதிரடியான தீர்மானங்களை சட்டசபையில் நிறைவேற்றி பாஜக வின் வெளியுறவு கொள்கையை நெளிய வைத்துள்ளது பாஜக வுக்கு அவ்வளவு உவப்பான சமாச்சாரம் இல்லை.
மேலும், தினமும் சிங்கள கடற்படையால் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காக ஜெயலலிதா அம்மையார் முழுதான முரண்போக்கையே பாஜக வின் மத்திய அரசுடன் கடந்த காலத்தில் தொடர்ந்து வந்திருக்கிறார்.
ஏன், இந்த தீர்ப்பு வருவதற்கு முதல்நாள்கூட இந்திய ரெயில்வே அமைச்சர் ' ஜெயலலிதா ஒருவிதத்தில்கூட ஒத்துழைப்பு தருகிறார் இல்லை' என்று சொல்லி இருப்பது ஜெயலலிதா பாஜக உடன் ஒருவிதமான முரண்போக்கையே தொடர்ந்திருக்கிறார்.
அதனால்தான் ஜெயலலிதாவின் மீதான இன்னொரு வழக்கான 1990களில் மூன்று வருடங்கள் வருமானவரி தாக்கல் செய்யவில்லை என்ற வழக்கில் வருகின்ற புதன்கிழமை சென்னை பொருளாதார குற்ற நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று அறிவித்திருப்பது பாஜக மத்திய அரசு ஜெயலலிதா மீது நெருக்குதல்களை ஆரம்பித்து விட்டிருந்ததையே காட்டுகின்றது.
பொதுவாக வருமானவரி வழக்கு தாக்கல் செய்யாது விட்டால் பின்னர் அதற்கான அபராத தொகையை கட்டும்படி கேட்டு கட்டினால் அத்துடன் அது முடிந்துவிடும். ஆனால் இப்போது சென்னை நீதிமன்றத்தில் இதனை வழக்காக மத்திய நிதிஅமைச்சு ஏற்படுத்தி இருப்பது நெருக்குதலை ஜெயலலிதாவுக்கு கொடுக்க மோடி அரசு ஆரம்பித்துவிட்டது என்பதையே காட்டியது.
மேலும் தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சேர்ந்த பலர் (ஓடிட்டர் ரமேஸ் உட்பட) வெட்டிக் கொல்லப்பட்டதில் பாஜக தலைமை ஜெயலலிதா மீது பலத்த விமர்சனங்களை வைத்ததையும் மறந்துவிட முடியாது.
காங்கிரசைவிட 8வீதம் அதிகமான வாக்குகளை பெற்று மூன்றாவதாக வந்துள்ள பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற ஜெயலலிதா இல்லாத தமிழகம் வேணும் அவர்களுக்கு.
இன்னும் ஒரு முக்கிய தரப்புக்கு ஜெயலலிதா இல்லாத தமிழகம் தேவை. அவர்கள் இப்போதைய நீதிமன்ற தீர்ப்பை வெகுவாக களிப்புடன் நோக்குகிறார்கள். அது சிங்கள தேசம்.
சிங்களத்துக்கு எதிரான பொருளாதார தடை,பொது வாக்கெடுப்பு என்று ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானங்களை அவர் அமுல் நடாத்துகின்றாரோ இல்லையோ அவை சிங்கள ஆட்சியாளர்க்கும், சிங்கள பொதுசனத்துக்கும் பெரிய ஒரு தொண்டையில் சிக்கிய முள்போலவே இருக்கிறது..
சிங்களத்துக்கு அருகில் உள்ள ஒரு மாநிலம் ஏறத்தாழ போர் பிரகடனம் போன்ற தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றுவது ' சுற்றிவர கடல், இன்னொரு புறம் தமிழர்கள் என்று' ஒடுங்கிப்படுத்திருந்த துட்டகைமுனுவின் நிலையை மீள நினைவுக்கு கொண்டு வந்திருக்கும்.
என்னதான், அது ஒரு மாநிலம், அதன் சட்டத் தீர்மானங்கள் எதுவும் சிங்களத்தை பாதிக்காது என்று சொன்னாலும்கூட பங்களாதேஸ் விடுதலையின் போது மேற்கு வங்க மாநிலத்தின் தீர்மானமே பின்னர் இந்தியாவை, இந்திரா பிரியதர்சினியை படை அனுப்பி வங்காள விடுதலைக்கு வித்திட்டது என்ற அடிப்படையையும் மறக்க முடியாதல்லவா சிங்களத்தால்.
சர்வதேச நெருக்குதல்களைகூட சுலபமாக ஊதித்தள்ளி நடைபோடும் சிறீலங்காவுக்கு ஜெயலலிதா அண்மைக்காலமாக சிங்கள தேசம் மீது காட்டும் எதிர்ப்பு உணர்வு ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.
ஒருகாலத்தில் சரத் பொன்சேகா போன்ற இனக்கொலையாளிகள்கூட 'தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள்' என்று விமர்சித்துவிட்டு செல்லலாம் என்ற நிலைமையே இருந்தது.
ஆனால் ஜெயலலிதா கடும்போக்கை சிங்களம் மீது செலுத்த தொடங்கிய பிறகு தமிழகம் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பதில் அதீத எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதை காணமுடிகிறது.
அப்படி இருந்தும் சீண்டிப் பார்த்து பலத்த மூக்குடைவுகளும் சிங்களத்துக்கு ஏற்பட்டதுண்டு. அண்மைய சிறீலங்கா பாதுகாப்பு இணையத்தில் ஜெயலலிதா பற்றிய கருத்தும் படமும் தமிழகத்தில் ஏற்படுத்திய எதிர்ப்பு-கோப அலையை சொல்லலாம்.
நிச்சயமாக சிங்கள தேசத்தின் ஆளும்-எதிர் கட்சிகள் எதுவுமே ஜெயலலிதா போன்ற ஒரு சிறீலங்கா எதிர்ப்பாளர் பக்கத்து தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதை விரும்பவே மாட்டார்கள்.
தீர்ப்பு வெளிவந்து இருபத்துநாலு மணித்தியாலத்துக்கிடையில் சிறீலங்கா மீன்பிடி அமைச்சர் 'இனிமேல் தமிழக மீனவர்கள் பற்றி மத்திய அரசுடன் சுமுகமாக கதைக்கலாம் என்று சொல்லி இருப்பதும்
சிறீலங்கா ஊடகங்கள் மகிழ்வுடன் செய்தி வெளியிட்டு இருப்பதும் இதனையே காட்டுகின்றது.
சிறீலங்கா ஊடகங்கள் மகிழ்வுடன் செய்தி வெளியிட்டு இருப்பதும் இதனையே காட்டுகின்றது.
இங்கேதான் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும்.
எமது பொது எதிரியும் இனக்கொலை அரசுமான சிங்கள அரசுக்கு ஒரு தீவிர எதிர்ப்பாளர் ஜெயலலிதா அம்மையார். அது எமக்கு மிக முக்கியம்.
ஜெயலலிதா 2009 யுத்தம் இறுதிக்கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் போது, இனஅழிப்பு நடந்து கொண்டிருக்கும் போது 'யுத்தம் என்றால் இதுவெல்லாம் சகஜம்' என்று அறிக்கைவிட்டது முதல் ஒரிரு நாட்களுக்கு முன்னர்கூட 'விடுதலைப் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து' என்று நீதிமன்றில் கூறியது வரை எதனையும் இந்த இனம் மறந்துவிடவில்லை.
ஆனாலும், இப்போதைய நிலையில் சிங்கள தேசத்துடன் அனைவரும் ஒருவிதமான வெல்வெட் துணியால் தட்டும் அணுகுமுறையையே சர்வதேசம் செய்துவரும் நிலையில் தடாலடியாக என்றாலும்கூட நிறைவேற்ற முடியாதவை என்றாலும்கூட 'ராஜபக்சவை தண்டிக்க வேண்டும்' என்பது போன்ற தீர்மானங்களை ஏழு கோடி மக்களை கொண்ட ஒரு மாநிலம் ஏகமனதாக நிறைவேற்றுகிறது என்றால் அத்தகைய ஒரு ஆளாக ஜெயலலிதா தேவைதான்.
தமிழகத்தில் தோன்றும் மாபெரும் மக்கள் எழுச்சிதான் எமது மக்களின் எழுச்சிக்கும் அதனூடாக விடுதலைக்கும் இப்போதைக்கு இருக்கின்ற ஒரே வழி. அதற்காக வேனும் சிங்களத்துக்கு முழுக்க முழுக்க எதிரான உணர்வு கொண்ட ஒரு ஆட்சி தமிழகத்தில் தேவை. இப்போதைக்கு அது ஜெயலலிதா தான்.
இந்த நீதிமன்ற தீர்ப்பை ஒருவேளை அடுத்த தீர்ப்புகள் நீக்கி விடலாம். ஜெயலலிதாவே மீண்டும் முதல்வராகவும் வரவும் கூடும். அப்படி வந்தால், அவர் இப்போதைய தன் நிலைப்பாடுகளை ( ஈழத்தமிழர் விடுதலை சம்பந்தமாக) மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு.
எப்படி 2013 மார்ச் 8ம் திகதி ஒரு மாணவர் எழுச்சி தமிழீழ மக்களுக்கு ஆதரவாக எழுந்து தமிழகமே உணர்வெழுச்சி கொண்டதுபோல இனியும்கூட தமிழக உணர்வான மாணவர்கள் மேற்கொள்ளும் போது வரும்காலத்தில் ஜெயலலிதா ஆதரவளிக்க வேண்டும்.
தமிழகத்தில் மூன்று பத்தாண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களுக்கு உரிய உரிமைகளும்,சமனான கல்வி உரிமையும் வழங்க வேண்டும்.
தமிழக சட்டமன்றில் நிறைவேற்றிய தீர்மானங்களை அமுல்படுத்த, அல்லது அதனை ஏற்றுக்கொள்ள வைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
சிறைகளிலும், கட்டாய தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் உறவுகளை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும்.
ச.ச.முத்து
ilamparavai@hotmail.com
ilamparavai@hotmail.com
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhv0.html
Geen opmerkingen:
Een reactie posten