காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு 2ம் அமர்வுகள் பூநகரி பகுதியில் இன்று நடைபெற்றிருந்த நிலையில் அதிகளவான முறைப்பாடுகள் புலிகளுக்கு எதிரானவையாக அமைந்திருந்ததுடன், புலிகளுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு மக்கள் படையினரால் வற்புறுத்தப்பட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவமும் இன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி ஆணைக்குழு அமர்வுகள் இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலர் அலுவலகத்தில் காலை 9மணி தொடக்கம் நடைபெற்றிருந்தது. இதன்போது பெருமளவு படையினர் சீருடை மற்றும் ஆயுதங்களுடன் பிரதேச செயலக வளாகத்திற்குள் வந்து நின்றனர்.
அதேபோன்று புலனாய்வாளர்களும் உள்ளே வந்து மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்தனர்.
இந்நிலையில் விடயம் தொடர்பாக ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து ஆணைக்குழுவின் தலைவர் மகஸ்வெல் பி பரணகம படையினர் மற்றும் புலனாய்வாளர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கட்டாய பணிப்பினை விடுத்தார்.
இதனையடுத்து படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் பூநகரி பகுதியிலிருந்து இன்றைய தினம் காலை பெருமளவு மக்கள், வலிந்து படையினரின் வாகனங்களில் ஏற்றப்பட்டு மேற்படி ஆணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்குவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆனால் அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் பலர் முன்னர் சாட்சியமளித்தவர்களாவர். இதனால் இன்றைய தினம் அவர்கள் சாட்சியம் வழங்க முடியாது. என ஆணைக்குழு திருப்பியனுப்பிய நிலையில் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு பேருந்துக்கு, பணம் கூட இல்லாத நிலையில் மக்கள் நடுவீதியில் நின்ற சம்பவமும் இன்றைய தினம் நடைபெற்றது.
மேலும் ஆணைக்குழுவின் அமர்வில் அநாவசியமான படையினரின் பிரசன்னத்தினால் இன்றைய அமர்வில் சிறிது நேரம் சலசலப்பு உண்டானது. எனினும் தொடர்ந்து சாட்சியங்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 47 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் மணல் பாங்கான இடத்தில் குழி வெட்டி அதன்மேல் தறப்பாள் போட்டுக் கொண்டு தாம் இருந்த சமயம் தங்கள் தறப்பாளின் மேல் ஷெல் வீசப்பட்டமை, அதில் சிறுவர்கள் பெரியவர்கள் என உயிரிழந்தமை, மற்றும் கடுமையான ஷெல் வீச்சு மற்றும், துப்பாக்கிச் சூட்டினால் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழையும் போது தங்கள் உறவினர்களை கைவிட்டமை போன்ற பல துயர்மிகுந்த சாட்சியங்கள் வழங்கப்பட்டன.
மேலும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்ததன் பின்னர் ஓமந்தை பகுதியில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல்போனவர்கள் மற்றும் போர் நடைபெற்ற இடங்களில் படையினரின் திடீர் சுற்றிவளைப்புக்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாகவும் அதிகளவான முறைப்பாடுகள் இன்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgq3.html
Geen opmerkingen:
Een reactie posten