தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்து சென்னையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது,
சென்னை வளசரவாக்கம் அடுத்த ஏ.பி.என். பிரதாப் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அமுதா, அன்பரசன், தேவி என 3 குழந்தைகள் உள்ளனர். அ.தி.மு.க தொண்டரான வெங்கடேசன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.

ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பை அறிவதற்காக நேற்று மாலை அவர் வீட்டில் டெலிவிஷனில் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வீட்டில் இருந்த பெற்றோல் கேனை எடுத்துக் கொண்டு, வெளியே ஓடி வந்த அவர் ‘அம்மா வாழ்க’ என்று கூறியபடி உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் வேதனையில் அவர் அலறினார். இதைக் கண்டதும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவில் அவர் இறந்தார்.
இதுகுறித்து கே.கே. நகர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று தீர்ப்பு வெளியானதை டெலிவிஷனில் பார்த்த விருகம்பாக்கம் தசரதபுரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் பாஸ்கர் (30) என்பவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அருகில் இருந்த அ.தி.மு.க. வினர் மற்றும் பொலிசார் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினார்கள்.
எங்களையும் சிறையில் போடுங்க… அமைச்சர்கள் பிடிவாதம்
சொத்து குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின்பு ஜெயலலிதா மாலை 5.20 மணிக்கு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அங்கு வந்திருந்த தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என அனைவரும் சிறை வாசலில் திரண்டிருந்தனர்.
சோகத்தில் இருந்த அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம், ‘அம்மாவே உள்ள போயிட்டாங்க, எங்களையும் சிறையில் போடுங்க‘ என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கோகுல இந்திரா, தரையில் அமர்ந்து அழுதார். பல அமைச்சர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி நின்றனர். நீண்ட நேரமாக கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கோஷமிட்டு கொண்டிருந்ததால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்களை அங்கிருந்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஸ் இல்லாத அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு: பாஸ் இல்லாத யாரும் நீதிமன்றம் அருகிலேயே அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அமைச்சர் கள் அனைவரும் பெங்களூரில் முகாமிட்டிருந்தனர். நீதிமன்றம் அருகில் செல்ல பாஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ரமணா உட்பட 7 அமைச்சர்கள் மற்றும் ஈரோடு மேயர் மல்லிகா ஆகியோரிடம் பாஸ் இல்லை. அவர்களை பெங்களூர் போலீசார் நீதிமன்றம் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. இவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் பாஸ் இல்லாமல் யாரையும் அனுமதிக்கமுடியாது என போலீசார் மறுத்துவிட்டனர். இந்நிலையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புக ழேந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டு பாஸ் இல்லாத அமைச்சர்களை உள்ளே அழைத்து சென்றார்.
“ஜெயாவுக்கு ஜெயில்”: சுப்பிரமணியன் சுவாமி
“ஜெயலலிதாவுக்கு ஜெயில்” என்றால் ‘ஜெஜெ’ என்று பொருள் என சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, தற்போது ‘ஜெ.ஜெ’ என்ற எழுத்துக்களுக்கு புது விளக்கத்தினை அளித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சுப்பிரமணிய சுவாமியின் டுவீட், பரபரப்பை ஏற்படுத்தியது.
நல்ல நேரம்… ராகுகாலம்… எமகண்டம்
பார்த்தும் ஜெ.வுக்கு எதிராக வந்த தீர்ப்பு
ஜெயலலிதாவிற்கு பாதகமான தீர்ப்புதான் வரும் என்று ஏராளமான ஜோதிடர்கள் அறிவித்தனர். ஒருசிலர் சாதகமான தீர்ப்பு வரும் என்று கூறினார். எனினும் ஜெயலலிதாவின் ஜோதிட நம்பிக்கை பொய்த்துப்போனது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது.
சிம்மராசிக்கு பாதகம்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிம்ம ராசி, மிதுன லக்னம். அந்தவகையில், ஜெயலலிதாவின் ஜாதகம் வலிமையும் வல்லமையும் கொண்டதாக இருக்கிறது. இன்றைய கோச்சார நிலவரப்படி ராசிக்குரிய குரு 6, 8, 12-ஆம் இடத்துக்கு வருவது சிறப் பான அம்சம் கிடையாது. என்று ஜோதிட சிகாமணி டி.வி.ராஜாசெந்தில்குமார் தெரிவித்திருந்தார்.
பதவியிழப்பு, அவமானம்
இதேவேளை, சிம்ம ராசி, மக நட்சத்திரம் கொண்ட முதல்வர் ஜெயலலிதாவின் தசா புக்தி எப்படிப்பட்டதாக இருந்தாலும் கோச்சாரம் என்பது சிம்ம ராசிக்கு எதிர் மறையாகவே இருக்கிறது. சிம்ம ராசிக்கு 12-ல் குரு வந்துள்ளார். இது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். புராணத்தில் ராவணனின் ராசிக்கு குரு 12-ல் வந்த போதுதான் ராவணன் பதவிகளை இழக்க நேர்ந்தது. முடிதுறந்தான் ராவணன். அவமானப்பட்டான் என்று “அதிர்ஷ்டம்’ சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
சனியால் கெடுதல்
அதேபோலத்தான் 12-ல் உள்ள குரு, இந்த ராசிக்குரியவருக்கும் கெடுதலையும் அவமானத்தையும் ஏற்படுத்துவார். மேலும், சிம்ம ராசிக்கு கடந்த ஏழரை நாட்டு சனியில் எல்லாவிதமான யோகங் களையும் கொடுத்துவிட்டார். அடுத்து வரும் சனிப்பெயர்ச்சி, கொடுத்த யோகங்களுக்கு எதிர்மறையாகத்தான் கொடுப்பார். இந்த சனிப்பெயர்ச்சியானது 2014 டிசம்பரில் நடக்கவிருக்கிறது. அப்போது ராசிக்கு 4-ல் அமர்ந்து ஜென்ம நட்சத்திரத்தை சனி பார்க்கும் காலத்தில் மாபெரும் கெடுதலையே செய்வார் என்றும் கூறியுள்ளார். சனியின் இந்த ஆக்ரோஷம், சனிப் பெயர்ச்சி நடக்கும் டிசம்பருக்கு 3 மாதத்திற்கு முன்பாகவும் காட்டும் அல்லது சனிப் பெயர்ச்சி நடந்த பிறகும் காட்டலாம். ஆகவே, சுருங்கச் சொன்னால் சிம்ம ராசிக்கு 4-ல் வரும் சனியும் 12-ல் உள்ள குருவும் பதவியில் இருப் பவர்களை நீடிக்க விடமாட்டார்” என்று கூறியுள்ளார் ஜோதிடர் சுப்ரமணியம்.
கைவிட்ட ஜோதிட நம்பிக்கை
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கோவில்களில் யாகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. நல்லநேரம், ராகுகாலம், எமகண்டம் பார்த்துதான் அவர் நீதிமன்றத்திற்கே கிளம்பினார். ஆனால் அந்த நம்பிக்கைகள் எதுவுமே ஜெயலலிதாவிற்கு கை கொடுக்கவில்லை.
15 நிமிடத்திலேயே தீர்ப்பை சொல்லிய நீதிபதி: மாலை வரை இழுத்தடித்த ஜெயா தரப்பு!
ஜெயலலிதா நீதிமன்றத்துக்குள் சமூகமளித்து 45 நிமிடத்திலேயே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 பேரும் குற்றவாளிகள்…
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் காலை 11 மணிக்கெல்லாம் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றுக்குள உள்ளே சென்றனர். தீர்ப்பை வாசிக்க தொடங்கிய நீதிபதி அடுத்த 15 நிமிடங்களில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்துவிட்டார்.
1 மணிக்கு தீர்ப்பு என சொலில் ஜெயாவின் சட்டத்தரணிகள்
தண்டனை விவரத்தையும் 12 மணிக்குள்ளாக சொல்லி முடித்துவிட்டார். ஆனால் உடனடியாக தண்டனை விவரத்தை ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களிடம் வெளியிடாமல் பகல் 1 மணிக்கு தீர்ப்பு என தெரிவித்துள்ளனர்.
ஜாமீன் கேட்டனர்…
இந்நிலையில், அதிமுக சட்டத்தரணிகள், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நான்காண்டு தண்டனையை 2 ஆண்டுகளுக்கும் குறைவாக குறைக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார். இதற்கு உடல் நலக்குறைவை காரணமாக எடுத்துரைத்துள்ளார். மேலும் ஜாமீன் வழங்கவும் ஆவண செய்ய கேட்டுள்ளார். இதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்ப்பு தெரிவிக்கவே, அது தொடர்பான வாதம் நடந்துள்ளது.
உணவு இடைவேளைக்கு பிறகு உறுதி காட்டிய நீதிபதி…
இந்த வாதம் நடந்தபோதுதான் உணவு இடைவேளைக்கு நீதிபதி விட்டுள்ளார். இதன்பிறகு, உணவு இடைவேளைக்கு பிறகு, 4 ஆண்டு சிறை தண்டனையை குறைக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்த நீதிபதி, ஜாமீனும் வழங்க முடியாது என்று மறுத்துவிட்டார். வழக்கு நடைபெற்றபோது நீதிமன்றில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றுக்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்..
தீர்ப்புக்கு முன்னரே ஜெயாவுக்கு சிறைக்கூடங்கள் தயார்!
நெஞ்சுவலி என்று தெரிவிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோன்று சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேவேளை தனக்கு நெஞ்சுவலிப்பதாகவும் மயக்கமாக இருப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். இதனை அடுத்து ஜெயலலிதாவுக்கு இருதயநோய் மற்றும் நீரிழிவு நோய் இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தீ்ர்ப்பளித்ததோடு தனது கடமை நிறைவு பெற்றதாகக் கூறிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தேவைப்படும் பட்சத்தில் சிறைச்சாலை மருத்துவமனை டாக்டர்களிடம் சோதனையை மேற்கொள்ளலாம் என்று கூறினார்.
இந்நிலையில் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறைச்சாலை டாக்டர்களினால் மருத்துவ, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மருத்துவ சோதனையை மேற்கொண்ட டாக்டர்கள் நால்வரும் நலமாக இருப்பதாகவும். எனவே, சிறைச்சாலை வைத்தியசாலையில் தேவையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதேவேளை, நேற்று முன்தினமே பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் இவர்களுக்கான சிறைக்கூடங்கள் தயார் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கர்நாடகாவில் தற்பொழுது தசரா பண்டிகை பரந்த அளவில் கொண்டாடப்பட்டு வருவதால் 5 தினங்களுக்கு நீதிமன்றத்துக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீதிமன்ற செயற்பாடுகள் இடம் பெறமாட்டாது. எனவே மேற்படி ஜெயலலிதா உட்பட நால்வரும் மேல் நீதிமன்றில் பிணைகோர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, மேல் நீதிமன்றில் பிணை கோரினாலும் குறைந்தபட்சம் 10 தினங்களாவது மேற்படி நால்வரும் சிறைச்சாலையிலேயே கழிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அ.தி.மு.க.வினர் கண்ணீர் விட்டு அழுதனர்.
சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது. பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து வரவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி பிணை பெறும் வரை இந்த சிறையில் தான் ஜெயலலிதா உட்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சுப்பிரமணிய சுவாமி போட்ட வலையில்
சிக்கிக்கொண்ட ஜெயலலிதா
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகக் கருதலாம். அவரது இந்த பெரும் தோல்விக்கு முக்கியக் காரணம், சுப்பிரமணிய சுவாமிதான். இவர்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவி்ப்பு வழக்கை முதலில் தொடர்ந்தவர் ஆவார்.
இந்திய அரசியலில் மிகவும் வித்தியாசமான, வில்லங்கமான ஒரு அரசியல்வாதி சாமி. நிச்சயம் சாமியை யாருமே குறைத்து எடை போட முடியாது. காரணம், இவர் போட்ட வழக்குகளில் பெரும்பாலானவற்றில் இவருக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான் யார் மீதாவது இவர் வழக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் பீதியடைந்து போகிறார்கள்.
யாருக்கு எப்படியோ? ஆனால் ஜெயலிதாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியவர் சாமிதான்.
கிட்டத்தட்ட தமிழக அரசியல்வாதிகள் அத்தனை பேருக்குமே இவர் சிம்ம சொப்பனாக திகழ்ந்து வருகிறார். தி.மு.க. தொடங்கி அ.தி.மு.க. வரை யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 1996ம் ஆண்டு திமுக அரசுதான் போட்டது என்றாலும் கூட அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் இந்த சாமிதான்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவரது சொத்துக் குவிப்பு தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் கோப்புகளாக்கி அப்போதைய ஆளுநரிடம் வழங்கி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரியிருந்தார் சாமி.
உண்மையில் சாமி சேர்த்துக் கொடுத்த அத்தனை ஆதாரங்களுமே வலுவானவை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் பின்னர் வந்த தி.மு.க. அரசு வழக்கைப் போட்டது. அந்த வகையில் சாமிக்குத்தான் தி.மு.க. நன்றி சொல்ல வேண்டும். அவர் சேகரித்து வைத்திருந்த அத்தனை ஆதாரங்களுமே ஜெயலலிதா வழக்கை மேலும் சிக்கலாக்கி விட்டது என்பதே உண்மை.
உண்மையில் ஜெயலலிதா மீதான பிற வழக்குகளை தி.மு.க. அரசுதான் போட்டது. அதை சாமி போடவில்லை. எனவே அந்த வழக்குகளில் ஜெயலலிதா எளிதாக வந்து விட்டார். ஆனால் சாமி போட்ட முடிச்சை அவிழ்க்கத்தான் அவரால் முடியாமல் போய் விட்டது.
ஒரு காலத்தில் ஜெயலலிதா மீது நட்பாகத்தான் இருந்தார் சாமி. ஜெயலலிதாவும் கூட தி.மு.க.வுக்கு எதிராக சாமியைத்தான் பயன்படுத்தி வந்தார்.
ஆனால் பின்னர் திடீரென எதிரியாகி விட்டனர். இருவரும். டான்சி ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மூலம் அனுமதி வாங்கிய சாமியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். அதுதான் சாமிக்கும் பெரிய ஹைலைட்டான அரசியல் வெற்றியாகும்.
ஆனால், அதன் பின்னர் அதே வேகத்தில் பல்டி அடித்து மீண்டும் ஜெயலலிதாவுடன் நட்பானார் சாமி. அதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் தூதராகவும் மாறினார் சாமி. வாஜ்பாய் அரசில் ஜெயலலிதா இணைய சாமிதான் முக்கிய காரணமும் கூட.
தனக்கு எதிராக செயற்பட்டவர் என்பதையும் பாராமல், சாமியின் பிறந்த நாளன்று அவரது கட்சி அலுவலகத்துக்கே நேரில் போய் வாழ்த்தியவர் ஜெயலலிதா. சாமிக்கு ‘போர்ட் ஐகான்’ காரைப் பரிசாகவும் கொடுத்தார்.
அதேபோல பாராளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சாமியை நிறுத்தி வெற்றி பெறவும் வைத்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் போயஸ் தோட்டத்தின் ராஜகுரு என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தவர் சாமி. உண்மையில் சாமியை அரசியல் ரீதியாக வளர்த்து விட்டவர் ஜெயலலிதா என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் வாஜ்பாய் ஆட்சியை மிகக் குறுகிய காலத்தில் கவிழ்த்த ஜெயலலிதா மீது கோபம் கொண்டார் சாமி. மீண்டும் இருவரும் எலியும் புலியுமாக மாறினர். ஜெயலலிதாவுக்கு எதிராக அதன் பின்னர் தீவிரமாக செயற்பட்ட சாமியை, அ.தி.மு.க.வினர் போகும் இடமெல்லாம் தூற்றி தாக்க முற்பட்டனர்.
இந்த வழக்கு குறித்து தீர்ப்புக்கு முன்பு ஏ.என்.ஐக்கு சாமி அளித்த பேட்டியில்,
இந்த வழக்கிலிருந்து நிச்சயம் ஜெயலலிதா தப்ப முடியாது. காரணம், இதில் வலுவான ஆதாரங்கள் உள்ளன.
முதல்வர் ஜெயலலிதா தவறு செய்திருப்பது உண்மை. இந்த வழக்கில் எல்லாமே தெளிவாக உள்ளன. எதையும் மூடி மறைக்க முடியாது. அவரால் இனியும் யாரையும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார் . மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த சாமி காரணமாகி விட்டார்.
ஜெயலலிதாவுக்கு வழங்கிய தண்டனை
தமிழகத்துக்கு ஏற்பட்ட தலைக்குனிவு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருக்கும்போதே தண்டிக்கப்பட்டதால் தமிழகத்திற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“தமிழகத்தின் முதலமைச்சராக, ஜெயலலிதா பதவியில் இருக்கும்போதே தண்டிக்கப்பட்டதால், தமிழத்திற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. அதோடு மிகப் பெரிய பதவியில் இருந்தாலும், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும், தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்’ என்ற இயற்கையின் நியதியை யாராலும் மாற்ற முடியாது. இதற்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல.
சுமார் 18 வருடங்கள் நடைபெற்ற இந்த வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்து ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
1991 – 1996 ஆகிய ஐந்து ஆண்டுகளுக்கு 60 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது எப்படி என்பதுதான் வழக்கு. வழக்கு தொடரப்பட்ட 1997 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை இந்த ஒரு வழக்கிற்காக மட்டும் மக்கள் வரிப்பணம் சுமார் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி பல்வேறு காரணங்களை விதவிதமாக சொல்லி இந்த வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி தடுத்து நிறுத்திடப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. இந்த வழக்கிற்காக இந்தியாவின் பிரபலமான மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் ஆஜரானார்கள். ஆனால், இதை எல்லாம் முறியடித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தற்போது தரப்பட்டுள்ள இந்த தீர்ப்பு தவறு செய்பவர்களுக்கு பாடமாக இருக்கும். ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கிறது என ஆட்டம்போடும் ஆட்சியாளர்கள் இதை பார்த்த பிறகாவது திருந்திட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்காக ஆட்சி செய்யவேண்டும் மாறாக இலஞ்சம், ஊழல், முறைகேடு, அராஜகம் என செய்து ஆட்சி நடத்தினால் தண்டனை நிச்சயம் என்பதை இத்தீர்ப்பு நிரூபித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதியின் வீடு மீது தாக்குதல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமையை அடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோபாலபுரத்தி;ல் உள்ள கருணாநிதியின் வீட்டின் மீது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் கல்லெறித்தாக்குதலை நடத்தினர்.
இதன்காரணமாக கருணாநிதியுடைய வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கின. இதன்போது திராவிட முன்னேற்றக்கழகத்தினருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் இடையில் மோதலும் இடம்பெற்றது.
இதில் திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து கருணாநிதியின் வீட்டுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டன.
இதன்போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பலத்த வாக்குவாதமும் ஏற்பட்டது.
JayaVerdict