தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

சர்வதேச விவகாரங்களைக் கையாள தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நியமனம்!

அளவெட்டியில் மூன்று இளைஞர்கள் மீது வாள்வெட்டு
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 03:00.22 AM GMT ]
அளவெட்டி பகுதியில் இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மல்லாகம் நீதிமன்றம் வீதியைச் சேர்ந்த சந்திரசேகரம் கொலின்ஸ் (வயது- 20), தேவராசா ஜெகநாதன் (வயது- 23) ஆகியோர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு இளைஞரான சின்னராசா யூட் அன்ரனி (வயது 23) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர்கள் நேற்று இரவு பண்டத்தரிப்பில் இடம்பெற்ற தாச்சிப் போட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.
இவர்களை மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த நால்வர் கொண்ட குழு ஒன்று வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
எனினும் இந்த சம்பவத்துக்கான காரணம் தெரியவரவில்லையென கூறிய தெல்லிப்பழைப் பொலிஸார், மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhw1.html

சர்வதேச விவகாரங்களைக் கையாள தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நியமனம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 02:39.34 AM GMT ]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று திருகோணமலையில் இடம்பெற்றது.
திருகோணமலை நகரசபை பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், கட்சியின் செயற்பாடுகளை மாகாணம், மாவட்டம் மற்றும் பிராந்திய ரீதிகளில் மேம்படுத்துவது பற்றியும் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது அனைவரினதும் விருப்பத்துக்கிணங்க உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்காக அரசியல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் குழுவிற்கு தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் தலைமை தாங்குகிறார்.
குழுவின் உறுப்பினர்களாக, கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி., பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா, எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாணசபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த அரசியல் குழு கூடுகின்ற வேளைகளில் தேவையேற்படும்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி ஆகியோரையும் இணைத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரினதும் விருப்புக்கிணங்க இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக மாவட்ட ரீதியில் உப மாநாடுகளை நடத்துவது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முதலாவது உப மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், பொன்.செல்வராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhw0.html

Geen opmerkingen:

Een reactie posten