தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 100 கோடி ரூபா அபராதம்! 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது!



ஜெயலலிதா குற்றவாளி: பதவி விலக்குமாறு அறிக்கைகள்! பற்றி எரிகிறது தமிழகம்! பதற்ற நிலை தொடர்கிறது!
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 10:51.32 AM GMT ]
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.
ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அதிமுகவினர் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
சிறிய அளவில் உள்ள காவலர்களும் அதிமுகவினரின் இந்தச் செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோவையில் அவினாசி சாலையில் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு சில கார்களின் கண்ணாடியை உடைத்து வாகனங்களை சேதப்படுத்தியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
மதுரையில் பதற்றம் கூடுதலாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுகவினர் கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டு வன்முறை செய்து வருகின்றனர்.
மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள கடைகள் மூடப்பட்டுவிட்டன. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு வருகின்றன. தெற்கு மாவட்டங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் சென்னைக்கு வரும் வோல்வோ பேருந்துகளை ரத்து செய்துள்ளது.
மேலும் சில தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதோடு சாலையில் பேரூந்துகள் எரிக்கப்பட்டு கடைகளும் எரிக்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா பதவி விலக வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
ஜெயலலிதா பதவி விலக வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அவர் குற்றவாளியென்று தீர்ப்பளித்துள்ளது. 
இத்தீர்ப்பின் அடிப்படையிலும், சட்டப்படியும் செல்வி ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக வேண்டும். பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை, லஞ்சம் ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பு ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுசேர்க்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருதுகிறது.
இத்தீர்ப்பையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள், பொதுச்சொத்துக்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாநில காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதியை பாதுகாக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 
தொடர்புடைய செய்தி- ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பு! தண்டனை இன்னமும் அறிவிக்கப்படவில்லை!
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVix3.html
சுப்பிரமணியம் சாமி போட்ட முடிச்சு.. சிக்கிக் கொண்ட ஜெயலலிதா...!
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 11:08.59 AM GMT ]
கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக கருதலாம். அவரது இந்த பெரும் தோல்விக்கு முக்கியக் காரணம், சுப்பிரமணியம் சாமிதான். காரணம்,
இவர்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவி்ப்பு வழக்கை முதலில் தொடர்ந்தவர் ஆவார்.
இந்திய அரசியலில் மிகவும் வித்தியாசமான, வில்லங்கமான ஒரு அரசியல்வாதி சாமி. இவர் ஆக்கப்பூர்வமான செயல்களை விட பலரைப் பாதிக்கும் வகையிலான அரசியலைத்தான் இவர் பெரும்பாலும் நடத்தி வந்திருக்கிறார்.
அத்தி பூத்தாற் போல இவரால் சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன - முல்லைப் பெரியாறு அணை வழக்கை உதாரணமாகச் சொல்லலாம்.
நிச்சயம் சாமியை யாருமே குறைத்து எடை போட முடியாது. காரணம், இவர் போட்ட வழக்குளில் பெரும்பாலானவற்றில் இவருக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான் யார் மீதாவது இவர் வழக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் பீதியடைந்து போகிறார்கள்.
யாருக்கு எப்படியோ ஆனால் ஜெயலிதாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியவர் சாமிதான்.
கிட்டத்தட்ட தமிழக அரசியல்வாதிகள் அத்தனை பேருக்குமே இவர் சிம்ம சொப்பனாக திகழ்ந்து வருகிறார். திமுக தொடங்கி அதிமுக வரை யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 1996ம் ஆண்டு திமுக அரசுதான் போட்டது என்றாலும் கூட அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் இந்த சாமிதான்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவரது சொத்து குவிப்பு தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் கோப்புகளாக்கி அப்போதைய ஆளுநரிடம் வழங்கி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரியிருந்தார் சாமி.
உண்மையில் சாமி சேர்த்துக் கொடுத்த அத்தனை ஆதாரங்களுமே வலுவானவை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் பின்னர் வந்த திமுக அரசு வழக்கைப் போட்டது. அந்த வகையில் சாமிக்குத்தான் திமுக நன்றி சொல்ல வேண்டும். அவர் சேகரித்து வைத்திருந்த அத்தனை ஆதாரங்களுமே ஜெயலலிதா வழக்கை மேலும் சிக்கலாக்கி விட்டது என்பதே உண்மை.
உண்மையில் ஜெயலலிதா மீதான பிற வழக்குகளை திமுக அரசுதான் போட்டது. அதை சாமி போடவில்லை. எனவே அந்த வழக்குகளில் ஜெயலலிதா எளிதாக வந்து விட்டார். ஆனால் சாமி போட்ட முடிச்சை அவிழ்க்கத்தான் அவரால் முடியாமல் போய் விட்டது.
ஒரு காலத்தில் ஜெயலலிதா மீது நட்பாகத்தான் இருந்தார் சாமி. ஜெயலலிதாவும் கூட திமுகவுக்கு எதிராக சாமியைத்தான் பயன்படுத்தி வந்தார்.
ஆனால் பின்னர் திடீரென எதிரியாகி விட்டனர் இருவரும். டான்சி ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மூலம் அனுமதி வாங்கிய சாமியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். அதுதான் சாமிக்கும் பெரிய ஹைலைட்டான அரசியல் வெற்றியாகும்.
ஆனால் அதன் பின்னர் அதே வேகத்தில் பல்டி அடித்து மீண்டும் ஜெயலலிதாவுடன் நட்பானார் சாமி. அதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் தூதராகவும் மாறினார் சாமி. வாஜ்பாய் அரசில் ஜெயலலிதா இணைய சாமிதான் முக்கியக் காரணமும் கூட.
தனக்கு எதிராக செயல்பட்டவர் என்பதையும் பாராமல், சாமியின் பிறந்த நாளன்று அவரது கட்சி அலுவலகத்துக்கே நேரில் போய் வாழ்த்தியவர் ஜெயலலிதா. சாமிக்கு போர்ட் ஐகான் காரைப் பரிசாகவும் கொடுத்தார்.
அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் சாமியை நிறுத்தி வெற்றி பெறவும் வைத்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் போயஸ் தோட்டத்தின் ராஜகுரு என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தவர் சாமி. உண்மையில் சாமியை அரசியல் ரீதியாக வளர்த்து விட்டவர் ஜெயலலிதா என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் வாஜ்பாய் ஆட்சியை மிகக் குறுகிய காலத்தில் கவிழ்த்த ஜெயலலிதா மீது கோபம் கொண்டார் சாமி. மீண்டும் இருவரும் எலியும் புலியுமாக மாறினர்.
ஜெயலலிதாவுக்கு எதிராக அதன் பின்னர் தீவிரமாக செயல்பட்ட சாமியை, அதிமுகவினர் போகும் இடமெல்லாம் தூற்றி தாக்க முற்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த சாமியை, அதிமுக மகளிர் அணியினர் புடவையைத் தூக்கி கொடுத்த வரவேற்பு அப்போது அந்த இடத்தில் இருந்தவர்களால் இன்றைக்கும் மறக்க முடியாது.
இந்த வழக்கு குறித்து தீர்ப்புக்கு முன்பு ஏஎன்ஐக்கு சாமி அளித்த பேட்டியில்,
இந்த வழக்கிலிருந்து நிச்சயம் ஜெயலலிதா தப்ப முடியாது. காரணம், இதில் வலுவான ஆதாரங்கள் உள்ளன.
முதல்வர் ஜெயலலிதா தவறு செய்திருப்பது உண்மை. இந்த வழக்கில் எல்லாமே தெளிவாக உள்ளன. எதையும் மூடி மறைக்க முடியாது. அவரால் இனியும் யாரையும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார் சாமி.
மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த சாமி காரணமாகி விட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVix4.html
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 100 கோடி ரூபா அபராதம்! 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது!
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 11:29.19 AM GMT ]
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக இந்திய தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மற்றைய குற்றவாளிகளான ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த அபராதம்  குறித்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படவில்லை எனவும் குறித்த தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என, இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா இந்த தீர்ப்பை வாசித்தார்.
10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது!
நான்காண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன் படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார்.
இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம்.
எனவே ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதலையான பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஒரு சட்டசபை அல்லது மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். எனவே 6 ஆண்டு போட்டியிட முடியாது என்றால் இரு பொதுத் தேர்தல்களில் குற்றவாளியால் போட்டியிட முடியாது என்றே அர்த்தம்.
எனவே ஜெயலலிதாவின் தண்டனை காலத்தை தவிர்த்து இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தாலும் கூட இன்னும் 2 சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVix5.html

Geen opmerkingen:

Een reactie posten